நல்ல தமிழ் சொல் தேடல்.

Philosophy என்ற சொல்லுக்கு தத்துவம் என்பது பொருத்தமற்ற மொழிமாற்றம்.
Philosophy ஒரு கிரேக்கச் சொல்லாக்கம். Philo என்றால் Love. Sophy என்றால் Wisdom.
Philosophy என்றால் அறிவின் மீதான ஈர்ப்பு என்பது தான் பொருத்தமுடைத் தமிழாக்கம் ஆகும்.
ஆனால் நாம் தமிழில் ‘தத்துவம்’ (வட மொழி) என்று மொழி மாற்றம் செய்து வழங்கி வருகின்றோம்.
தத்துவத்தின் மூலச்சொல் எது என்று தேடுகையில் நம் முன்னே ‘தத் துவம் அசீ’ என்ற உபநிடத மகா வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது. அத்வைதக் கோட்பாட்டின் அடித்தளமாய் அச்சொற்றொடர் அமைந்துளது.
அத்துவைதம் என்பது ஆதி சங்கரர் அளித்த Philosophy. ஆனால் அதை சார்ந்த ‘தத் துவம்’ என்ற சொல் Philo Sophy என்ற சொல்லுக்கு சரியான மொழிமாற்றம் என்பது ஏற்புடைத்தல்ல. மேலும் தத்துவம் என்ற சொல் தமிழ்ச் சொல்லும் அல்ல.
‘அறிவுத்தேடல்’ என்றோ அறிவு நாட்டம் என்றோ philosophyக்குப் பொருள் சொல்லிடலாம்.
இன்னும் பொருத்தமான சுருக்கமான சொல் ஒன்றைத் தேடிக் கிடைத்தால் மிக நன்றாகும். கிடைத்தாலும் தத்துவம் என்ற சொல்லை மாற்றுவது அத்தனை எளிதல்ல.
தத்துவப்பபள்ளி, தத்துவப் பேராசிரியர், தத்துவத்துறை. தத்துவ ஞானி எனப் பலவாறாக வேர்விட்டு நிலைத்து விட்ட தத்துவம் தமிழல்ல என்றாலும் அதுவே தான் வழக்கில் தொடர்ந்து நிற்கும்.
கிரேக்கத்துச் சொல்லாக்கம் ஆங்கிலத்தில் இருப்பது போல் வடமொழிச் சொல்லாக்கம் நம்மிடமே எத்தனையோ இருப்பன போல் இதுவும் இருந்து விடத் தான் போகிறது.
தமிழகத்தில் பஞ்சாயத்து என்ற வடசொல்லுக்கு மிகுந்த செல்வாக்கு. உள்ளூரின் நீதி மன்றம். நண்பரிடைப் பகை யென்றால் இன்னொருவர் இடைநின்று நெறியுரைத்து இணைத்து வைத்தல். அண்மையிலே கட்டப் பஞ்சாயத்து என்று புதிய தொரு சொல்லாடல் வந்துளது.
பஞ்சாயத்து எனும் சொல் பிற மொழி என்பதனால் அதைக் களைந்து தமிழ் இனிக்கும் சொல்லிங்கு ஆள வந்தால் நலமலவோ.
தேடுகையில் பண்டு தமிழாண்ட சேரமண்ணில் இன்று மலையாளம் நின்று நிலை கொண்டிருந்தாலும். ‘ஊர்க் கூட்டம்’ என்ற நல்ல தமிழ்ச் சொல்லை அவர்கள் இழக்காது கைக்கொண்டிருக்கும் நலம் கண்டு நமது மனம் மகிழ்ந்தாலும் நாமதனை ஏற்றிடத்தான் இயன்றிடுமோ? பட்டி தொட்டிகளில் பஞ்சாயத்து பழகி விட்ட சொற்றொடராய் ஆழமாய் நிற்றல் உண்மை.
முன்னாளில் தமிழ்க் குலத்தார் ‘ஐம்பேராயம்’ என்ற அமைப்பால் சிற்றூர்களில் ஆட்சி கண்ட வரலாறிவோம். ஆனாலும் அச்சொல் தமிழகம் முழுதும் ஏற்றிடச் செய்ய பெருமுயற்சி தளர்ச்சியின்றி அரசும் மக்களும் முயன்றால் நிறைவேற வாய்ப்புண்டு.

Leave a comment
Upload