
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், தமிழ்நாடு அரசு மேல் விசாரணை நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது. எடப்பாடி... இது அரசியல் பழிவாங்கல் என்று சொல்லி அதை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதும் உண்மை.
கொடநாடு கொலை வழக்கில் சாட்சியாக இருக்கும் அனுபவ் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் சாட்சிகள் யாரிடமும் சொல்லாமல். குற்றம்சாட்டப்பட்ட சிலரிடம் மட்டும் சொல்லிவிட்டு மேல் விசாரணை நடந்து வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், மேல் விசாரணை தேவையில்லை என்று அந்த மனுவில் அவர் கோரிக்கை வைத்தார். இதைத்தான் எடப்பாடியும் தொடர்ந்து சொல்லி வருகிறார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பாக ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், காவல்துறை சார்பாக ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது, இருவருமே மேல் விசாரணை ஏன் என்பதை நீதிமன்றத்தில் விளக்கினார்கள்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலரே, விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதாக நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார்கள் என்பதையும், அவர்கள் வாதத்தின் போது குறிப்பிட்டார்கள். இந்த மனுவை தாக்கல் செய்தவர் சாட்சி மட்டுமல்ல, குற்றம்சாட்டப்பட்ட சிலருக்கு நெருக்கமானவர் என்பதையும் குறிப்பிட்டவர்கள், மேல் விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்கள். இதனைத் தொடர்ந்து இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஊட்டி விசாரணை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை காலை, கொடநாடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது... உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்பார்த்து, செப்டம்பர் 2ஆம் தேதி விசாரணையை ஒத்திவைத்தது ஊட்டி நீதிமன்றம்.
ஊட்டி நீதிமன்றம் காலையில் வழக்கை ஒத்திவைத்தது. சென்னை உயர்நீதிமன்றம் மதியம் அனுபவ் ரவி மனுவை தள்ளுபடி செய்தது.
இந்தக் கொலை வழக்கில், சசிகலா இதுவரை எதுவும் சொல்லவில்லை. இப்போதையைக்கு கொடநாடு எஸ்டேட் உரிமையாளர் சசிகலா தான். கொலை நடந்தபோது சசிகலா சிறையில் இருந்தார். ஆனால் தினகரன், சிறையிலிருந்த சசிகலாவை அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரும் எதுவும் பேசவில்லை, இதுவும் மர்மமாக இருக்கிறது.
தற்போது இந்த வழக்கு சூடு பிடித்ததும்.... சமீபத்தில்.. சசிகலா, இளவரசி, தினகரன் மற்றும் அவர்களின் ஆஸ்தான வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இதைப்பற்றி சசிகலா விரைவில் ஜெயா டிவி மூலம் ஏதாவது கருத்து சொல்ல கூடும் என்ற பேச்சும் வர தொடங்கியிருக்கிறது.
கரடி பொம்மை, கை கடிகாரங்கள் இதுதான் அங்கே காணாமல் போனது என்பது அப்போது காவல்துறை சொன்ன தகவல். வெறும் கரடி பொம்மை, கைகடிகாரத்திற்காக காவலாளி கொலை, விபத்து, தற்கொலை எதற்கு என்ற கேள்வி வருமே என்று அப்போதைய காவல்துறை ஏன் யோசிக்க வில்லை என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது.
இப்போதைய விசாரணை அதிகாரிகள், இந்த வழக்கை பல கோணங்களில் ஆராய்ந்து, விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால்... இந்த வழக்கு சம்பந்தமான பல ஆதாரங்களை தேடியபோது, காணவில்லை என்ற தகவல் தான் அவர்களுக்கு கிடைத்தது. இருந்தாலும் நம்பிக்கையுடன் விசாரணை முடுக்கி விடப்பட்டிருக்கிறது. விசாரணை அதிகாரியை பொருத்தவரை, இந்த வழக்கில் சேர்க்க சாட்சிகள் மட்டும் போதாது, ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறார்கள். 4 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு, இப்போது ஆதாரங்களை தேடினால் கிடைக்குமா என்று சில அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினாலும்.... விசாரணை அதிகாரிகள், நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில், சசிகலா வாய் திறக்காமல் இருப்பதற்கு வேறு மாதிரி காரணம் சொல்கிறார்கள்....
2017 நவம்பர் மாதம் வருமான வரித்துறை, சசிகலா சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. கொடநாடு எஸ்டேட், மிடாஸ் மது ஆலை, இளவரசி மகன் விவேக் வீடு, அபிபுல்லா சாலை கிருஷ்ணப்ரியா வீடு என 190 இடங்கள், 2000 அதிகாரிகள் என்று அது ஒரு மெகா ரெய்டு. இதில் கொடநாட்டில் அவர்களுக்கு பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், சிஐடி காலனியில் ஒரு அப்பார்ட்மெண்டில் 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள பெரம்பூர் தியேட்டர், ஈசிஆர் ரோடு ரிசார்ட், மதுரையில் இருந்த மால், சுகர் மில் என்று ஐந்து டாக்குமெண்ட்களை வருமான வரித்துறை, அந்த இடத்திலிருந்து கைப்பற்றியது. சசிகலா தரப்புக்கு இது பெரும் அதிர்ச்சி, ஆச்சரியம். காரணம்... இந்தக் குறிப்பிட்ட டாக்குமெண்ட்களெல்லாம் கொடநாடு எஸ்டேட்டில் பத்திரமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அது எப்படி பறந்து, சிஐடி காலனிக்கு போனது. அங்கே வைத்தது யார்? இது தவிர... இன்னும் சில பல கோடி மதிப்புள்ள முக்கிய சொத்துக்களின் மூலப் பத்திரங்கள் காணவில்லை. அதுபற்றி வருமான வரித்துறை விசாரணையின் போது, அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை சசிகலா. எதுவும் பேசாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்ற சந்தேகம் தற்போது எழுந்திருக்கிறது.
காணாமல் போனதாக சொல்லப்பட்ட கொடநாடு எஸ்டேட் காவலாளி கிருஷ்ண பகதூர், தற்போது கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் வாங்கி இருக்கிறது விசாரணைக்குழு. அது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் அந்த வாக்குமூலத்தில்... டிரைவர் கனகராஜ், மரக்கடை உரிமையாளர் சஜீவன் ஆகியோர் வந்ததால்தான் நாங்கள் கதவை திறந்தோம் என்று வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறார்.
இதன் நடுவே... சசிகலா, எடப்பாடி இருவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர, சட்ட நிபுணர்களிடம் விசாரணை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் என்று முதல் மரியாதையில் ஒரு டயலாக் வரும். ஏனோ... அது தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

Leave a comment
Upload