
திரும்பி வரமுடியாத பயணமாகக் கருதப்படுகின்ற செவ்வாய்க் கிரகத்தை நோக்கிப் பயணிப்பதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பதினேழே வயதான அலிஸா கார்ஸன் என்ற பெண் தயாராகி வருகிறார். விண்வெளிப் பயணங்களுக்கு 18 வயதுக்குக் கீழுள்ளவர்களை நாசா ஆய்வகம் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அலிஸாவின் ஆர்வமும் திறமையும் அவரைத் தேர்வு செய்வதற்குத் தூண்டியிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், அவர் செய்வாய் நோக்கிப் பயணிக்கும்போது அவருக்கு வயத 33 ஆகியிருக்கும் என்பதையும் நாசா சுட்டிக்காட்டுகிறது.
பூமியின் அழிவு நெருங்கி வருகிறது என்பதே இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானிகளின் முக்கிய எச்சரிக்கையாக இருக்கிறது. மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கும் இதையே வலியுறுத்திக் கொண்டிருந்தார். பூமியின் மீது மனிதர்களால் பல நூற்றாண்டுகளாக ஏற்படுத்தப்பட்டுவரும் அழிவுகள், மனித இனத்தைப் பூண்டோடு இல்லாமல் செய்துவிடும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, மாற்று வாழிடம் நோக்கிய ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
“எங்கே போகலாம்? எது மனிதன் வாழ்வதற்கு ஏற்ற கிரகமாக இருக்கும்? என்ற தேடல் பல வருடங்களாகவே நடந்து வருகிறது. அவ்வாறான தேடலில் இதுவரையில் செவ்வாய் மட்டுமே மனிதர் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அவ்வாறு மனிதர்கள் அங்கே வாழமுடியுமா, என்பதை மனிதர்களையே அனுப்பி பரிசோதிப்பதற்கான ஆயத்தங்கள் மிகத் துரிதமாக நடைபெற்றும் வருகின்றன. 2025 - 2027 காலப்பகுதிக்குள் தாம் அங்கு மனிதர்களை அனுப்பத் தயராகிறோம் என்று “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனத் தலைவர் எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார். 2033 இல் மனிதர்களை அனுப்ப “நாஸா” தயராகி வருகிறது.
எனவே, செவ்வாய்க்கு மனிதர்கள் அனுப்பப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், அதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராய பல ஆளற்ற விண்ணோடங்கள் அங்கே அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றில் ஒரு முயற்சிகளே தேவையான இலக்கினை அடைந்துள்ளன. அனுப்பப்படும் விண்ணோடங்களின் வேக ஆற்றலைப் பொறுத்து 200 தொடக்கம் 300 நாட்கள் வரை எடுக்கக்கூடிய செவ்வாய்க்கான பயணத்தினை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் அது வரும் தருணத்தைக் கணக்கிட்டுத் திட்டமிடுகிறார்கள்.
இவ்வளவு நீண்ட தூரத்துக்கான பயணமென்பதால் திரும்பி வருவதற்குரிய எரிபொருளை அவர்களால் கொண்டு செல்ல இயலாது. எனவே, இப்போது பூமியில் இருக்கும் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி “ஒன் வே” பயணத்தை மட்டுமே செவ்வாய்க்கு மேற்கொள்ளமுடியும். அப்படியான “திரும்பி வராத” பயணத்துக்குத்தான் அலிஸாவும் தயாராகிறார்.

“சிறிய வயதில் ஆசைப்படும் விஷயங்கள் எல்லாருக்கும் நிறைவேறுவதில்லை. அது அலிஸாவுக்கு சாத்தியமாகப் போகிறது. 3 வயது முதலே செய்வாய்க் கிரகம் தொடர்பான கார்டுன்களைப் பார்த்து, அங்கெ செல்லவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தாள். அந்த ஆசை, அவள் வளர வளர அவளுக்குள் வளர்ந்துகொண்டே வந்தது. இன்று அது நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது” என்கிறார் அலிஸாவின் தந்தையான பெர்ட் கார்ஸன்.
“7 வயதில் என் அப்பாவுடன் அலபாமா விண்வெளிப் பயிற்சி முகாமுக்குப் போயிருக்கிறேன். 12 வயதில் நாசாவின் பல பயிற்சி முகாம்களில் பங்கேற்றிருக்கிறேன். இந்தப் பயிற்சிகள் அலபாமா, கனடா, துருக்கி ஆகிய நாடுகளில் நடைபெற்றன. இந்த மூன்று பயிற்சிகளையும் முடித்த முதல் ஆள் நான்தான். தொடர்ச்சியாக பல விண்வெளி தொடர்பான நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகளில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்ததால், செவ்வாய்க்குச் செல்லும் திட்டத்தின் சிறப்புப் பயிற்சி எனக்கு இலகுவாகவே இருந்தது. பயணிப்பதற்கான பாஸ்போர்ட்டும் கிடைத்துவிட்டது. ஆனால், எனக்கு இன்னமும் 18 வயதாகவில்லை என்பதால், எனக்கு இன்னமும் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கப்படவில்லை. என்னுடைய பெயரையும் இப்போதைக்கு “ப்ளுபெர்ரி” என்றுதான் நாசாவில் வைத்திருக்கிறார்கள்” என்கிறார் அலிஸா.

“செவ்வாய்க்கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து உறுதிப் படுத்துவதுதான் எனது பணி. செவ்வாய்க்குச் சென்றால் திரும்பி வர இயலாது. திருமணம் முடிக்கவோ குழந்தை பெற்றுக்கொள்ளவோ இயலாது. குடும்பத்தையோ நண்பர்களையோ பூமியின் மண்ணையோ மறுபடியும் பார்க்க இயலாது. ஆனால், இதையெல்லாம் நன்றாக உணர்ந்துதான் இந்தப் பயணத்துக்குத் தயாராகியிருக்கிறேன்” என்றும் சொல்கிறார்.
“செவ்வாய்க்குப் பயணித்துவிட்டால், மறுபடி அவரைப் பார்க்க முடியாது என்பது எமக்கு வருத்தம்தான். ஆனால், எங்கள் பாசம் அவரது இலட்சியத்துக்குத் தடையாக இருக்கக்கூடாது. எங்களுடன் அவர் இருக்கப்போகும் பதினைந்து வருடங்களையும் நாங்கள் அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வோம்” என்று கண்களில் நீர் மின்னப் பேசுகிறார் தந்தை பெர்ட் கார்ஸன்.
இலட்சியப் பெண் அலிஸா கார்ஸன்!

Leave a comment
Upload