ஹாய் மதன் கேள்விகளுக்கு
ww.vikatakavi.in/haimadhan
கே.ஆர். இரவீந்திரன்,சென்னை-1.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இருக்குமா?
அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு இருக்கும். அதை மீறி வந்துவிடும்.
கே.ஆர். உதயகுமார் சென்னை-1.
தமிழிசை கவர்னராக நியமிக்கப்பட்டது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வருத்தமான செய்திதானே?
ரொம்ப வருத்தமான விஷயம். வேறு யார் தமிழக பாஜகவுக்கு தலைவராக போகிறாரோ அவரை ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்!
சுரேஷ் பாபு .ஜி, வெல்லூர்.
அருண் ஜெய்ட்லி இன் ‘இழப்பு’ குறித்து ஒரே வரியில்?
புத்திசாலியான ஒரு அரசியல் தலைவரை நாம் இழந்து விட்டோம்.
கே.ஆர். இரவீந்திரன்,சென்னை-1.
எச். ராஜாவை மேற்கு வங்காளத்திற்கு கவர்னராக்கினால் எப்படி இருக்கும்?
அதற்கப்புறம் என்ன செய்வார். எதற்கு அவரை அவ்வளவு தொலைவுக்கு அனுப்ப நினைக்கிறீர்கள்? கவர்னர் பதவி பெரிய பதவி இல்லை. ராஜபோகமாக பெரிய பங்களாவில் வாழலாம். அவ்வளவுதான்!
கே.ஆர். உதயகுமார் சென்னை-1.
சாஹோ படம் தமிழில் வெற்றி பெறாவிட்டாலும் இந்தியில் நன்றாக கல்லா கட்டுகிறதாமே?
சாஹோ சுமாரான படம். படம் முழுக்க ஆக்ஷன் மட்டுமே. நல்ல கதையம்சம் கிடையாது. பல காட்சிகளில் தூக்கம் வந்துவிட்டது. வடநாட்டில் ஆக்ஷனை ரசிக்கிறார்களோ என்னவோ?!
சுரேஷ் பாபு .ஜி, வெல்லூர்.
‘மோடி – ஷா’ கூட்டணியின் ‘க்ராஃப்’ ஏறிக் கொண்டே போகிறதே?
காரணம் மோடிக்கு அமித் ஷா போட்டியில்லை. வலதுகரமாக செயல்படும் நல்ல நண்பர். அவர்களைப் பிரிக்க முடியாது என்று நினைக்கிறேன்.
கே.ஆர். உதயகுமார் சென்னை-1.
தமிழகத்தின் பாஜக தலைவராக யாரை நியமித்தால் தாமரை மலர வாய்ப்பிருக்கும்?
தாமரை சுலபத்தில் மலராது. அதற்கு மோடி என்ன ப்ளான் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவர் இருக்கிறார். அவர் தலைமையேற்றால் தாமரை மலர வாய்ப்பு உண்டு!
“நவோதயா” செந்தில், புதுச்சேரி-14
தமிழிசை அவர்களுக்கான கவர்னர் பதவி, அவருடைய திறமை மற்றும் விடா முயற்சிக்கு கிடைத்த அன்பளிப்பா அல்லது அவருடைய தேர்தல் தொடர் தோல்விக்கு கிடைத்த ஆறுதல் பரிசா?
ரெண்டுமே கொஞ்சம் கொஞ்சம் என்று தோன்றுகிறது. கவர்னர் பதவிக்குப் பிறகு அவர் என்ன செய்வார். தமிழகத்தில் தாமரை மலர்ந்தாலும் அது அவரால் இல்லை என்று ஆகிவிடும்!
கே.ஆர். உதயகுமார் சென்னை-1.
பிரதமர் மோடி ப்ராம்டரைப் பார்த்து பேசும் போது ஸ்டாலின் துண்டு சீட்டைப் பார்த்து பேசுவது தவறா?
இரண்டுமே தவறில்லை. மோடி பிரதமர். எச்சரிக்கையாக பேச வேண்டும். ஸ்டாலின் கலைஞர் மகன். துண்டு சீட்டு எல்லாம் இல்லாமல் வெளுத்து வாங்க வேண்டாமோ?!
சுரேஷ் பாபு .ஜி, வெல்லூர்.
‘ரஜினியின் ‘தர்பார்’ எப்பொழுது வரணும் என்று எண்ணுகிறீர்கள்?
சினிமா தர்பார் வந்துவிடும். தனி வாழ்க்கையில் தர்பார் எப்போது வரும் என்பதை ரஜினி தான் சொல்ல வேண்டும். சுலபத்தில் சொல்ல மாட்டார் என்றே தோன்றுகிறது!
கே.ஆர். இரவீந்திரன், சென்னை-1.
தங்கம் ஒர் சவரன் விலை முப்பதாயிரத்தை கடந்து விட்டதே?
தங்கம் சவரன் ஒரு லட்சத்துக்கு விற்கும் போது ‘ஒரு காலத்தில் சவரன் முப்பதாயிரம்தான் தெரியுமா?’ என்று பெருமூச்சு விடுவீர்கள்!
“நவோதயா” செந்தில், புதுச்சேரி-14
பல சமயம் உண்மையைவிட பொய்யே வலிமை பெற்று வெற்றி பெறுகிறதே, இது தர்மத்திற்கு புறம்பானதுதானே?
அதற்குப் பெயர்தான் கலிகாலம். அதற்காக உண்மையை விடக்கூடாது.. கொண்டாடவேண்டும்.
பொ. ரமேஷ், காங்கயம்
கூர்ந்த கவனிப்புக்கு சில யுக்திகள்?
கூர்ந்த கவனிப்புக்கு ஒரே யுக்தி கூர்ந்து கவனிப்பது தான். அதை ‘பிரக்டிஸ்’ மூலம் அடையலாம்!
“நவோதயா” செந்தில், புதுச்சேரி-14
அமேசான் காட்டில் ஏற்பட்ட தீ விபத்து தன்னிச்சையாக நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணம் பின்புலத்தில் உள்ளதா?
மர்மமாக இருக்கிறது அமேசான் பரப்பளவு பல லட்சம் மைல்கள். முழுவதும் பற்றி எரிந்தால் உலகத்துக்கே ஆபத்து!
சுரேஷ் பாபு .ஜி, வெல்லூர்.
இப்படி “ப.சி.க்கும்” நடக்கும் என்று எண்ணி இருக்கீறீர்களா?
எல்லா தலைவர்களுக்கும் உள்ளே ரகசிய வாழ்க்கை உண்டு. அது வெளியே வரும்போது ப.சி.க்கு நடந்தது போல யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்!
“நவோதயா” செந்தில், புதுச்சேரி-14
கர்மா - விதி, வேறுபாடு?
முதலாவது சமஸ்கிருதம். இரண்டாவது தமிழ். முதலாவதற்கு போன ஜென்மத்தின் மேல் பழி போடலாம். இரண்டாவது இந்த ஜென்மம்.
சுரேஷ் பாபு .ஜி, வெல்லூர்.
“கதை வசனம் – மதன்” என இனி பார்க்க வாய்ப்பு உண்டா?
கதை-வசனம் என்று நான் என்ன பெரிதாக சாதித்து விட்டேன்? ‘அன்பே சிவம்’ என்ற ஒரே படத்துக்கு மட்டும், (கமல் வற்புறுத்தியதால்) வசனம் எழுதினேன். மற்றபடி சினிமாவில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது. ஒரு காரணம்... சொன்ன பணம் சரியாக வராது!
Leave a comment
Upload