தொடர்கள்
சினிமா
சினிமா... சினிமா... சினிமா... - லைட் பாய்

தலைவிக்காக காத்திருக்கும்...

20210727215819563.jpeg

திரையரங்குகளை தமிழக அரசு திறக்க அனுமதி அளித்திருக்கிறது. அதற்கு பாரதிராஜா நன்றி கூட சொல்லிவிட்டார். அதே சமயம், இந்த வாரம் திரையரங்குகளில் திரையிடப்படப் போகிற படமெல்லாம் சின்ன பட்ஜெட் படம், மொழிமாற்றுப் படம் தான் என்று தியேட்டர் அதிபர்கள் அறிவித்திருக்கிறார்கள். எனவே இந்த வாரம் திரையரங்கை ரசிகர்கள் நிரப்புவார்கள் என்பது சந்தேகம்தான்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படம், பத்தாம் தேதி அடுத்த மாதம் தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது. இந்தப் படத்தில் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி, ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டே இந்தப் படம் திரையிட தயாராகி விட்டது. ஆனால், தியேட்டர்கள் மூடப்பட்டதால் ரிலீஸ் தள்ளிப்போனது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையும் இந்தப் படத்தில் இருக்கும். படம் வெளிவந்ததும், விவாதங்களும் இருக்கும்.

இயக்குனர்கள் எல்லாம் சேர்ந்து....

திரையரங்குகள் மூடியிருந்த காலத்தில் கால் ஊன்றி விட்ட ஓடிடி தளம், இப்போது சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தி ஆகிவிட்டது. அதே சமயம் முன்னணி இயக்குனர்கள், பிரபல நடிகர்களின் படங்களைத்தான் அந்த நிறுவனங்கள் வாங்குவதில் கவனம் செலுத்துகிறது.

20210727220817636.jpeg

ஒடிடி தளம் வருமானம் கிடைக்கும் இடம், நம்மைப் போன்ற இயக்குனர்களுக்கு அங்கு கொஞ்சம் கிராக்கிதான் என்பதை தெரிந்துகொண்ட சில இயக்குனர்கள், ஒன்றிணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்கள். இயக்குனர்கள் மணிரத்னம், சங்கர், ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன், கௌதம் மேனன், மிஷ்கின், சசி, வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் இணைந்து ரெயின்ஆன்பிலிம்ஸ் என்று அந்த நிறுவனத்துக்கு பெயரும் சூட்டி இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிமாறன். இதில் சில இயக்குனர்கள், சொந்த தயாரிப்பு நிறுவனங்களை ஏற்கனவே வைத்திருந்தார்கள், அந்த நிறுவனங்களுக்கு திண்டுக்கல் பூட்டு பூட்டி விட்டார்கள். இப்போது ஒட்டிடி தளத்திற்கு படம் தயாரிப்பது, வெப் சீரியஸ் என்று பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.

ஐசரி கணேஷ் ஜாமீன்

20210727220739135.jpeg

நடிகர் சிம்பு மீது நான்கு தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதால், அந்த சிக்கல் தீரும் வரை புதிய படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று பெப்சி அமைப்பு அறிவித்தது. இதனால் சிம்பு படப்பிடிப்பு நின்றுபோனது. பிறகு பேச்சுவார்த்தை பலமுறை நடந்தும், பிரச்சனை தீரவில்லை. அதன் பிறகு கல்வியாளர், சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிம்பு பணத்திற்கு நான் கேரன்டி என்று படத் தயாரிப்பாளர்களுக்கு, சிம்பு சார்பாக கடிதமே கொடுத்துவிட்டார். அவர் தர வேண்டிய பணத்தையும் தானே தருவதாக ஒப்புக்கொண்டு விட்டார். அதற்கு கைமாறாக சிம்பு, ஐசரி கணேஷ் தயாரிப்பில் இரண்டு படத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டது தனிக்கதை.

நாயகன் சூரி

20210727220714183.jpeg

காமெடி நடிகராக அறிமுகமாகி நடிகர் சூரி, இப்போது குணச்சித்திர வேடம் நாயகன் என்று அடுத்து அடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். அண்ணாத்தே படத்தில் நடித்தது சந்தோஷம். விமானத்தில் ரஜினி சார் பக்கத்தில் உட்கார்ந்தது சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டே போகிறார். வெற்றிமாறன் படமான விடுதலை படத்தில், தான் கதாநாயகனாக நடிப்பதை சந்தோஷமாக ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடிகர் சூரி.

பேசி முடிச்சுட்டாங்க

தமிழ் பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இயக்குனர் சங்கர் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் தந்திருந்தார். தற்போது அந்த பிரச்சனை, பேசி தீர்க்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறது. மீண்டும் சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு ஸ்டில் விரைவில் வரும் போலிருக்கிறது.