தொடர்கள்
கவிதை
ஜெய்ஹிந்த் செம்பக ராமன் எனும் தமிழன்... - இரா.சு.இராசன்

உயிர் நீப்பர் மானம் வரின்

20210727143702494.jpeg

தாயகத்தைப் பழித்துரைத்தால்
வாய்மூடிப் பொறுத்திருக்கும்
இழிவு அந்தத் தமிழனுக்கு
இயல்பல்ல என்பதனால்

விளைவெதற்கும் அஞ்சாமல்
வித்தகன் தன் வாய்த்திறமும்
ஒறுத்திடு மெழுத்தாலும்
கறுத்த மனத்தானை

மண்டியிடச் செய்தமையைக்
கண்டிருந்த நாஜியர்கள் மிகச்
சினந்து குள்ள நரிகளென
மனதுக்குள் திட்டமிட்டு

விழா ஒன்றுக்கு அழைத்து
விருந்துணவில் விடம்
கலந்துக் கயமை வழி
கண்டார் மெல்லவே

கொன்றிடவே வழி செய்து
கீழ்மையே குலவியல்பாய்
காட்டி விட்டார் உலகினுக்கு
காலம் அவர்களுக்குப்

பின்னாளில் பேரிழிவைப்
பேரழிவைத் தந்து பெரும்
உலகப்போரினிலே வீழக்
கலக்கமுற்று கோடிகளாய்

மக்களினம் கொன்றழித்த
மன்னிக்க முடியாத ஈனங்கள்
பல புரிந்த நாடெனவே
பலமிழந்து புகழிழந்து

நாடிரண்டாய்ப் பிரிந்து
நலம் கெட்ட வரலாறு
நாமறிவோம்.

திடம் கொண்ட தமிழ் வீரம்
விடம் கொண்டு நோதலுற்ற
உடல் தந்த துன்பத்தால்
துவண்ட கதை தொடர்ந்து
உரைப்பேன்.

****

பழி தீர்க்க எண்ணி அந்த
இழி குலத்தோர் தந்த
நஞ்சு, உள்ளிருந்துழற்றி
அஞ்சிடும் நிலை தரவே

மனைவியுடன் இத்தாலியில்
மருத்துவம் காணச்சென்றான்.
ஓரளவு நலம் பெற்று வீடு
சேரவென பர்லினுக்கு

வந்தவர்கள் நடுக்குறவே,
சொந்தமெனக் கொண்ட
வீடு சிதைந்து சீரழிந்து
தேடிச் சேர்த்த பொருள்

சிதற அழித்து வாழுமிடமின்றி
பதறி நிற்கப் பகைக்கூட்டம்
செய்திட்ட கொடுமை கண்டு
சோர்ந்து வழியேதுமின்றி அங்கு நாட்களெண்ணித்

தங்கித் துயர் தாங்கி நிற்க
அந்த ஒருநாள் துயராக
வந்து விடிந்ததுவே.

அந்த ஒரு நாள் பாரதமும்
பைந்தமிழர் நற்குலமும்
பேரிழப்பை பேரிடரைப்
பெருந்துயரைத் தாங்கும்
நாளாக வந்து விளைந்ததுவே.