
‘நம் ஆதி வீடு வனம். நம் ஆதி வீடு மரம். நம் மூதாதையர்கள் பறவைகளும், மிருகங்களும் தான். அவற்றின் பண்புகள் இப்போதும் ஏதோ ஒரு வகையில் நமக்குள் விரவியிருப்பதை உணர முடிவதிலிருந்து, நம்மால் மேலே சொன்ன வார்த்தைகளின் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.’
தந்தை வழி சமுதாயம் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் கொள்கிறது. அப்படியான சமூகம் தோன்றியதும், அதுவரை இருந்து வந்த பெண் - ஆண் சமத்துவம், ஏற்றத்தாழ்வு கொள்ள ஆரம்பிக்கிறது. பெண்களின் சுதந்திரம் ஒன்றன் பின் ஒன்றாக அவர்களிடமிருந்து வலிக்காமல், ஊசி போடுவது போல அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது.
அதனால் தான், இயற்கையை வழிபட்டு வந்திருந்த வாழ்வியலில் இடைச்செருகலாய் பல வேதாந்த மரபுகள் நிறுவப்படுகின்றன. அவை சிலபல நல்லவற்றையும், பலபல பேதமைகளை விதைக்கும் உள்நோக்கம் கொண்ட கெட்டவையுமாக இருக்கின்றன. வாழ்க்கை என்பது, அனைத்தையும் தராசில் வைத்து பகுத்து பார்த்து நல்லவை அல்லவை அறிந்தபடியே பயணப்பட வேண்டியிருக்கிறது.
அப்படித் தான் மனித வாழ்க்கையை, நான்கு பருவங்களாக பிரிக்கிறார்கள். அதில் கடைசியாக வானபிரஸ்தம் என்கிற துறவு வாழ்க்கை பற்றி பேசுகிறார்கள். இதெல்லாம் யாருக்கு என்றால், ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு இப்படி எந்த விசயங்களும் வழங்கப்படவில்லை. பௌத்தம் மட்டுமே பிக்குனிகளை அனுமதிக்கிறது. சம்சாரியாகவோ, துறவியாகவோ முழுவாழ்க்கையையும் எடுத்துச் செல்கிற அதிகாரம், ஆண்களுக்கு மட்டுமே உண்டு. பெண்களுக்கு அந்த உரிமை வழங்கப்படவில்லை.
அதனால் தான் அப்போது தோன்றிய முனிவர்கள் அனைவரும் பெண்களை தங்களுக்கு கோபமோ, ஆத்திரமோ வருகிற போதெல்லாம், தங்கள் இஷ்டம் போல சபித்து வந்திருக்கிறார்கள்.
அப்படித்தான் அகல்யா, கௌதம முனிவரால் கல்லாக போகும்படி சபிக்கப்படுகிறார். பெண்கள் உணர்ச்சியில்லாத, ஜடமாக இருக்கவே தகுதியானவர்கள். அவர்களின் உணர்ச்சிகளுக்கு இந்தச் சமூகத்தில் எந்த மரியாதையும் வழங்கப்படமாட்டாது என்பதே அதன் சூட்சுமம்.
கௌதம முனிவர் உண்மையாகவே ஞானம் பெற்ற முனிவராக இருந்திருக்கிறபட்சம், எப்படி இத்தனை கோபம் கொள்ள முடியும். பெண் என்பதாலா? தண்டிக்க நினைக்கிறவர் எப்படி ஞானியாக இருக்க முடியும்? அப்படியென்றால் எல்லாமே ஒரு வகை வேசமா?
உண்மையில் அவர் அகல்யாவின் அகவுணர்ச்சிகளை, காதல் உணர்ச்சிகளை, காமவுணர்ச்சிகளை மதித்திருக்கிறவராக இருந்திருந்தால் இப்படி நடந்திருப்பாரா? மன்னிக்க தெரியாதவரெல்லாம் எப்படி ஞானி என்று சொல்லி கொள்ள முடியும்? கணவன்மார்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களோடு ஏதோவொரு தருணங்களில் உறவு வைத்துக் கொள்வதில்லையா? சுஜாதா இப்படி சொல்வார். எப்போதும் ஒரு பெண். எப்போதாவது வேறு சில பெண் என்பார். மகிழ்வை உண்மையாக அனுபவித்திருந்த தாய் வழி சமூகத்தின் கூறு அது.

இதே நியதி தானே பெண்ணிற்கும். பெண்ணும் ஆறறிவு படைத்த ஜீவிதம் தானே. நியாயம் என்றால் இரண்டு பக்கமும் எல்லா விசயத்திலும் சரிசமமாக தானே இருக்க வேண்டும். தராசு முள் பாரபட்சம் இல்லாமல் அப்படித்தானே இயங்குகிறது. சமூகம் பெண் - ஆண் உரிமைகளில் தராசுமுள் மனங்கொண்டு இயங்காதபட்சம், பெண்களிடம் மட்டும் உண்மையை எப்படி இந்த பொய்மை சமூகம் எதிர்பார்க்க முடியும். அகல்யாவிற்கு தான் அத்தனையும் தெரியும். அவள் இந்திரனோடு விரும்பி சென்றாளா? தற்செயலாக அந்த உறவிற்குள் சென்றாளா? தனக்கே தெரியாமல் சென்றாளா? கௌதமருடைய அன்பின் போதாமையால், அரவணைப்பின் போதாமையால் சென்றாளா? எல்லாமும் தான். உண்மை எல்லா பக்கங்களிலும் கொஞ்சங்கொஞ்சமாய் ஒளிந்துகொண்டு தானிருக்கிறது.
அவருக்கு மன்னிக்கிற மனது இல்லாது போகிறபட்சம், அகல்யாவிடம் மனமொத்த தம்பதியர்களாக இனி இருக்க, ஆணாதிக்க மனநிலை ஒப்பவில்லை. அதனால், மியூச்சுவல் கன்சென்ட் என்கிற பரஸ்பர ஒப்புதலோடு நண்பர்களாக பிரிந்து விடலாம் என்று முறைப்படி அந்த உறவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தானே சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவளின் உடம்பு என் சொத்து. அதை அவள் எப்படி அவளுக்கு பிடித்த இன்னபிறரோடு பகிர்ந்து கொள்ள முடியும்? அப்படி செய்வதற்கு அவள் என்ன ஆணா? ஆண்களின் ராஜ்ஜியத்தில் அவள் இத்தனை உரிமைகளை எடுத்துக் கொள்வது என்பதை எப்படி ஒரு ஆணாதிக்க ஆணால் ஏற்றுக் கொள்ள முடியும்??
அப்படி நினைத்து தான், அகல்யாவை கல்லாக்கினார் கௌதமர்.
அப்படிப்பட்ட கௌதமர்களின் வழித்தோன்றல்கள் தான் இப்போது தங்களை நிராகரிக்கிற பெண்கள் முகத்தில் ஆசிட் அடிக்கிறார்கள். குடும்பம் என்கிற சமனற்ற அமைப்பிற்குள் பெண்களை திணித்து, வன்புணர்வு செய்கிறார்கள். அத்தனைவிதமான வன்முறைகளையும் சமூக அங்கீகாரத்தோடே நிகழ்த்துகிறார்கள்.
அதனால் இங்கே சராசரி பொதுபுத்திக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிற பெண்கள், வாழ்தல் பற்றியே சிந்திப்பதில்லை. இருத்தலே அவர்களுக்கான வாழ்தலாக கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களை சார்ந்திருக்க கற்பிக்கப்பட்டிருக்கிற பெருவாரியான பெண்கள் இந்த சமூகத்தில் உயிரோடு இருக்கிறார்கள். அவ்வளவு தான். வாழ்கிறார்களா என்றால், அதற்கு அர்த்தம் கூட அவர்களுக்கு தெரியாதபடி தான் இந்த சமூகம் அவர்களை பயிற்றுவித்து வைத்திருக்கிறது.
ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே பார்க்கலாம். கணவனும், மனைவியும் இரவு திரைப்படத்திற்கு செல்கிறார்கள். திரும்பி வரும்போது, சில ரௌடிகளால் வழி மறிக்கப்படுகிறார்கள். அவர்கள் கையில் ஸ்டிலட்டோ கத்தி மின்னுகிறது. கணவனை ஓடச் சொல்கிறார்கள். அவன் என்ன செய்வதென்று தெரியாமல், உயிர் பயத்தில் மனைவியை விட்டுவிட்டு வந்து விடுகிறான். சிறிது நேரத்தில் அந்த மூன்று ரௌடிகளும் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்கிறார்கள். அதன் பிற்பாடு அவள் கசங்கிய நிலையில் வீட்டிற்கு வருகிறாள். வந்ததும், நடந்ததை எல்லாம் கணவன் கேட்கிறான். கேட்டு விட்டு, இனிமேல் நாம் சேர்ந்து வாழ முடியாது. அதனால் என்னை விட்டுவிட்டு போய் விடு என்கிறான். உடனே அவள் சமையல் அறைக்கு செல்கிறாள். கெரசின் எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு அவன் கண் முன்னேயே பற்ற வைத்துக் கொள்கிறாள்.
சில வருடங்களுக்கு முன்னால் சேலத்தை சேர்ந்த வினுபிரியா என்கிற இளம்பெண் காதலிக்க மறுத்ததால், அவளின் முகத்தை வைத்து ஆபாசமான படங்களை மார்ஃபிங் செய்து சோசியல் மீடியாவில் உலவ விடுகிறான் ஒருவன். அந்த பெண் உடனே கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
தவறு செய்கிறவர்களுக்கு எதுவும் நடப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்களே இங்கே தண்டிக்கப்படுகிறார்கள். ஆணாதிக்க சமூகத்தின் நிலைபாடு அப்படித்தான். அது பெண்களின் உணர்ச்சிகளை, உணர்வுகளை பற்றி ஒரு நாளும் கவலைப்படுவதில்லை. அவர்ளை திருப்திப்படுத்த வெற்று வார்த்தைகள் போதும் என நினைக்கிறது இந்த சமூகமும், குடும்ப அமைப்பும்.
வளர்ந்த மேலை நாடுகளில் பெண்கள், பெண் உடல் அரசியலை உதறியெறிந்து விட்டு, ஆண்களுக்கு இணையாக எவ்வளவோ முன்னேறிச் சென்று விட்டார்கள். கீழை நாடுகளில் இப்போது தான் மெதுவாக அடியெடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இயந்திரன் படத்திலாவது பெண் ஊர் முன்னே நிர்வாணமாக நிற்க நேர்ந்து விட்டதை, ஒரு அவமானமாக கற்பிதம் செய்து கொண்டு உயிர் நீக்கிறாள். வினுபிரியா தற்கொலையிலோ, அவள் எதுவுமே செய்யவில்லை. எவனோ ஒருவன் அவளின் தலை பாகத்தை ஒரு படத்திலிருந்து எடுத்துக்கொண்டு, நிர்வாணமான வேறொரு உடம்பின் படத்தை சேர்த்து வைத்து, வினுபிரியாவின் படம் போல பொய்யாக மார்பிங் செய்ததற்காகவே உயிர் நீத்திருக்கிறாள். அந்த அளவிற்கு இந்த புரையோடிப் போயிருக்கிற சமூகம் பெண்களின் உயிர்நாடியில் அவர்களின் கௌரவத்தை, மரியாதையை ரகசியமாய் பொத்தி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது.
அப்படியாக பெண்கள் தொடர்ந்து அநியாயமாக அவமதிக்கப்பட்டு, தொடர்ந்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல், மிகுந்த பிரயத்தனங்களுடன் வளர்ந்து வரும் பெண்கள் யோசனையில் இருக்கையில், ஒரு கலகக்குரல் திரைநாயகியின் பக்கமிருந்து எழுந்திருக்கிறது. அந்த கதாபாத்திரத்தை அப்படித் தான் பார்க்க வேண்டும்.

அந்தப் படத்தின் பெயர் ‘சிலீப்பிங் பார்ட்னர்’. வாழ்வின் தேடல் குறித்த ஒரு சிறிய கதை என்று அர்த்தம் கொள்ளலாம். இதில் நாயகியாக நடித்திருப்பவர் திவ்யா தத்தா. இவர் ஏற்றிருக்கிற கதாபாத்திரத்திற்கு துல்லியமாய் அந்த சூட்சுமம், ஒரு கட்டத்தில் பிடிபட்டு விடுகிறது. அதை பார்ப்பதற்கு முன்னால் இதன் கதை சுருக்கத்தை பார்த்து விடலாம்.
திவ்யா நாற்பது வயதை தாண்டி விட்ட ஒரு பேரிளம் பெண். அவளுக்கு கல்லூரியில் படிக்கிற பெண் இருக்கிறாள். ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள். அவள் நவீனமானவள். எப்போதும் அம்மாவை சமையலறையில் அடைபட்டு கிடக்கிற அடிமை என்று திட்டுவாள். அது அவளுக்கு பழகிப் போன ஒன்றாகவே ஆகிவிட்டிருந்தது.
ஆனாலும், திவ்யா வடிவானவள். ஏழைப்பட்டவள். முகத்தில் இன்னவென்று கண்டுபிடிக்க முடியாதபடியான மோனாலிச புன்னகையின் சோகம் பாவியிருக்கிறது. ஓரளவு படித்தவள் தான். ஆனால், கணவனே சகலமும் என்று அவனை சார்ந்தே வாழ்ந்து விடுகிற வாழ்க்கையே அவளுக்கு வாய்க்கிறது. கணவன் ஒரு பிசினஸ்மேன். அவனுக்கு அவள் ஒரு உடமை பொருள். அவன் வாங்கி வைத்திருக்கிற பண்டம். அவளை விரும்புகிற போது, விரும்புகிற விதத்தில் பயன்படுத்தலாம். விரும்பாத போது ஓரமாய் தூக்கி வைத்து விடலாம்.
அவள் அவன் சொல்வதையெல்லாம் எந்தவித எதிர்ப்புமின்றி, தட்டாமல் செய்வதாலோ என்னவோ, அவனுக்கு அவள் சீக்கிரமே அலுத்து விடுகிறது. பெரும்பாலும் அவன் அவனது பாலியல் தேவைகளை வெளியிலேயே பார்த்துக் கொள்கிறான். இவளை எப்போதாவது போனால் போகிறதென்று தொடுவான். அப்போதும் அவளின் விருப்பம் பற்றி துளி கவலைப்படமாட்டான். அது தான் விதிக்கப்பட்ட வாழ்க்கையோ என நம்பிக்கொண்டு இத்தனை காலம் அவனின் மனம் கோணாமல் அவனுக்கு பிடித்த மாதிரி தன்னை துளியும் மதிக்காமல் அவனோடு இருந்து வருகிறாள். பாலியல் வறட்சியில் அவள் மனது தவிக்கிறது கூட தெரியாமல், அந்த வாழ்வை கடத்திக் கொண்டு இருக்கிறாள்.
இந்தத் தருணத்தில் ஒரு இளைஞன். மிகவும் வசதியானவன். அவனின் தந்தை அரசியல்வாதி. அவன் திவ்யாவின் கணவனோடு பார்ட்னர்ஷிப்பில் ஒரு பிசினஸை ஆரம்பிக்கிறான். இன்கம்டாக்ஸ் காரணங்களுக்காக அந்த பிசினஸை திவ்யாவின் பெயரில் வைத்துக் கொள்கிறான். அதனால் அந்த இளைஞன் அவளிடம் அக்ரிமென்டில் கையெழுத்து வாங்க வருகிறான். அப்போது திவ்யாவின் கணவன் சரத் தன் பிசினஸ் பார்ட்னர் ரவிக்கு அவளை சிலீப்பிங் பார்ட்னர் என்று புன்னகைத்தபடி அறிமுகப்படுத்துகிறான்.
அந்த நேரத்தில், அவளின் கணவன் அவளை ஒரு அடிமையை போல அலட்சியமாக நடத்துகிறதை பார்த்ததும் அவனுக்கு புரிந்து விடுகிறது, நிச்சயமாக அவனை அவளுக்கு பிடிக்காது என்கிற விசயம். அவனுக்கு ஆச்சர்யம். இந்த வயதிலும் இத்தனை அழகாக இருக்கிறாளே இவள்? இவன் அவளை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டேன் என்கிறான் என்கிற எண்ணம், அவனை அவள் பால் ஈர்க்கிறது.
அவள் அந்த ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட ஒரு சிறிய தலையனையை எடுத்து முட்டு கொடுக்கிறான். காரணம் அவளின் விரல் சமையல் செய்யும் போது வெட்டுப்பட்டு விட, பேன்டேஜ் சுற்றியிருக்கிறாள். அதற்கு வலிக்க கூடாது என்பதற்காகவே அவன் அவளுக்கு அந்த தலையணையை வைத்து உதவுகிறான். அவள் அவர்களுக்கு பஜ்ஜி பரிமாறுகிறபோது, ‘இவளோட உலகமே சமையலறை தான்.. சமையலறை ராணி’ என்கிறான் கணவன். வந்தவனோ, அவளை அருகில் அமர வைத்து மற்றொரு பிளேட்டில் இரண்டு பஜ்ஜியும் சாசும் எடுத்து வைத்து அவளை சாப்பிட சொல்கிறான். அது அவள் இது நாள் வரை அறிந்திராத கரிசனம்.
ஒரு நாள் அவனின் திருமண பத்திரிகையை தருவதற்காக அவளின் வீட்டிற்கு வருகிறான். அப்போது அங்கே அவள் கணவன் இல்லை. அவளிடம் தருகிறான். அவள் அவனுக்காக தேநீர் தயாரிக்கிறாள். அவன் பேசிக்கொண்டே அவளின் சமையல் அறை வந்து அவளை அவளின் திறமையை, அழகை வர்ணித்துக் கொண்டே, முன்னால் விழும் அவளின் கூந்தலை ஒதுக்கி விடுகிறான். நீங்க யாரையும் காதலிக்கலாம். அதுக்கான அத்தனை அழகும், அன்பும், அறிவும் உங்ககிட்ட இருக்கு என்கிறான். அவளுக்குள் திக்கென்றிருக்கிறது. அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தோன்றவில்லை. அந்த எதிர்பார்த்திராத கணத்தில் அவளுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. அவள் அவனிடம் அவர் வந்த பிறகு வாருங்கள் என்று சொல்லி கொண்டிருந்தாலும், அவள் மனது அவள் வசமில்லை. அந்த இடைப்பட்டவெளியில் அவன் அவளை லாவகமாக தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தவனாய், சட்டென அவளின் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டு விடுகிறான். அவளால் அதற்கு மேல் பெரிதாக எதிர்ப்பு காட்ட முடியவில்லை. அவளின் எதிர்ப்புகள் அங்கே எடுபடுவதுமில்லை. அவன் ஆவேசமாய் அவளை அணைக்கிறான். அப்படியே அள்ளிக்கொண்டு படுக்கையறை சென்று நிதானமாக அத்தனை பாடங்களையும் அவளுக்கு அறிமுகப்படுத்துகிறான். காம சூத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிற உறவிற்கு முன்பான சரசம், உறவு, உறவிற்கு பின்பான சரசம் என்று அவன் அவளிடம் அத்தனையையும் பிரயோகிக்கிறான். அவள் ஒரு நாளும் பாலுறவில் இத்தனை மகிழ்ச்சியை அனுபவித்ததில்லை. அது அவளுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது. தன்னுடைய கணவன் ஏன் இப்படி ஒரு போதும் நடந்து கொள்வதில்லை என்று முதன்முதலாக நினைக்கிறாள். அன்பென்கிற விசயம் இல்லாமல் போகிற போது, இயந்திரமயமாகி விடுவதென்பது இங்குள்ள உறவுகளின் நியதியோ என்று அவளுக்கு தோன்றுகிறது. அந்த உறவு சில முறைகள் தொடர்கிறது.
ஒரு முறை கணவனின் உதவியாளன் அந்த பார்ட்னர் இங்கே அடிக்கடி வந்து போவதை கவனித்ததாக அவனின் காதில் போட்டு விட, அவன் திவ்யாவிடம் விசாரிக்கிறான். திவ்யா அவனுக்கு தன்னை பிடிப்பதாகவும், தனக்கும் அவன் நடந்து கொள்கிற விதம் பிடித்திருப்பதாகவும் தெரிவிக்கிறாள். உடனே அவன், சற்றே அலட்சியமாய், அவன் நினைத்தால் அழகழகான பெண்கள் வரிசையில் வந்து நிற்பார்கள். போயும்போயும் உன்னையா அவன் தேடி வந்து கொஞ்ச போகிறான்? என்கிறான். உடனே அவளுக்கு எங்கேயோ உடைத்துக் கொண்டு வந்து விடுகிறது.
அந்த வேதனையில் இருக்கிற போது, கணவனின் பார்ட்னர் அவளை அழைக்கிறான். அவள் மனநிலை சரியில்லாததால், அந்த ஃபோனை கட் செய்கிறாள். உடனே அவனின் ஆணாதிக்க மனோபாவம் நட்டுக்கொண்டு வந்து விடுகிறது. அவன் ஒரு சொகுசான வியாபாரி. அதனால் அவளுக்கே தெரியாமல் அவர்கள் நெருக்கமாக இருந்ததை செல்ஃபோனில் வீடியோ எடுத்து வைத்திருக்கிறான். அதை உடனே அவளுக்கு அனுப்புகிறான். அவள் அதிர்ச்சியடைகிறாள். ஒரு சுவாரஸ்யத்திற்காக தான் என்று அலட்சியமாக பதிலளிக்கிறான்.
அவளுக்கு அவனின் போக்கு அந்த நொடியிலிருந்து பிடிப்பதில்லை. மனதிலிருந்து உடனே அவனை கத்தரித்து விடுகிறாள். அவளுக்குள் எத்தனை மென்மை இருக்கிறதோ, அந்த அளவிற்கு வன்மையும் ஒளிந்திருக்கிறது என்பது அதுவரை அவளுக்கே தெரியாமல் தான் அவளுக்குள் இருந்திருக்கிறது.
இப்போதும் திவ்யாவின் கணவன் அவளுக்கு மனோவியாதி வந்திருப்பதாக நினைக்கிறான். தன்னை இப்போதும் யாராவது ரசிப்பதாக கற்பனை செய்து கொள்கிற வியாதி என்று சொல்லி அவளை கிண்டலடிக்கிறான்.
உடனே அவள் அந்த வீடியோவை காட்டுகிறாள். அவள் அப்படியெல்லாம் உறைந்து போய் விடவில்லை. அவனின் அகங்காரம் தட்டி விடப்படுகிறது. உனக்கு மாசம் ஒரு தடவை குடுக்கற செக்ஸ் போதலையா.. வா.. திகட்ட திகட்ட தரேன் என்று வக்கரிப்போடு கத்தியவன், அவளை அவளின் விருப்பம் இல்லாமலேயே எப்போதும் போல வன்மத்தோடு பலாத்காரம் செய்கிறான். அவள் வேதனையில் துடிக்கிறாள்.
மறுநாள் மகளீர் காவல் நிலையத்தில் புகார் தருகிறாள். அங்கே வரும் கணவன் சரத் அதிர்ந்து போகிறான். பெண் இன்ஸ்பெக்டர் ஐ.பி.சி செக்சன் 498-ஏ அவன் மீது போடப்பட்டிருப்பதாக சொல்கிறாள். அவன் காரணம் கேட்கிறான். மேரிட்டல் ரேப்.. மனைவியின் ஒப்புதல் இல்லாமல் பலவந்தமாக அவளோடு செக்ஸ் வைத்துக் கொள்வது மற்றும் டொமஸ்டிக் வயலென்ஸ் என்கிறாள். அப்போது திவ்யா, ‘கணவன் என்கிற போர்வையில் கடந்த இருபது வருடங்களில் மாதம் ஒரு முறையாவது என்னை ரேப் செய்திருக்கிறார்’ என்கிறாள். அவன் இதை எதிர்பார்க்கவில்லை. வால் தானாக உள்ளிழுத்து கொள்கிறது. சமாதானமாக போவதாக சொல்லி, அவளை அழைத்து வருகிறான்.
அவளுக்கு மனநிலை பிறழ்வு ஏற்பட்டிருப்பதாகவே அவனுக்கு தோன்றுகிறது. சைக்கியாட்ரிஸ்ட் பார்க்கலாம் என்கிறான். சைக்கியாட்ரிஸ்ட் எனக்கு தேவையா, உங்களுக்கு தேவையா? என்கிறாள். அவன் உறைந்து போகிறான்.
அப்போது அவர்கள் வீட்டிற்கு கடுகடுப்போடு கணவனின் பார்ட்னர் ரவி வருகிறான். அவனுக்கு ஏற்பாடாகியிருந்த திருமணம் நின்று விட்டதாகவும், அத்தனைக்கும் காரணம் உன் மனைவி தான் என்று அவளை பார்த்து சீறுகிறான். அவள் கையில் வைத்திருக்கிற கத்தியில் ஆப்பிளை வெட்டி சுவைத்தபடி, ‘நீ எனக்கு தெரியாம வீடியோ எடுத்ததுமில்லாம, டெலீட் பண்ண மாட்டேன்னு சொல்லி, மிரட்டணும்னு நெனச்செ.. அதான் அந்த வீடியோவை உன்னை கல்யாணம் பண்ணிக்க இருந்தவளுக்கு அனுப்பி வச்சேன்.. இதோட அந்த வீடியோவை டெலீட் பண்ணிட்டு, போய்கிட்டே இரு..’ என்கிறாள். அவன் அந்த வீடியோவை அவளுக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் அனுப்பி, அவளை அசிங்கப்படுத்தாமல் விடமாட்டேன் என்கிறான். உடனே அவள் ‘இதோட விட்டேன்னு சந்தோஷப்படு.. இன்னும் என் விசயத்தில வாலாட்டுன, இந்த வீடியோவை எல்லா அரசியல்வாதிகளுக்கும் அனுப்பி வைப்பேன். உன் அப்பா எம்.எல்.ஏ தான. உடனே அந்தாளு பதவி பறிபோயிடும் தெரியும்ல..’ என்கிறாள்.
அவன் வாயடைத்து போகிறான். முதன் முதலாக சாது மிரண்டு விட்டதை உணர்கிறான். அத்தனை உக்கிரத்தை, அத்தனை சீற்றத்தை, அத்தனை சூட்சுமத்தை, அத்தனை தந்திரத்தை அவன் ஒரு பெண்ணிடமிருந்து எதிர்கொள்வது அதுவே முதல் முறை.
அவன் அவளை பார்த்து,‘உனக்கு அசிங்கமாவே இல்லையா?’ என்கிறான். ‘தப்பு செஞ்ச நீயே அசிங்கப்படலை.. அப்புறம் நான் எதுக்கு அசிங்கப்படணும்.. அசிங்கம்னா அது ரெண்டு பேருக்கும் தானெ.. உனக்கில்லாத அசிங்கம் எனக்கு மட்டும் எங்கயிருந்து வந்துச்சாம்’ என்கிறாள். அவன் அதற்கு பிறகு எதுவும் பேசவில்லை. அவள் முன்னாலேயே அந்த வீடியோவை டெலீட் செய்து விட்டு அங்கிருந்து வெளியேறுகிறான்.
ஊமையாய் அத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கணவனை பார்த்து,‘இனிமேல் என்னை நீ எப்பவுமே தொடக் கூடாது.. இன்னிக்கி டைன் அவ்ட்.. எனக்கு இந்த நாளை கொண்டாடணும்’ என்றபடி வெளியேறுகிறாள்.
உணர்வுகள் மதிக்கப்படாதவொரு உச்ச தருணத்தில், அவள் பெண் உடல் தடை அரசியலிலிருந்து முழுமையாக விடுபட்டு விடுகிறாள்.
அவளுக்கு உடம்பு இப்போது ஒரு தடையாக இல்லை. அவளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அவளின் உடம்பை முன்னிறுத்திய ஆணாதிக்க சமுதாயத்தின் தந்திரம் இனி அவளிடம் எடுபடப் போவதில்லை. அந்த புள்ளியில், அவள் உடம்பாலும், மனதாலும் பரிபூரண சுதந்திரம் கொண்டு விட்ட மனிதியாக தன்னை உணரத் துவங்குகிறாள்.*


Leave a comment
Upload