
அஸ்வினியை வரவேற்போம்
நரிக்குறவர் வகுப்பைச் சேர்ந்த அஸ்வினி என்ற இளம் பெண்மணி சென்ற வாரம் அரசாங்கத்தையே யோசிக்க வைத்து விட்டார்.
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில், அன்னதானம் நிகழ்ச்சியில், சாப்பிட உட்கார்ந்த அவரை அதிகாரிகள் எழுப்பி விட்டது, பிரம்பால் அடித்ததை மன வேதனையை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. பொது இடத்தில் ஏற்பட்ட அவமானங்களை, தனது உள்ளக் குமுறலாக கொட்டித்தீர்த்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் இன்றுவரை வைரலாகி கொண்டிருக்கிறது.
அஸ்வினி கேட்கும் கேள்விகள் இதுதான்...
இந்த அரசு எங்களை மாதிரி ஏழைகளுக்கு, பசியைப் போக்க ஏற்படுத்தப்பட்ட திட்டம் தானே அன்னதான திட்டம்.
உங்கள் வீட்டுப் பணத்தில் இந்த அன்னதானம் போடவில்லையே... அரசாங்கம் தானே இதற்கு செலவு செய்கிறது.
நாங்களும் ஓட்டுப்போட்டு தானே இந்த அரசை தேர்ந்தெடுத்தோம்.
நாங்கள் படிக்கவில்லை என்பதால், நாங்கள் நரிக்குறவர்கள் என்பதால் உங்களுக்கு இளக்காரம் ஆகிவிட்டோமா.
நரிக்குறவர்கள் என்றால் கேவலமா? நாங்கள் ஊசிமணி, பாசிமணி வைத்து வியாபாரம் தான் செய்கிறோம். தினமும் குளிக்கிறோம், நாகரீகமாக தான் நாங்கள் நடந்து கொள்கிறோம். அப்படியிருக்கும்போது முதல் பந்தியில் மறுக்கப்பட்டு, இரண்டாவது பந்தியில் இலை போட்ட பிறகு எங்களை எழுந்துப் போக சொல்லி... வாசலில் காத்து இருங்கள், மிச்சம் மீதி இருந்தால் போடுவோம் என்று அவமானப்படுத்தியது எந்த வகையில் நியாயம்.
இளம்பெண் அஸ்வினியின் இந்தக் கேள்விகள் எல்லாம், அரசாங்கத்தின் மீது விழுந்த சவுக்கடிகள் என்பதுதான் உண்மை.
இந்த வீடியோ வைரலாகி, பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்க... முதலமைச்சர் கவனத்திற்கும் போக... அதற்குப்பின் அதிகாரிகள், அஸ்வினியை தேடி கண்டுபிடித்து, அதே தலசயனப் பெருமாள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபுவுடன் உட்கார்ந்து சாப்பிட வைக்கிறார்கள். அன்று விரட்டிய அதே அதிகாரிகள், அமைச்சர் அருகில் இருக்கிறார் என்பதால் அஸ்வினிக்கு ராஜ உபசாரம் செய்கிறார்கள்.
அதிகாரிகள் எல்லோரும் படித்தவர்கள். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது அவர்களுக்குத் தெரியும். இனம், ஜாதி பெயரால் பாரபட்சம் காட்டக் கூடாது என்பது அரசியல் அடிப்படை உரிமை என்பதையும் இந்த அதிகாரிகள் தெரிந்தும், மறந்து போனார்கள். இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் என்பது இந்தப் படித்த அதிகாரிகளுக்கு கோயிலில் இருந்து கொண்டே தெரியாமல் போனது வேதனை கலந்த ஆச்சரியம்.
கோயில் மட்டுமல்ல... எல்லா இடத்திலும் அஸ்வினிக்கு ஏற்பட்ட அனுபவம் எல்லாமே அவமானம் தான். அதை அவர் பட்டியலிட்டு சொல்கிறார்.
அவரது குடியிருப்புக்கு அருகே உள்ள பஸ்நிலையத்தில், இவர்களைப் பார்த்தால் பஸ் நிற்காது.
இவர்களின் வாரிசுகள் பள்ளிக்குப் போனால், இவர்கள் படித்து என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று கற்பிக்கும் ஆசிரியரின் எகத்தாளம்.
அவர்கள் குடியிருப்பில் கழிப்பறை வசதி இல்லை... தெரு விளக்கு, சாலை இப்படி நிறைய இல்லைகள்...
இப்போது அரசு விழித்துக் கொண்டேன்... அதிகாரிகள் செய்து தருகிறோம் என்று வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார்கள். இதை காலம் தான் கவனிக்க வேண்டும்.
அஸ்வினியை அனுமதிக்காத இடங்களின் பட்டியல் ரொம்பவும் நீளம். பள்ளி, திரையரங்குகள், உணவகம், வணிக வளாகங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...
இந்த தீபத் திருநாளில் நாம் எல்லோரும் ஒரு உறுதி மொழி எடுப்போம். அஸ்வினியை இருகரம் கூப்பி வரவேற்போம். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பதும், இறைவன் முன் அனைவரும் சமம் என்பதும் அப்போதுதான் நிஜமாகும்.

Leave a comment
Upload