
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் மொழி பெயர்ப்பு தவறு காரணமாக 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை சென்ற வாரம் அதிரடி உத்தரவை போட்டதுடன் இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் புதிய தர வரிசைப் பட்டியல் தயாரித்து கலந்தாய்வு நடத்த வேண்டும். அதுவரை தற்போது நடைபெறும் கலந்தாய்வை நிறுத்தி வைக்கவும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் ராஜ்ய சபா எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநலன் மனு மீதுதான் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
தி.நகர் மார்க்கிஸ்ட் கட்சி அலுவலகத்தில் டி.கே .ரங்கராஜனை நாம் சந்திக்க சென்றபோது, அவருக்கு இடைவிடாது மாணவர்கள் செல்போன் மூலம் நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
“இந்த நீட் தேர்வை எல்லோரும் எதிர்ப்பதற்கு காரணமே, தமிழ்வழி கல்வி படித்த மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு அகில இந்திய அளவில் உள்ள மாணவர்களுடன் போட்டி போட வேண்டி இருந்தது. நீட் தேர்வு நடத்தும் சி.பி.எஸ்.இ தனது பாட திட்டத்தை அடிப்படையாக வைத்துதான் வினாத்தாள் தயாரித்தது.
இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களிலிருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டது. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண்கள். இதில் இன்னொரு வருத்தம், மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது நீட் தேர்வின் அடிப்படையில் தான் இருக்கும். ப்ளஸ்2 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளபடாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீட்தேர்வுக்கான தழிழ் வினாத்தாளில் 49 வினாக்களுக்கு தவறான மொழிபெயர்ப்பு. உதாரணம் ஆங்கிலத்தில் சிறுத்தை சிடா என்று குறிப்பிடுவார்கள். சி.பி.எஸ்.இ, இதை சீதை என்று மொழிபெயர்த்து இருந்தது. இதை பல கல்வியாளர்கள் சுட்டிகாட்டி சி.பி.எஸ்.இ. தமிழ்வழி மாணவர்களுக்கு பிழைதிருத்தப்பட்ட வினாத்தாள் வழங்கி மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் அல்லது அந்த 49 கேள்விகளுக்கும் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் சி.பி.எஸ்.இ. இதை ஒரு விஷயமாகவே பொருட்படுத்தவில்லை. அதன் பிறகு என் கட்சி என்னை பொதுநல வழக்கு போட சொன்னது.
சி.பி.எஸ்.இ இந்தப்பிரச்சனையை மாணவர்களின் கல்வி சார்ந்த பிரச்சனை என்றோ அவர்கள் எதிர்காலம் சம்பந்தபட்டது என்றோ நினைக்காமல் தனது முடிவே இறுதியானது என்ற அளவில் செயல்பட்டது. நீட் தேர்வு மைய கெடுபிடி, வெளிமாநிலங்களில் தமிழக தேர்வாளர்களை எழுத வைத்து அலைகழிப்பு, இரண்டு பேர் உயிரிழப்பு. ப்ளஸ் டூவில் ஆயிரத்துநூற்றுக்கும் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண் பெறவில்லை என்ற காரணத்தினால் மருத்துவப் படிப்புக்கு செல்ல முடியாமல் போனதால், அனிதா, புஷ்பா என்ற இரண்டு மாணவர்கள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டனர். அரசியல் கட்சிகள் நீட் தேர்வை எதிர்த்தாலும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தியே தீருவது என்ற பிடிவாதத்துடன் இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து ஒருலட்சத்தி ஏழாயிரத்தி இருநூற்றிஎண்பத்தி எட்டு (107288) எழுதினார்கள். இதில் தமிழ் வழி கல்விபயின்ற 24000 பேர் என்று தங்கள் குழந்தைகளை தமிழ்நாட்டில் நீட்தேர்வு எழுத வைத்தனர்.
தேர்வு எழுதி வெளியே வந்த தமிழ்வழி மாணவர்கள் இந்த மொழி பெயர்ப்பு குழறுபடியை சுட்டிக் காட்டினார்கள். அப்போதும் சி.பி.எஸ்.இ. கண்டு கொள்ளவில்லை. சி.பி.எஸ்.இ எதேச்சை சர்வாதிகாரம் மற்றும் ஏனோதானோ என்ற அதன் நடவடிக்கைதான் மார்க்சிஸ்ட் கட்சியை பொதுநல வழக்கு போட வைத்தது. நீட் தேர்வு முடிந்ததும் விடை சுருக்கத்தை வெளியிடுமாறு நீதிமன்றம் கேட்டபோது, அதற்கும் சி.பி.எஸ்.இ. மறுத்துவிட்டது. இதேபோல் நீதிமன்றத்தில் விசாரணையின்போது தமிழக மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் இப்போதைக்கு வெளியிடபடாது என்று உறுதி அளித்த நிலையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இப்படி எவ்வளவு இடைஞ்சல் செய்ய வேண்டுமோ அவ்வளவு இடைஞ்சல் செய்து வருகிறது சி.பி.எஸ்.இ. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சி.பி.எஸ்.இ. அமைப்பின் சில செயல்பாடுகளில் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
சமவாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு ஒரே மாதிரியான கேள்வி என்ற பெயரில் சிவில் சர்விஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு தயாரிக்கப்படும் வினாத்தாள் போல் நீட் தேர்வு வினாத்தாள் தயாரிப்பது சரியல்ல. அத்துடன் தனித்தேர்வாளர்களும் அனுமதிக்க வேண்டும் என்று சொன்னார்கள். வினாத்தாள் மொழிபெயர்ப்பில் தவறு இல்லை என்ற சி.பி.எஸ்.இ வாதத்தை நிராகரித்து இந்த தீர்ப்பை தந்தனர்.
இப்போது கூட சி.பி.எஸ்.இ. தனது வரட்டு பிடிவாதத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பார்க்கிறது. இதனால் என் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த தீர்ப்பும் வழங்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுசெய்துள்ளேன், என்ற டி.கே ரங்கராஜன், இன்னொரு விஷயத்தையும் சொன்னார். ‘இது இருபத்தினாலாயிரம் தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் சம்பந்தப்பட்டது. இந்தப் பிரச்சனையை தமிழக அரசு மத்திய அரசிடமோ, அல்லது நீதிமன்றத்திலோ எடுத்துச் சென்று தமிழ்வழி மாணவர்களுக்கு நல்லது செய்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் எதுவும் செய்யவில்லை, இப்போதும் அவர்கள் மௌனம் காப்பது எனக்கு ஆச்சர்யமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது’ என்றார்.

Leave a comment
Upload