தொடர்கள்
அரசியல்
சபாஷ் சட்டசபை...! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

2021072808020996.jpg

ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சி காலத்தில், சட்டசபையில் பேச எதிர்க்கட்சிகளுக்கு போதுமான வாய்ப்பு கிடைக்காது. ஆளுங்கட்சி... முதல்வரை துதிபாடும். இது ஜெயலலிதா, கருணாநிதி இரண்டு முதல்வருக்குமே பொருந்தும். பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் உரை போன்றவற்றை புறக்கணிப்பு, வெளிநடப்பு, வெளியேற்றம் என்று சட்டசபை நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக இருக்காது என்பதுதான் உண்மை.

ஆனால், சென்ற வாரம் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர்.. முன்னைக்கு இப்போது பரவாயில்லை என்று இருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், கொடநாடு கொலை வழக்கில் அரசியல் பழிவாங்கல் என்று இரண்டு நாள் அதிமுக சட்டசபையை புறக்கணித்தது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும்போது... அரசியல் ரீதியாக குற்றம் சொல்லும் போது, அமைச்சர்கள் பதிலுக்கு பதில் என்று உடனுக்குடன் குறுக்கிட்டு, அவர்களும் அரசியல் ரீதியாக பதில் சொல்ல ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் இதை விரும்பாத முதல்வர் ஸ்டாலின் எழுந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை முழுவதுமாக பேச விடுங்கள். அமைச்சர்கள் குறிக்கிட்டு பேச வேண்டாம்... எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழுவதும் பேசட்டும். அதன்பிறகு நீங்கள் உங்கள் பதிலை சொல்லுங்கள் என்றார்.

20210728080240922.jpg

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடந்த போது கூட, முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் பேசும்போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையூறு செய்வது, மேஜையை தட்டுவது போன்றவை கூடாது என்று எச்சரித்திருக்கிறார்.

இதேபோல் 50 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய துரைமுருகனுக்கு, ஸ்டாலின் பாராட்டு தெரிவித்த போது... எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ், துரைமுருகன் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பார் என்று அவரும் பாராட்டினார். கல்வித்துறை மானியத்தில்... முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, தமிழ்நாட்டில் திராவிட மண்ணில் வேறு கட்சி நுழைய முடியாது. நாங்களும் சிறப்பாக பணியாற்றினோம்... நீங்களும் சிறப்பாக பணியாற்றுகிறீர்கள். பேரவையை கண்ணியத்துடன் பேரவைத்தலைவர் அப்பாவு நடத்திவருகிறார் எனப் பாராட்டினார்.

அதே சமயம்... கடந்த ஆட்சியில் முறைகேடு, ஊழல்களை விசாரிப்போம் என்று மானிய கோரிக்கையின் போது அமைச்சர்கள் பேசி வருவதும் நடந்து வருகிறது.

20210728080305384.jpg

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சிலமுறை எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கண்ணிய குறைவாக பேச... அதை அவை குறிப்பில் இருந்து நீக்க, முதல்வர் ஸ்டாலின் சபாநாயகரை கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவை குறிப்பிலிருந்து அவை நீக்கப்பட்டது. ஆனால், நிதியமைச்சர் விஷயத்தில் இந்த நீக்கம் அடிக்கடி நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை எல்லாவற்றையும் விட... இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சி, ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை ஒன்றாக உட்கார வைத்து அவர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறார் பேரவைத்தலைவர் அப்பாவு. உண்மையில் இது ஒரு புதுமையான அனுபவம்.

கலைவாணர் அரங்கிற்கு அருகே முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கான அடுக்குமாடி கட்டிடத்தின் பத்தாவது மாடியில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்தப் பயிற்சி வகுப்பு நடக்கிறது. திமுக, அதிமுக, பாமக, பாரதிய ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று எல்லா கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், சுமார் 190 பேர் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார்கள். சபாநாயகர், துணை சபாநாயகர், பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர், சட்டமன்ற செயலாளர் ஆகியோர் இந்தப் பயிற்சி வகுப்பை நடத்தினார்கள்.

2021072808033146.jpg

பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டமன்ற விதி புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, சில முக்கிய விதிகளை சுட்டிக்காட்டி, சட்டசபையில் எதை பேசலாம், எதை பேசக்கூடாது என்பதையெல்லாம் விளக்கினார்.

நிதியமைச்சர் பேசும்போது.... முதல்வர், அமைச்சர்களுக்கு மட்டும்தான் பொறுப்பு என்று எண்ணாதீர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொறுப்பு உண்டு என்பதை சுட்டிக்காட்டி... அவ்வளவு ஏன்... அமைச்சர்களுக்கு அறிவுரை சொல்லும் உரிமை கூட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கிறது என்றார்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு முன்மாதிரியான முயற்சியாக இந்தப் பயிற்சி வகுப்பு இருந்தது.

சட்டசபையை சுமூகமாக நடத்.த இந்த அரசு முயற்சிப்பது போல் தெரிகிறது. இது தொடர வேண்டும் என்பதே எல்லோரது விருப்பம்.