
“சனியனே.. தண்டச்சோறு தண்டச்சோறு.. உன்னையெல்லாம் என் கழுத்துல கட்டி விட்டாங்க பாரு.. என் புது ஷர்ட் வீணாப்போச்சு.. ஒரு வேலையும் ஒழுங்கா பாக்க தெரியாது..”
“சாரிங்க..! துணி எல்லாம் சோப்புல ஊறப்போடும் போது, என் புது சுடிதார் சாயம் போகும்னு தெரியாம உங்க சட்டையையும் சேர்த்து ஊறவெச்சிட்டேன்.. ட்ரைக்ளீனிங்க் கொடுத்தா சட்டையில பட்ட கறை போய்டும்..!”
“அது புது சட்டை.. விலை என்னன்னு தெரியுமா உனக்கு..??! 2000 ரூபா .. க்ளையண்ட் மீட்டிங்குக்காக வாங்குனது... சோம்பேறி.. என் துணியெல்லாம் தனியா தோய்ச்சா என்ன கேடு உனக்கு.. வீட்ல சாப்பிட்டு சாப்பிட்டு தண்டமா தானே இருக்க.. நான் தான் உழைச்சுட்டு வந்து கொட்டுறேனே.. இந்த சின்ன வேலை கூட உன்னால கவனமா செய்ய முடியாதா?” என கௌதம் கோபமாக கேட்க...
கண்ணில் நீர் படர, உதட்டை கடித்து பொங்கி வந்த அழுகையை, தலையை குனிந்து அடக்க முயன்றாள் மிருதுளா.
தட்டில் வைத்த சாப்பாட்டை தள்ளி விட்டு “இதையும் நீயே கொட்டிக்க.. தண்டசோறு..!” என்றபடி ஷூவை அணிந்து பைக்கில் விர்ரென்று கௌதம் ஆஃபிஸுக்கு விரைந்தான்.
“தண்டசோறு” இந்த வார்த்தை, மீண்டும்.. மீண்டும் மிருதுளாவின் தலைக்குள் ரீவைண்ட் ஆனது. அப்படியே சோஃபாவில் கண்ணில் நீர் வழிய அமர்ந்து யோசித்தாள்.
கல்யாணம் ஆகி இந்த 10 வருஷங்களில், இந்த ஒரு வார்த்தையை தான் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறாள் மிருதுளா.
வீட்டுக்கு மிருதுளாவை பெண் பார்க்க முதன்முதலில் வந்த மாப்பிள்ளை வீட்டார் கௌதம் குடும்பம் தான். பார்த்தவுடனே இருவீட்டாருக்கும் பரஸ்பரம் பிடித்து போனது. கௌதமுடன் நிச்சயமாகி கல்யாணத்திற்கு முன் இடைப்பட்ட 3 மாத காலத்தில் எப்போதுமே புன்னகைத்த முகமும், மென்மையான பேச்சையும் பார்த்து... திருமணத்திற்கு பின் வாழ்க்கை ஒரு சொர்க்கம் போல இருக்கும் என்று கனவுகளில் மிதந்த மிருதுளாவை, திருமணம் ஆகிய 1 மாதத்திலியே கௌதமின் இந்த குணமாற்றம், அதிர்ச்சியை அளித்தது. சின்ன சின்ன விஷயங்களில் கூட அதீத கோபத்துடன், நெருப்பு சொற்களை வாரி இறைப்பது மிருதுளாவின் மனதை வெகுவாக காயப்படுத்தியது. முதன்முதலில் கருவுற்ற போது... வெளியே ஷாப்பிங் போன வேளையில் காலை சாப்பிட நேரம் இல்லாமல் “வா.. சீக்கிரம் வா..!” என்று கௌதம் அவசரப்படுத்தியதில்... சாப்பிடாமல் போனது, மசக்கையுடன் சேர்ந்து வயிற்றை பிரட்ட... “என்னங்க பசிக்கிற மாதிரி இருக்கு. ஏதாவது ஹோட்டல்ல சாப்பிடலாமா?!” என்று கேட்டதற்கு... “ஒரு வேளை சாப்பிடாட்டி, ஒன்னும் செத்து போயிட மாட்ட.. வீட்டுக்குபோயே சாப்பிட்டுக்கலாம்..” என்று கௌதம் கடுகடுவென்று பேச, வார்த்தைகளில் உள்ள கொடூரத்தை உணர்ந்து வாயடைத்து போனாள் மிருதுளா.
அம்மாவிடம் சொன்னாலோ.. “இதேல்லாம் ஒரு விஷயமா? உன்னை என்ன அடிச்சு கொடுமை பண்றாரு மாப்பிள்ளை..?! ஒரு சில ஆம்பளைங்க... வெளியே பெம்பளை பழக்கம், குடிப்பழக்கம்னு எவ்வளவோ மோசமா இருக்கானுங்க.. உன் புருஷன் அப்படி எல்லாம் இல்லையே.. அத நினைச்சு சந்தோஷப்படு. வெளியே போய் சம்பாதிக்கிற ஆம்பிளைக்கு, ஆயிரம் டென்ஷன் இருக்கும். அந்த டென்ஷன்ல சில வார்த்தைகள விடுறதெல்லாம் பெருசு பண்ணாத, சின்னப்புள்ளையாட்டம்” என்று திரும்ப இவளுக்கே அறிவுரை சொல்லப்பட்டது. அப்பா முன்கோபக்காரர். அவருக்கு தெரிந்தால் கௌதமோடு சண்டை போடுவதுடன் நில்லாமல், “நீ வந்துடு..!” என்று வீட்டோடு தன்னை கூப்பிட்டு போய்விடுவார்.
ஆனா எத்தனை காலத்துக்கு இந்த வசவுகளை கேட்பது..? இரு குழந்தைகள் பிறந்து... வருணுக்கு 8 வயசும், தன்யாக்கு 4 வயசும் ஆகுது. கௌதம் நாளாக ஆக இன்னும் மோசமாக தான் பேசினான். கோபம் இல்லாத மற்ற நேரங்களில் சகஜமாக பேசினாலும் “நான்” என்கிற அகங்காரம் மிகுந்தவனாகவே இருந்தான். வீட்டு விஷயங்களில் ஏதாவது ஒரு வார்த்தை அல்லது அபிப்பிராயம் எதுவும் மிருதுளாவால் சொல்ல முடியாது. “நீயெல்லாம் யோசனை சொல்ற அளவு இங்க நான் அவ்வளவு அறிவு கெட்டு போய் இல்ல..!” என்பான். ஒரு முறை கடுமையான தலைவலி என்று மிருதுளா படுத்துவிட, ஆஃபிஸ் விட்டு வீடு வந்தவன்... வீடு அலோங்கோலமாக கிடப்பதை பார்த்து “சுத்தத்துக்கும் உனக்கும் ரொம்ப தூரம்.. நீயெல்லாம் கக்கூஸில் சோறு போட்டா கூட உக்காந்து சாப்பிடுவ..!” என்று சொன்னதை இவள் இன்னும் மறக்கவில்லை...
இதுபோல் பல சம்பவங்கள். ஒருவரை அடித்துதான் காயப்படுத்த வேண்டும் என்பது இல்லை. இது போன்ற குத்தலான வார்த்தைகள் போதும். சுயமரியாதையை இழந்து, இன்னும் எத்தனை கேவலப்பட போகிறோம் என்று நினைத்தாலே மிருதுளாவுக்கு விசனமாக இருந்தது. ஆனால், தண்டச்சோறு எனும் வார்த்தை ரொம்பவே அவள் மனதை காயப்படுத்தியது. திருமணத்திற்கு முன் வேலைக்கு சென்று கொண்டிருந்த மிருதுளாவை, திருமணத்திற்கு பிறகு வேலைக்கு இனிபோக வேண்டாம் என்று சொல்லியதால் வேலையை விட்டாள்.
யோசித்து கொண்டே அமர்ந்திருந்தவள், ஒரு முடிவுக்கு வந்தவளாக எழுந்து நின்றாள். இரு குழந்தைகளுக்கும் பருப்பு சாதம் செய்து நெய்யுடன் ஊட்டிவிட்டு, தானும் கொஞ்சம் சாப்பிட்டவள் பாத்திர பண்டங்களை அப்படியே அடுப்பங்கரையில் போட்டுவிட்டு... குழந்தைகளின் உடுப்புகள், புடவை, துணிமணிகளை பெட்டியில் அடுக்கி எடுத்து சென்று ஹாலில் வைத்து விட்டு குழந்தைகளுடன் சோஃபாவில் அமர்ந்து, டிவி பார்க்க ஆரம்பித்தாள். சாயங்காலம் ஆஃபிஸ் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த கௌதம், வீடு அலங்கோலமாக இருப்பதை பார்த்து முகத்தை சுழித்து கொண்டே சோஃபாவில் வந்து அமர்ந்து... “என்ன வீடு, உன் விடியா மூஞ்சி மாதிரியே இருக்கு.. தண்டம், சோம்பேறி.. ஒரு வேலையும் பாக்கிறதில்ல.. என்ன அப்படியே உட்கார்ந்திருக்க? போய் காஃபி கொண்டா..! டயர்டா இருக்கு..!” என்றவனை வெறித்து பார்த்தாள் மிருதுளா.
“சொல்லிக்கிட்டே இருக்கேன்.. அப்படியே சோஃபாவை விட்டு நகராம இருக்க? என்ன பெட்டியெல்லாம் பேக் பண்ணி இருக்கு? எங்க போகப்போற?. நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. பதில் பேசாமா கம்முன்னு இருக்கே..! என்ன திமிரா??” என்று கோபத்துடன் கௌதம் கேட்டான்.
“இப்ப நான் சொல்றதை கொஞ்சம் அமைதியா கேளுங்க...” என்று கௌதமை நேருக்கு நேர் பார்த்தவாறு உட்கார்ந்து பொறுமையுடன், அதே சமயம் தீர்மானமாக பேச ஆரம்பித்தாள்...
“கல்யாணம் ஆகி 10 வருஷம் இந்த வீட்டுக்காக உழைச்சு கொட்டி இருக்கேன்.. உங்க அம்மாவை நல்லபடியா கவனிச்சு, அவுங்களோட கடைசி 2 வருஷ படுத்தப்படுக்கையா கிடந்தப்ப ஒரு தாதியா இருந்து, குழந்தையா பாத்துக்கிட்டேன்.. உங்க தங்கச்சி கல்யாணத்துக்கு நகை பத்தலனு நீங்க கையை பிசைஞ்சுகிட்டு நின்னப்ப, எங்கப்பா போட்ட 30 பவுன்ல 10 பவுன் நான் கொடுத்தேன். அவ தலைபிரசவத்தை நம்ம வீட்ல வச்சி ஆஸ்பத்திரியிலே கூடவே இருந்து, வீட்டுக்கு வந்த பிறகு தாயையும் குழந்தையையும் கவனிச்சு நல்லபடியா அவளை புகுந்து வீட்டுக்கு அனுப்பி வச்சேன்.
உங்களுக்கும் ரெண்டு வாரிசை பெத்து கொடுத்தேன். உங்களையும் உடம்பு முடியாதப்ப கவனிச்சு சரிபண்ணேன். Ofcourse உங்க பணத்தால் தான் குடும்பம் நடக்குது. நீங்க கடினமா உழைச்சு இந்தக் குடும்பத்துக்கு தேவையானத கொடுக்குறீங்க. அதை நான் மறுக்கல. ஆனா வெறும் பணம் மட்டும் ஒரு குடும்பத்தை நடத்த போதுமா? வீட்ல சமையக்காரியா..., கடையிலிருந்து காய்கறி முதற்கொண்டு சாமான் வாங்குறதுக்கும்.., வீட்ல தண்ணி கொண்டா.. காஃபி கொண்டா.. சாப்பாடு போடு..னு உங்க உத்தரவுக்கு அடிப்பணியும் ஒரு எடுபுடியா..., உங்களை, மாமியார், நாத்தனாரை, குழந்தைகளை கவனிக்கும் caretakerரா..., குழந்தைகளோட படிப்பு விஷயத்துல ஒரு கண்டிப்பான ஆசிரியரா.., குடும்பத்துல யாருக்காவது உடம்பு முடியலைனா கவனிக்கிற நர்ஸா.., குழந்தைகளுக்கு நல்ல குணங்களை சொல்லி தரும் ஒரு moral குருவா, உங்க நல்லது கெட்டதுக்கு எல்லாம் ஆறுதல் சொல்லி கூடவே நிக்கிற ஒரு தோழியா.., இந்த குடும்பத்துக்கே ஆதார தூணா நான் நிக்கிறேன்..! அது உங்களுக்கு புரியுதா?
நீங்க போடுற மூணு வேளை சோறுக்காக நான் இங்க இருக்கேன்னு நினைச்சீங்களா?.. இல்ல இந்த சோறு எங்கம்மா வீட்ல இருந்தா எனக்கு கிடைக்காதா? இத்தனை உழைப்பையும் வேற வீட்ல நான் பார்த்திருந்தா என உழைப்புக்கேத்த கூலி, இன்னைக்கு சில லட்சமா என் பேங்க் அக்கவுண்ட்ல இருந்திருக்கும். இத்தனை வேலை பார்த்தாலும், “தண்டசோறு”ங்கிற பட்டம் தான் எனக்கு கிடைக்குது. ஏன்னா... என்னோட உழைப்போட மதிப்பை நீங்க உணரல. இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க...! இத்தனை வருஷம் இந்த வீட்டுக்காக உழைச்சதுக்கு மதிப்பு போட்டா சில லட்சங்களை நீங்க எனக்கு கொடுக்க வேண்டிவரும். ஆனா என் மாமியார், நாத்தனாருக்கு செஞ்சத நான் விலை போட விரும்பல.. அதோட கடந்து போனவை கடந்து போனதாகவே இருக்கட்டும். ஆனா, இனிமே இந்த நாளிலிருந்து நான் சம்பளமில்லாத வேலைக்காரி இல்ல.. சமையல், வீட்டு வேலைகளிலிருந்து இந்த வீட்டுக்காக நான் பார்க்கும் மொத்த வேலைகளுக்கு மாசத்துக்கு 10000 ரூபா எனக்கு கொடுக்கனும். அந்த பணத்தை நான் எனக்கு, என் குழந்தைகளுக்காக செலவு செஞ்சுப்பேன்.. இல்ல.. சேர்த்து வச்சுக்குவேன். இன்னும் சொல்லப்போனா... உங்களுக்கு கூட புது ஷர்ட் வாங்கி கொடுப்பேன். இந்த உழைப்புக்கு இந்த சம்பளம் குறைச்சல் தான். ஆனா பரவாயில்லை.. இனிமே என்னை பார்க்கும் போதெல்லாம் நீங்க “தண்டச்சோறு”னு சொல்ல வரப்ப, அந்த பத்தாயிரம் ரூபா உங்க கண்ணு முன்னாடி வந்து நிக்கும். அதனால அந்த வார்த்தை இனி உங்க வாயில வராது. பத்தாயிரம் பணம் தர முடியாதுனு நீங்க சொன்னா, நான் எங்க அப்பா வீட்டுக்கு போயிடுவேன். நீங்க திட்டிக்கிட்டே போடுற 3 வேளை சோத்தை அவங்க என்னை திட்டாமலேயே போடுவாங்க. அது போதும் எனக்கு... எனக்கு நேரமும் அங்க நிறையா கிடைக்கும். என் படிப்புக்கு ஏத்த சில bridge courses முடிச்சிட்டு, நான் வேலைக்கும் போய் சம்பாதிப்பேன். எப்படி உங்க வசதி..??!!” என்று அமைதியாக கூறி சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்தவளைப் பார்த்து, அதிர்ச்சியுடன் வாயடைத்து நின்றான் கௌதம்.

Leave a comment
Upload