
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாற நாயனார் தம் முயற்சியாலும், உழைப்பினாலும் உழவுத்தொழிலின் மூலம் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கும், நலிந்தவர்களுக்கும் திருவமுது அளிக்கும் தொண்டினை செய்து வந்தார்.
இளையான்குடி மாற நாயனார் செல்வந்தராக இருந்த போது அவரது மனைவியாரும், சிவனடியார்களுக்கு திருவமுது அளித்தலில் உறுதுணையாக இருந்தார். அதேபோல் கடுமையான வறுமையிலும் அவர்கள் இருவரும் இன்முகம் காட்டி சிவனடியார்களை உபசரித்து, திருவமுது அளிக்கும் உயர்ந்த பண்பினை உடையவராக இருந்தார்கள்.
திருத்தொண்ட தொகையில் “இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்” என புகழப்பட்டுள்ளார்.
இவர் வறுமையில் விதை நெல்லைக் கொண்டு, சிவனடியாருக்கு அமுதளித்தவர். வறுமையிலும் செம்மையாக வாழ்ந்து, சிவனடியார்களை உபசரித்ததால், அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெயரும் புகழும் பெற்று விளங்குகிறார்.
இளையான்குடி மாறநாயனார் சிவத்தொண்டு:
இன்றைய சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி என்னும் ஊரில் வேளாளர் மரபிலே பிறந்தவர் மாறனார். இளையான்குடியில் பிறந்த மாறனார் ஊரின் பெயரினைக் கொண்டே இளையான்குடி மாற நாயனார் என்று அழைக்கப் பெற்றார். மாறனாரும் அவருடைய மனைவியும் சிவபெருமான் மீது அதிதீவிர பக்தி கொண்டிருந்தனர்
அதிக வயல் வளத்துடன் வாழ்ந்த மாறனார் தம் முயற்சியாலும், உழைப்பினாலும் உழவுத்தொழிலின் மூலம் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தைக் கொண்டு வீட்டிற்கு வரும் சிவனடியார்களை இவரும், இவரது மனைவியும் வரவேற்று பாதபூஜை செய்து அவர்களுக்கு திருவமுது படைத்தலை தொடர்ந்து செய்து வந்தனர்.
சிவனடியார்களுக்கு தொண்டு செய்வது சிவபெருமானுக்கு செய்வதாக எண்ணினர்.
சிவபெருமானின் திருவிளையாடல்:
இளையான்குடி மாறநாயனார், சிவனடியார்களுக்கு திருவமுதளித்ததை செல்வக்காலத்திலே மட்டுமன்றி வறுமையுற்ற காலத்திலும் விடாது செய்வார் என்பதை உலகம் அறியச் செய்ய நினைத்த சிவபெருமான், மாறனாரின் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடும்படி செய்யலானார். இளையான்குடி மாற நாயனார் செல்வம் குறைந்த போதிலும், தம்மிடமிருந்த நிலங்களை விற்றும், கடன்வாங்கியும் சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து வந்தார்.
ஒருநாள் இரவுப் பொழுது, கடும் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்துக் கொண்டிருந்தது. வறுமையின் கொடுமையால், உண்ண உணவின்றி மாற நாயனாரும், அவரது மனைவியும் சிவநாமத்தை உச்சரித்தவாறு பசியால் துவண்டு தூங்கிப்போயினர்.
அந்த மழையில் சிவபெருமான், சிவனடியார் திருக்கோலம் பூண்டு மாற நாயனாரின் வீட்டு வாசல் கதவை தட்டினார்.
மாற நாயனார் கதவைத் திறந்து, வாசலில் நின்ற அடியாரை வீட்டினுள் மகிழ்ச்சியுடன் வரவேற்று, உள்ளே வந்து உட்காரச் சொன்னார். அந்த நேரத்தில் அடியார்க்கு உணவளிக்க வீட்டில் ஏதுமில்லையே என வருத்தப்பட்டுக் கொண்டிருந்த போது, மாறனாரின் மனைவி ஒரு யோசனைச் சொன்னார். “நாம் இன்று காலையில் விதைத்த நெல் இந்நேரம் மழையில் மிதந்து கொண்டிருக்கும்... அந்த நெற்களை சேகரித்து எடுத்து வந்து தந்தால், நொடிப் பொழுதில் குத்தி அரிசியாக்கி அடியவருக்கு சமைத்து திருவமுது செய்வேன்" என்றார்.
மாற நாயனாரும் வந்திருந்த அடியவரை கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கும்படி கூறிவிட்டு, அந்த நள்ளிரவு கடும் மழையில் கையில் கூடையை எடுத்துக் கொண்டு வயலை நோக்கி விரைந்தார், இதற்கிடையில் உணவுக்காக காத்திருந்த சிவனடியார், அப்படியே கண்ணயர்ந்து போனார்.
அவர் மனைவி தோட்டத்திலிருந்த கீரையை பறித்து வந்து சமைத்தார். இருளில் மழையில் நனைந்தவாறு வயலை அடைந்த மாறனார், காலையில் விதைத்திருந்த விதை நெல் அனைத்தும், மழை நீரில் மிதந்து வரப்பு ஓரமாக ஒதுங்கியிருப்பதைக் கண்டு, அதனை அப்படியே அள்ளி எடுத்து கூடையில் போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த விறகு அனைத்தும் தீர்ந்துவிட்டது. உடனே மாறனார், வீட்டின் கூரையில் வேயப்பட்டிருந்த குச்சிகளையும், கம்புகளையும் பிய்த்துக் கொடுத்தார். அவரது மனைவியாரும் இன்முகத்தோடு நெல்லை வறுத்து, குத்தி அரிசியாக்கி சோறு சமைத்தார்.

பின்னர் மாறனாரும், மனைவியாரும் சேர்ந்து களைப்பில் உறங்கிவிட்ட அடியவரை உணவு கொடுப்பதற்காக எழுப்பினர். அப்பொழுது சிவனடியார் மறைந்து, சிவபெருமான் பார்வதி சமேதராக இடப வாகனத்தில், விண்ணில் பேரொளியாகக் காட்சி அளித்தார். அதனைக் கண்டதும் இருவரும் தரையில் வீழ்ந்து வணங்கினர்.
அப்போது சிவபெருமான் “அன்பனே! அடியவர்களை உபசரித்து பசியாற்றும் உன் சிறப்பினை உலகம் அறியச் செய்யவே உனக்கு வறுமை நிலையைத் தந்தோம். அந்த வறுமையிலும் நீயும் உன் மனைவியும் செய்த தொண்டினைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தோம். நீங்கள் இருவரும் மீண்டும் செல்வ செழிப்போடு வாழ்ந்து, நீண்டகாலம் அடியவர்களுக்கு திருவமுது படைத்து, இறுதியில் சிவலோகத்தினை அடைந்து பேரின்பம் அனுபவித்திருப்பாயாக” என்று கூறி மறைந்தார். இளையான்குடி மாற நாயனார் பல ஆண்டுகள் அடியவர்களுக்கு தொண்டு செய்து இளையான்குடியிலேயே முக்தியடைந்தார்.
குருபூஜை நாள்:
இளையான்குடி மாற நாயனார் அவதாரம் செய்த ஸ்தலமும், முக்தியடைந்த ஸ்தலமும் இளையான்குடி திருத்தலமே. இத்திருத்தலத்திலும், மாற நாயனார் வாழ்ந்த இல்லமான திருமடத்திலும் ஆண்டுதோறும் இவர் முக்தி அடைந்த நாளான ஆவணி மாதம் மகம் நட்சத்திர நாளில் மிகச்சிறப்பாக மாற நாயனார் குருபூஜை நடைபெறுகிறது. அன்று இத்தல ஈசனுக்கு தண்டுக்கீரை நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். மாற நாயனாரின் விவசாய விளைநிலமும் கோயில் அருகிலேயே உள்ளது. இத்தல மண்ணெடுத்து, அதனை வயல்களில், தோட்டங்களில் தூவினால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இவரது குருபூஜை தினத்தன்று எல்லா சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.
“திருச்சிற்றம்பலம்”
அடுத்த பதிவில் உருத்திர பசுபதி நாயனார்…

Leave a comment
Upload