தொடர்கள்
பொது
தாய்லாந்து குகையில் மாணவர்களை காப்பாற்றியது எது????? - ராம்

உலகம் முழுவதும் தாய்லாந்து குகைக் கதைதான் இந்த வாரச் செய்தி...

துக்கத்தின் தாக்கம் தெரிய அருகாமை வேண்டும் என்று சொல்வார் சுஜாதா.

ஆனால் தாய்லாந்து குகையில் சிக்கிய மாணவர்களை உயிருடன் கொண்டுவா என்று உலகில் உள்ள அத்தனை மதத்தினரும், வேண்டாத தெய்வங்கள் இல்லை. செய்யாத பிரார்த்தனை இல்லை.

அவர்கள் தொலைந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாள் செய்தித் தாளையும் திகிலுடனே திறக்க வேண்டியிருந்தது. அதிலும் நாட்கள் செல்ல செல்ல நம்பிக்கைகள் குறையத் துவங்கின.

அந்த தாய்லாந்து குகையில் மட்டும் மீட்புக்குழுவினரும், சிறுவர்களின் பெற்றோருமாக ஒரு ஆயிரம் பேருக்கு மேல் நம்பிக்கையை தளர விடவேயில்லை.

20180613232721236.jpg

வைல்ட் போர்ஸ் கால்பந்துக் குழு.

தாய்லாந்தில் உயிரைப் பணயம் வைத்து குகையில் மீட்புப் பணிகள் நடந்தாலும், அது வெற்றி பெறுவதற்கு காரணம் என்று வாட்சப்பில் உலா வந்த தகவல்கள் உங்களுக்கும் வந்திருக்கும் சந்தேகமில்லை.

சிறுவர்களின் அடையாளம் தெரியப்படுத்தப் படவில்லை. அவர்கள் குடும்பங்களுக்கு காமிராவுடன் சென்று அழுகையை சோகத்தை யாரும் ஒளிபரப்பவில்லை. பெரிய முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் அரசு பெருமையடித்துக் கொள்ளவில்லை. இதற்குக் காரணம் ஆளும் அரசின் மெத்தனப் போக்கு என்று எதிர்கட்சிகள் எவையும் குற்றம் சாட்டவில்லை.

ஒருவேளை நம்ம நாட்டில் நடந்திருந்தால், என்னென்ன நடந்திருக்கும் என்றும் அந்த வாட்சப் செய்தி சொல்கிறது. மீடியா துரத்தி துரத்தி சொந்த பந்தங்களை பேட்டி எடுத்திருக்கும், தொலைக்காட்சி விவாதங்களில் கட்சிகள் யார் மீது பழி சுமத்தலாம் என்று பாய்ந்திருக்கும், மாட்டிக் கொண்ட மாணவர்களின் சாதி என்ன என்ற விவாதமும் வந்திருக்கலாம், அந்த மாணவர்களை அழைத்துச் சென்ற பயிற்சியாளரை போட்டு வறுத்து எடுத்திருப்பார்கள்… இப்படி போகிறது அந்த வாட்சப் செய்தி.

பயிற்சியாளர் என்றதும் இந்த வாரத்தில் கோவை கல்லூரி ஒன்றில் 'பேரிடர் மேலாண்மை சொல்லித் தருகிறேன்' என்று ஒரு மாணவியின் உயிர் போன சம்பவம் நம் மனதைக் கொல்லும் வேளையில், தாய்லாந்து கால்பந்து பயிற்சியாளர் இந்தச் சிறுவர்களுடன் குகைக்குள் சென்றது ஆறுதலான விஷயம்.

வைல்ட் போர்ஸ் என்ற தாய்லாந்து கால்பந்து பயிற்சியாளரின் பெயர் எக்கப்போல் சந்தாவாங். சுருக்கமாக ஈ.கே.

25 வயதான ஈ.கே. இல்லையெனில் இந்த சிறுவர்களின் கதி என்னவாகியிருக்கும் என்றே தெரியாது என்கின்றனர்.

20180613233055233.jpg

பயிற்சியாளர் எக்கப்போல் சந்தாவாங்

9 நாட்களாக சோறு தண்ணியில்லாமல் குகைக்குள் சிக்கிக் கொண்ட மாணவர்களை காப்பாற்றியது எது ??? அல்லது யார்?? என்னைக் கேட்டால் இறை என்பேன்.

இன்னொரு காரணம் ஈ.கே. என்ற புத்த மத முன்னாள் சாமியார் என்றும் சொல்லலாம். இந்த உலகில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. அது போலத் தான் ஈ.கே.வின் வாழ்க்கையும். இந்த குகை சம்பவமும்.

ஈ.கே.வின் சொந்தக்கதை சோகமானது.

தனது பத்தாவது வயதில் அவரது தாய்லாந்து கிராமத்தில் வந்த வியாதியில் தன் சகோதரன், தாய், தந்தையை நோய்க்கு இரையாக கொடுத்து விட்டு மரணத்திலிருந்து தப்பித்து அனாதையாகிறார் ஈ.கே.

இரண்டு வருடங்கள் அவரைப் பார்த்துக் கொண்ட தூரத்து உறவினர்கள், அவரை புத்த மத மடத்தில் சாமியாராக சேர்த்து விடுகின்றனர். அங்கு புத்தமத குருவாக பயிற்சி எடுக்கிறார் ஈ.கே.

பத்து வருடங்கள் பயிற்சி எடுத்தவர், தன் பாட்டி உடல் நலமில்லாமல் போகவே மடத்திலிருந்து வெளியே வருகிறார். மேய் சாய் என்ற தாய்லாந்து கிராமத்தில் ஒரு பள்ளியில் அப்போது தான் கால்பந்தாட்ட அணி உருவாகிறது. சியாங் ராய் என்ற பகுதியில் இருக்கும் இந்தப் பள்ளியில் பயிற்சியாளராகிறார் ஈ.கே.

பள்ளி மாணவர்கள் பலரும் ஏழ்மைப் பட்டவர்கள். ஈ.கே. அவர்களுக்கு கடவுள் போல. சிறுவர்களை மிகவும் நேசிக்கிறார். பயிற்சி கொடுக்கிறார். அவ்வப்போது மாணவர்களுக்கு உடை, ஷூ வாங்கிக் கொடுத்து, அது மட்டுமல்ல ஸ்பான்சர்களைப் பிடித்து மாணவர்களுக்கு உற்சாகமூட்டுகிறார், வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கிறார். பயிற்சி களத்திற்கும் வீட்டுக்கும் அவர்களை கொண்டு விடுகிறார்.

சுருக்கமாக தன்னைவிட தன் மாணவர்களை நேசிக்கிறார் ஈ.கே. புகை, குடி என்ற எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. தன் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.

இதெல்லாம் சரி, 9 நாட்களாக அந்த குகைக்குள், சிறுவர்களை காப்பாற்றியது எது???

தியானம்.

ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் நாயகனிடம் க்விஸ் மாஸ்டர் கேள்வி கேட்கும் போது ஃபிளாஷ் பேக்கில் போகும் சிறுவன் தனது சின்ன வயது சம்பவங்களை சம்பந்தப்படுத்தியே விடை வருவதாக காட்சியமைப்பு இருக்கும்.

ஈ.கே. விஷயத்தில் அவர் தனது பத்து வருட புத்த மத மடத்தில் எடுத்த பயிற்சி அத்தனை சிறுவர்களையும் காப்பாற்றி இருக்கிறது.

சிறுவர்கள் பதட்டமடையாமல், திகிலடையாமல், சிதறாமல் இருக்க தியானத்தின் மூலமே அவர்களை அமைதிப் படுத்தியிருக்கிறார். ஈ.கே.

இன்னும் சொல்லப் போனால் ஒன்பதாவது நாளின் முடிவில் குகைக்குள் மீட்புப் பணியினர் சென்ற போது தியானம் செய்து கொண்டு அமர்ந்திருந்தார்களாம் சிறுவர்கள்.

20180613235126741.png

நினைத்துப் பார்க்கவே சில்லிடுகிறது. இருட்டில் நாள் நேரம் செல்வது தெரியாமல் பசியோடு, அங்கிருக்கும் கலங்கிய நீரை மட்டுமே பருகிக் கொண்டு, எந்த நம்பிக்கையோடு அமர்ந்திருந்தார்கள் சிறுவர்கள்?!

குகைக்கு உள்ளே சென்றதென்னவோ கொஞ்சம் முட்டாள்தனம் தான் என்றாலும், தன்னை நம்பி வந்த சிறுவர்களை காப்பாற்றிய ஈ.கே. புத்தருக்கு இணையாக இப்போது பிரபலமாகி விட்டார். ஒருவேளை இது தான் அவருக்கு விதிக்கப்பட்டது என்று எண்ணத் தோன்றுகிறது.

முதல் மீட்புப் பணி வீரர்களிடையே ஒரு சீட்டு எழுதி அனுப்பினார் ஈ.கே. "இந்த சிறுவர்களை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன். உலகில் உள்ள உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. என்னை மன்னித்து விடுங்கள்" என்று எழுதிய அந்த துண்டுச்சீட்டு தாய்லாந்தை நெகிழச் செய்துவிட்டது.

'ஈ.கே. அப்படித்தான். அவனுக்கு தன்னை விட அந்த சிறுவர்கள் மேல் தான் அக்கறை அதிகம்' என்கிறார் சீனியர் பயிற்சியாளர். ஈ.கே. இல்லையென்றால் அந்த சிறுவர்களின் கதி என்னவாகியிருக்கும் என்று தெரியவில்லை என்றும் சொல்கிறார்.

சிறுவர்களின் பெற்றோர்கள் கூட குகைக்குள் கொண்டு சென்று விட்டாரே என்று ஈ.கே மேல் கோபப்படவில்லை. மாறாக அன்பு மழை பொழிகின்றனர்.

இந்த ஊரில் பலரும் தாய்லாந்து குடிமக்கள் இல்லையாம். ஏன் ஈ.கே-வே தாய்லாந்து குடிமகன் என்ற அங்கீகாரம் இல்லாதவராம். இவர்கள் அனைவருக்கும் தாய்லாந்து குடியுரிமை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் இப்போது பலமாகவே குரல் கொடுக்க துவங்கியிருக்கின்றனர்.

20180613233431164.jpg

குகையின் வரைபடம்.

2018061400005049.jpg

ஒவ்வொரு சிறுவனையும் வெளியே கூட்டி வருவது ஏதோ கையைப் பிடித்து அழைத்து வருவது போல சுலபமல்ல. உயிரைப் பணயம் வைத்து செய்த நிஜ சாகசம். கரணம் தப்பினால் மரணம். முன்னர் ஒரு வீரர் ஆக்சிஜன் சிலிண்டரை (சிறுவனுக்காக) பிடித்துக் கொண்டு போக பின்னே சிறுவன் பின் தொடர அவனுக்குப் பின் இன்னொரு வீரர் பாதுகாப்பாக வர, இது அசல் ஹாலிவுட் ரக உணர்ச்சிப் போராட்டம்.

அறம் படத்தில் வருவது போல் இந்த தாய்லாந்து சம்பவம் சந்தோஷத்தில் முடிந்தாலும், சமன் குணன் என்ற 38 வயது கடற்படை வீரர் இந்த மீட்புப் பணியில் இறந்தது சோகம்.

தாய்லாந்து நாடே, ஏன் உலகமே, அந்த வீரனுக்காக கண்ணீர் விடுகிறது.

20180613233233733.jpg

உயிரைக் கொடுத்த சமன் குணன், சார்ஜண்ட். கடற்படை வீரர்.

அவரது மனைவி, வலீபோன் "யாரிடம் இனி முத்தம் கேட்பேன்?? ஆனாலும், இனி எப்போதும் என்னுடன் இருப்பாய்" என்று சமூக ஊடகத்தில் பதிவு செய்த வாசகம் உலகையே கலங்க வைத்திருக்கிறது.

20180613233336577.jpg

மீட்புப் பணிகள் துவங்கப்பட்ட இரண்டே நாட்களில் சமன் குணன் இறந்து போக அப்போது தான் மீட்புப் பணிக்கே உயிர் வந்தது என்கிறார்கள் நிபுணர்கள். எந்த சிறுவர்களை காக்க சமன் உயிர் துறந்தாரோ அவரது லட்சியம் நிறைவேறும் வரை ஓயப் போவதில்லை என்று வீறு கொண்டு எழுந்தது மீட்புக் குழு.

சிறுவர்களை மீட்பதை சமனின் இறப்புக்கு காணிக்கையாக எண்ணியே தொடர்ந்தனர், மீட்புப் பணிகளை.

சமன் குணனுக்கு இராணுவ மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

கடைசியில் 13 பேரையும், காப்பாற்றி விட்டனர். கடைசியாக குகையிலிருந்து வெளியே வந்தது ஈ.கே. பயிற்சியாளர்.

உலகம் முழுவதும் உற்சாகத்தில் மூழ்கடித்த இந்த ஆனந்த முடிவு, அமெரிக்காவின் டிரம்ப் வரை கொண்டாட வைத்திருக்கிறது.

20180613233931922.jpg

இந்த சிரிப்புக்கும், ஆறுதலுக்கும் மகிழ்ச்சிக்கும்தான் உலகமெங்கும் மீட்புப் பணியினர் தாய்லாந்தில் குவிந்து சிறுவர்களை மீட்டெடுத்தனர். ஆயிரம் பேர்கள் சேர்ந்து காப்பாற்றிய 13 உயிர்கள்.

'சிறுவர்கள் தப்பித்து வெளியே வந்துவிட்டார்கள்' என்று ஆரவாரமாக டிரம்ப் விடுத்தார் டிவீட்.

அமெரிக்க பத்திரிகைகள் என்னவோ, 'தாய்லாந்தில் இந்த 13 சிறுவர்கள் மீட்கப்பட்டதற்கு சந்தோஷம் தெரிவிக்கும் டிரம்ப் அமெரிக்க எல்லைகளில் பெற்றோர்களிடமிருந்து பிரித்து வைத்திருக்கும் சிறுவர் சிறுமிகளையும் நினைத்துப் பார்த்தால், மீட்கப்பட்டால் இன்னும் சந்தோஷம்' என்கின்றன.