
“இந்தியா உன்னால் பெருமைப்படுகிறது. நாங்கள் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க காரணம் தந்துவிட்டாய் மகளே!”
- அமிதாப்பச்சன்
“காலையில் எழுந்ததுமே என்ன ஒரு உன்னதமான செய்தி! பெருமை, அன்பு மற்றும் உத்வேக அலைகளால் தாக்கப்பட்டேன் ஹிமாதாஸ்!”
- ஷாருக்கான்
“நீ செய்தது மிகப்பெரிய சாதனை!’
- அனுஷ்கா சர்மா
“வரலாறு உன் பெயர் சொல்லும்!”
- அக்ஷய் குமார்.
இப்படி பாலிவுட் நட்சத்திரங்களால் டிவிட்டர் பாராட்டு மழையில் நனைந்த இந்திய வீராங்கனையான ஹிமாதாஸ், தற்போது பின்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் 20 வயதுக்கு கீழானோர் தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்த சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியா வென்றிருக்கும் முதன்முதல் தங்கம் என்பதுதான் வரலாற்றுச் சாதனை!
ஹிமாதாஸ் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது பெண். இவரது பெற்றோரின் ஆறு குழந்தைகளில் இவரே கடைக்குட்டி. கடந்த ஏப்ரல் மாதம் 'கோல் கோஸ்ட்டில்' நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இவர் ஆறாவதாக வந்திருந்தார். அப்போது 51.32 விநாடிகளில் இவர் பந்தய தூரத்தை கடந்ததே முதல் இந்தியச் சாதனையாக இருந்தது.
இப்போது பின்லாந்தில் 51.46 விநாடிகளில் பந்தய தூரத்தை இவர் கடந்திருந்தாலும் முதலாவதாக வந்து தங்கம் வென்றது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை ஆகிவிட்டது.
அதிலும் சாதாரண விவசாயக் குடும்பத்தில் ஆறுபேருக்கு நடுவே பிறந்த ஹிமாதாஸ் இந்த உலக சாதனையை நிகழ்த்தியிருப்பது கண்டு இந்தியர்கள் உண்மையிலேயே பூரித்துப் போயிருக்கிறார்கள்.

“இது ஒரு பெருமைக்குரிய தருணம். 'பாக்மில்கா சிங்'கின் ஐந்தாவது நினைவு விழா சமயத்தில் ஹிமாதாஸின் வெற்றி நிகழ்ந்திருப்பது ஒரு அழகிய இணை நிகழ்வு. அவர் இந்தியா என்றாவது ஒரு நாள் உலக தடகளப் போட்டியில் தங்கம் வெல்ல கனவு கண்டார். அவர் கனவினை இப்போது ஹிமா நனவாக்கிவிட்டாள்!” என பிரபல பாலிவுட் இயக்குநரான ஃபரான் அக்தர் தெரிவித்திருக்கிறார்.
வெல்டன் ஹிமாதாஸ்!

Leave a comment
Upload