தொடர்கள்
பொது
இந்தியாவின் சொத்துக்கள் பகிரங்க விற்பனை...! - ஆ. கோபண்ணா, துணைத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

இது குத்தகையா..? விற்பனையா..?

20210727171840881.jpeg

கடந்த ஆகஸ்ட் 23 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூபாய் 6 லட்சம் கோடியை நான்கு ஆண்டுகளில் திரட்டுவதற்காக, தேசிய பணமாக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு, நாட்டு மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் மீது நம்பிக்கையுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன. தேசிய பணமாக்கும் திட்டம் ஏன் கொண்டு வரப்படுகிறது? எதற்காக கொண்டு வரப்படுகிறது? இத்திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பாக எவருடனும் கலந்தாலோசிக்காமல், குறைந்தபட்ச விவாதம் கூட நடத்தாமல், தன்னிச்சையாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சிகளில் கையாண்ட அணுகுமுறைக்கு மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் தந்தை என கருதப்படுகிற முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், நஷ்டத்தில் இயங்குகிற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் ஆதரவான நிலையை எடுத்தார். அவரது ஆட்சிக் காலமான 2004 முதல் 2014 வரை ரூபாய் 1 லட்சத்து 7 ஆயிரத்து 833 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.

பொது சந்தையில் போட்டியை எதிர்கொள்கிற அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களை வலிமைப்படுத்துவதற்காக குறைவான சதவிகித பங்குகளை விற்கப்படுகிற கொள்கைக்கும் ஆதரவாக இருந்தார். ஆனால், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதில் அதிக அளவில் ஈடுபாடு காட்டியது பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலமான 1999 முதல் 2004 வரை தான். அவரது ஆட்சிக் காலத்தில் பாரத் அலுமினியம் கம்பெனி, இந்துஸ்தான் ஜிங்க் ஆகிய கம்பெனியின் பங்குகளை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும், இந்தியன் பெட்ரோ கெமிக்கல் கார்ப்பரேஷன் பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், வி.எஸ்.என்.எல். பங்குகள் டாடா குழுமத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன.

ஆனால், 2014 இல் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, பொதுத்துறை பங்குகளை விற்பதில் மிகுந்த தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் லாபத்தில் இயங்கி வந்த பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, இந்திய கப்பல் கழகம் ஆகியவற்றின் பெரும் சதவிகிதத்திலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக, லாபத்தில் இயங்குகிற பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 53.29 சதவிகித பங்குகள் விற்கப்பட்டன. அதேபோல, ஏர் இந்தியா, ஐ.டி.பி.ஐ., மற்றும் ஆயில் காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றின் பங்குகளையும் விற்பதற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

1991 முதல் இதுவரை ரூபாய் 3 லட்சத்து 63 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இதில், மொத்தம் 65 சதவிகிதம் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் விற்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் ரூபாய் 2 லட்சத்து 9 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் விற்கப்பட்டுள்ளன. மொத்தம் 75 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பா.ஜ.க. ஆட்சியில் விற்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதில் தீவிர முனைப்பு காட்டிய பா.ஜ.க. அரசு, தற்போது இந்தியாவின் சொத்துக்களை ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு குத்தகை என்ற போர்வையில் விற்பனை செய்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பகிரங்கமாக விற்பனை செய்தால் கடும் எதிர்ப்பு வரும் என்கிற காரணத்தினால் 40 ஆண்டுகளுக்கு குத்தகை என்ற பெயரில், அரசு சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது. அதன் விளைவாக உருவானதே தேசிய பணமாக்கும் திட்டம். இதைத் தலைவர் ராகுல்காந்தி, பத்திரிகையாளர் சந்திப்பில் கடுமையாக விமர்சனம் செய்யும் போது, ‘கடந்த 70 ஆண்டுகளில், இந்தியாவில் எதுவுமே நடக்கவில்லை என்று கூறும் மோடியும், பா.ஜ.க-வும், 70 ஆண்டுகளில் உருவாக்கிய பொதுத்துறை நிறுவன சொத்துக்களை 7 ஆண்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பை குத்தகைக்கு விடுகிறோம் என்று கூறுகின்றனர். முக்கிய துறைகளை தனியார் மயமாக்கி, வேலை வாய்ப்புகளை பறிப்பதே மோடி அரசின் திட்டம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனியார் மயத்திற்கு எதிராக இருந்ததில்லை. ஆனால், விரிவாக விவாதித்து, ஆய்வு செய்ததின் அடிப்படையில் தான் தனியார் மயமாக்கும் முடிவை எடுத்திருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ரயில்வே துறையை தனியார் மயமாக்க நாங்கள் ஒருபோதும் முயற்சி செய்ததில்லை’ என்று கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறினார்.

முக்கியமான சொத்துக்களை விற்கக் கூடாது. ஆனால், மோடி அரசு வெளியிட்டுள்ள விற்பனை பட்டியலில் பாதுகாப்புத்துறை மற்றும் ரயில்வே துறையும் இடம் பெற்றுள்ளன. நீண்டகாலம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மட்டுமே தனியார் மயமாக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பதற்கான குறிக்கோள்கள் என்ன என்பதையும், அதன் அளவு கோலையும் அரசு வெளியிடவில்லை. இதில் பா.ஜ.க. அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்படவில்லை. இதுகுறித்து தொழிற்சங்கத் தலைவர்களிடமோ, விவசாய சங்க அமைப்புகளிடமோ விவாதம் நடத்தப்படவில்லை.

நிதியமைச்சர் அறிவிப்பின்படி, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை 40 ஆண்டுகளுக்கு குத்தகை விடுவது, தேசத்தின் சொத்துக்களை பகிரங்கமாக விற்கப்படுவதாகவே கருத வேண்டும். விற்பனையின் போது முழு தொகை அரசுக்கு கிடைக்கும். ஆனால், குத்தகையில் எந்த முதலீடும் இல்லாமல் அரசு சொத்துக்கள் 40 ஆண்டுகளுக்கு தாரை வார்க்கப்படும். நமது வீட்டை ஒருவருக்கு 40 ஆண்டுகளுக்கு தரப் போகிறோம் என்றால் என்ன பொருள்? 40 ஆண்டுகளுக்கு பிறகு தான், அந்த வீட்டைப் பற்றி பேச முடியும். 25 விமான நிலையங்களை ஒரு நபருக்கு கொடுத்தால், 40 ஆண்டுகளுக்கு பிறகு எந்த அடிப்படையில் அரசு உரிமை கொண்டாட முடியும்? குத்தகைக்கு விடப்பட்ட பிறகு அந்த சொத்துக்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தான் முக்கியமான கேள்வியாகும். பொதுத்துறை சொத்துக்களை விற்பனை செய்கிறோம் என்று சொல்ல பா.ஜ.க. அரசுக்கு துணிச்சல் இல்லை. அதனால் தான் 40 ஆண்டுகளுக்கு குத்தகை விடுகிறோம் என்று கூறுகிறார்கள். 400 ரயில் நிலையங்களை, 40 ஆண்டுகளுக்கு குத்தகை கொடுத்து விட்டு, பா.ஜ.க. அரசு என்ன செய்யப் போகிறது? இந்த சொத்துக்கள் யாரிடம் போகப் போகிறது? யாருக்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

பிரதமர் நேரு ஆட்சிக் காலத்தில் 1956 இல், 245 தனியார் நிறுவனங்களையும், 16 வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ரூபாய் 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது தான் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம். இன்றைக்கு ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் பங்குதாரர்களுக்கு வழங்குகிறது. 6 லட்சம் கோடி வருவாய் பெறுகிற நிறுவனமாகவும், 10 ஆயிரம் கோடி வரி செலுத்துகிற நிறுவனமாகவும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ, 31 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை அது பெற்றுள்ளது. 29 கோடி மக்களுக்கு சேவை செய்கிற, 13 லட்சம் மக்கள் பணியாற்றுகிற, மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதியுதவி செய்கிற இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க வேண்டிய அவசியம் என்ன? இதில் 95 சதவிகித பங்குகள் சந்தாதாரர்களுடையது. இதில் 5 சதவிகிதம் தான் அரசுக்கு சொந்தமானது. இந்நிலையில், ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 10 சதவிகித பங்குகளை வருகிற மார்ச் 2022-க்குள் விற்பதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். இதன்மூலம், பொதுத்துறை நிறுவனங்களிலேயே பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்தபடியாக பொருளாதார சேவை செய்கிற ஒரு நிறுவனத்தை அழிக்கிற முயற்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கான ரூபாய் 6 லட்சம் கோடி நிதியை திரட்ட, முதல் பிரதமர் பண்டித நேருவின் கடுமையான முயற்சியினால் உருவாக்கப்பட்டு, அவரால் இந்தியாவின் நவீன கோயில்கள் என்று அழைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியாருக்கு விற்க முயல்வதை தடுத்து நிறுத்த வேண்டியது முக்கிய கடமையாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசிய உள்கட்டமைப்பிற்காக ரூபாய் 100 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி மீண்டும் 110 லட்சம் கோடியை அறிவித்தார். இறுதியாக, 2021 ஆகஸ்ட் 15 ஆம் தேதியும் ரூபாய் 100 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வதைப் போல, பொதுத்துறை நிறுவனங்களை விற்று, 6 லட்சம் கோடி ரூபாயை வசூலிப்பதாகவே வைத்துக் கொண்டால், பிரதமர் மோடி கூறும் ரூபாய் 100 லட்சம் கோடி தொகையை கொண்டு அடிப்படை உள்கட்டமைப்பை எந்த வருவாயிலிருந்து செய்யப் போகிறார்?

சுதந்திர தின விழாவில், தில்லி - செங்கோட்டையில் பல பிரதமர்கள் உரையாற்றி உள்ளனர். பிரதமர் நேரு 16 முறை உரையாற்றியிருக்கிறார். ஆனால், பிரதமர் மோடியைப் போல தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ரூபாய் 100 லட்சம் கோடி உள் கட்டமைப்பிற்காக செலவிடபோகிறோம் என்று சொல்லி விட்டு, அந்தத் தொகையை திரட்டுவதற்கு கடுகளவு முயற்சியும் செய்யாத பிரதமராக மோடி இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. இந்தியாவின் துரதிருஷ்டம், மோடியைப் போன்ற சொல்லுக்கும், செயலுக்கும் சம்மந்தம் இல்லாத ஒருவர் பிரதமராக வந்திருப்பது தான்.