வலையங்கம்
வலையங்கம் - மேதகு ஆளுநர் தமிழிசை!

2019080615301701.jpeg

தமிழிசை சௌந்தர்ராஜன் திடீர் என்று தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ‘நான் எதிர்பாராதது’ என்ற தமிழிசை, நெற்றியில் லேசான கவலை ரேகைகள் ஓட, முகத்தில் கொஞ்சமான புன்னகை காட்டி வித்தியாசமான முகத் தோற்றத்தில் காட்சி தந்தார். அரசியல் அறிந்த குடும்பத்தை சேர்ந்தவர் ஆயிற்றே? ஒருவர் கவர்னர் பதவிக்கு நியமிக்கப்பட்டால் அதற்கு சில உள் அர்த்தங்கள் உண்டு என்பது தெரியாமல் இருக்குமா?


‘குரூப்’ சேர்த்து ஆளும் கட்சிக்கு அந்த மாநிலத்தில் தலைவலியாக இருப்பவர், அடுத்து நிகழப் போகும் மாறுதலுக்கு ஏற்றவாறு இருக்கமாட்டார் என்று மேலிடத்தால் கருதப்படுகிறவர் கவர்னராக நியமிக்கப்பட்டு அந்த மாநிலத்தை விட்டே கிளப்பப்படுவார். இதுதான் கண்கூடாக தெரிகிற காரணம்.


இது தமிழிசைக்கு பொருந்துமா? பிஜேபி-யை தமிழ் நாட்டில் வளர்ப்பது சுலபமல்ல என்பது தெரிந்து முடிந்தவரை முயன்று பார்த்தவர் தமிழிசை. கேலியான விமர்சனங்கள் செய்தவர்களை ஜெயித்துக் காட்டியவர். எதிர்க் கட்சிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும், அதே சமயம் அவர்களுக்கு மரியாதை அளிக்கவும் தெரிந்திருந்தது. அதனால்தான் பிஜேபி யை முதல் விரோதியாக கருதும் தி.க. தலைவர் வீரமணி, அவரை தன் மகள் போன்றவர் என்று பாராட்டியிருக்கிறார்!


இவை ஒருபுறம். ஜனாதிபதி, கவர்னர் ஆகிய பதவிகளுக்கு ஆளும் கட்சியின் அரசியல் பிரமுகர்களை நியமிக்கும் வழக்கத்தை பிரதமர் மோடி துணிந்து மாற்றுவார் என்று எதிர்பார்த்தவர்கள் நிறைய!


ஜனாதிபதியாக அப்துல் கலாமை பிரதமர் வாஜ்பாய் தேர்ந்தெடுத்தாரே! மொரார்ஜி பிரதமராக இருந்தபோது கலாஷேத்திரா ருக்மணி அருண்டேலை ஜனாதிபதியாக்க நினைத்தார்!


ஆளும் அரசை எதிர்க்காத, அரசியல் தாண்டிய மக்கள் மதிப்பு பெற்றவர்களை ஜனாதிபதியாகவோ, கவர்னராகவோ நியமித்தால் அந்தப் பதவிக்கு ஒரு புது பொலிவு ஏற்படும்.


பல மாற்றங்களை செய்யும் துணிவுள்ள பிரதமர் மோடி - இந்த மாற்றத்தையும் செய்யக்கூடாதா?