
மாப்பிள்ளை அழைப்பில் நடந்த கலாட்டா!
“வெளியூர் கல்யாணம் ஒண்ணுக்கு சம்பந்தம், ராஜண்ணா அண்ணன்களோடு போயிருந்தேன். அவர் செட்டில் 15 வருஷம் தவில் வாசிச்சவன் நான். மாப்பிள்ளை அழைப்பு ராத்திரி தடபுடலா நடக்குது. பெரிய கூட்டம். சாரமதியில் ‘மோட்சமு களதா’ தியாகராஜ கீர்த்தனையை இரண்டு பேரும் அவ்வளவு சம்பிரதாயமா வாசிக்கிறார்கள். கேட்கவே ஆனந்தமாக இருந்தது. திடீர்னு ஒரு இளசுகள் கூட்டம் எங்க பக்கம் வந்தது. சம்பந்தம் அண்ணன் கிட்டே வந்து “மாப்பிள்ளை அழைப்புக்கு நாங்க ஆடணும். அதுக்கு ஏத்தாப்பல பாட்டு வாசிங்க..” என்றார் ஒரு இளைஞர். அண்ணனுக்கு கோபம் வந்துச்சு பாருங்க. ‘இது என்ன கீர்த்தனை தெரியுமா..? நாங்க யார் வாசிக்கிறதுன்னு தெரியுமா..? இது என்ன நையாண்டி மேளம்னு நினைச்சியா..?’ன்னு சத்தம் போட்டது தான் தாமதம். பெரியவங்க சிலர் பையன்களை அப்படியே தூக்கிட்டு போய்ட்டாங்க. ராஜண்ணா மெதுவா தன் அண்ணனை சமரசம் பண்ணிச்சு. அப்புறம் தான் சம்பந்தம் அண்ணன் மறுபடியும் கீர்த்தனையை வாசிக்க ஆரம்பிச்சுது. எதுக்கு இந்த சம்பவத்தை சொல்றேன்னா, இரண்டு பேருக்கும் அவ்வளவு தொழில் பக்தி. நாதஸ்வரத்தை அவர்கள் தெய்வமா நினைத்தார்கள். அதை வெறும் ஆட்டம் பாட்டத்துக்கு பயன்படுத்தக் கூடாதுன்னு உறுதியா இருந்தார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் மூத்த தவில் வித்வான் திருவழுந்தூர் கண்ணதாசன். நாதஸ்வர வட்டாரத்தில் - கண்ணன்.

நூற்றாண்டு விழா காணும் மகா வித்வான் செம்பனார்கோயில் எஸ்.ஆர்.ஜி. சம்பந்தம் மற்றும் ராஜண்ணா பற்றி மேலும் பேசினார் கண்ணதாசன்.
“சென்னையில் ஒரு கலெக்டர் வீட்டு கல்யாணம் ஏ.வி.எம். ராஜேஸ்வரியில் நடந்தது. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் செட்டு, எங்களுடையது இரண்டுமே வாசிக்கறதா இருந்தது. முதலில் நாமகிரிப்பேட்டையை வாசிக்கச் சொன்னார்கள். அவரோ ‘முதலில் செம்பனார்கோயில் சகோதரர்கள் வாசிக்கட்டும்.. அதுதான் முறை...’ என்று சொன்னது அவர்களுக்கு கிடைத்த பெரிய கௌரவம். ராஜண்ணா ராகம் வாசிக்கிறது குளிர்ச்சியா இருக்கும். சம்பந்தம் ஸ்வரங்களில் ஒரு கை பார்த்துடுவார். பல்லவி வாசிக்கிற போது வினயமா ஸ்வரங்கள் வாசிப்பார். இரண்டு பேர்களும் ஜமீன்தார்கள் மாதிரி பளீர்னு டிரஸ் பண்ணிக்கிட்டு வாசிக்கிற அழகே தனி.
அவர்கள் வாசிக்காத ஊரே இல்லை எனலாம். ராமேஸ்வரம் கோயிலில் நிறைய வாசித்துள்ளார்கள். சிவகங்கை பாகனேரியில் உள்ள கோயில், தபோவனம், புதுக்கோட்டையிலுள்ள சிவகளி.. இப்படி அந்த காலத்தில் பஸ் கூட போக முடியாத ஊர்களுக்குப் போயுள்ளனர். ஒரு தடவை கல்கத்தா கூட போய் அண்ணனுக்கு வாசித்திருக்கிறேன்.
இன்னொரு விஷயம், சினிமா பாட்டு பெரும்பாலும் வாசிக்க மாட்டார்கள். அப்படி வாசிக்கணும் என்றால் அது கர்நாடக சங்கீதத்தில் இருக்கணும்! நல்ல வரிகள் இருக்கணும். முல்லை மலர் மேலே, நலம்தானா.. போன்ற உருப்படிகளை வாசித்து கேட்டிருக்கேன். சின்னஞ்சிறு பெண் போலே, அலைபாயுதே தாமரை பூத்த தடாகமடி போன்ற பாடல்களை கடைசியா ரசித்து வாசிப்பார்கள்! மெயின் ஐட்டம் என்றால் ஹரி காம்போதியில் ராம நன்னு ப்ரோவரா, மோகனராமா, நகுமோமு , ப்ரோவபாரம்மா.. போன்ற கீர்த்தனைகளை விரும்பி வாசிப்பார்கள். ஒவ்வொரு சங்கதியும் மடியாக இருக்கும்.
அப்புறம் அவர்கள் கீர்த்தனையை எப்படி எடுக்கிறார்கள் என்று பார்த்து தவில் வாசிக்கணும். அதாவது தவில்காரருக்கும் பாட்டு ஞானம் இருக்கணும். தடபுடன்னு வாசிச்சா போச்சு... ‘நிறுத்து’ என்பார்கள். ‘கிக்ரி புக்ரி’ வாசிப்பெல்லாம் அவர்களிடம் கூடாது. கம்பி மேல நடப்பது போல கவனமா இருக்கணும்.
சம்பந்தம் அண்ணன், பழக்க வழக்கத்தில் கூட சரியா இருக்கணும் என்று நினைப்பவர். சும்மா நாலு கீர்த்தனைகளை கற்று வைத்துக் கொண்டு பிறகு நிறைய சினிமா பாட்டு வாசிச்சு காசு சம்பாதிச்சு பளபளப்பா சுத்துற கலைஞர்கள் அந்தக் காலத்திலும் உண்டு. அப்படிப்பட்ட ஆட்களிடம் சம்பந்தம் அண்ணன் பேசக்கூட மாட்டார். அதேபோல குடிச்சுட்டு வர நபர்களிடம் நாம் சாதாரணமா பேசினால் கூட, அவங்க போன பின் ‘அவன் என்ன ஆளு. நீ போய் பேசுற?’ என்று கண்டிப்பார்.
செம்பனார்கோயில் சகோதரர்கள் கச்சேரிக்குப் போய்விட்டு வீட்டுக்கு வந்தால் மனசுக்கு இதமா இருக்கும். நமக்கும் ஒரு கெளரவம் கிடைச்ச மாதிரி தோணும். அது ஒரு ஞான பலம். இப்போ அதெல்லாம் இல்லையே. கூலி வாங்கறது மட்டுமே பெரிசா? ஆத்ம திருப்தி வேணாமா?” என்று ஆழ்ந்த யோசனையுடன் நிறுத்தினார் திருவழுந்தூர் கண்ணதாசன். உயர்ந்த தர்மங்களிலிருந்து நீண்ட தூரம் வெளியே வந்துவிட்ட சராசரிகளுக்கு இதெல்லாம் புரிய வாய்ப்பில்லை!

Leave a comment
Upload