
"உள்ளம் பெரும் கோயில்...ஊன் உடம்பே ஆலயம்"
என நமது முன்னோர்கள் வாக்கு.
எத்தனை செல்வம், அந்தஸ்து, வசதி இருந்தாலும் ஒருவரது ஆரோக்கியம் சரியில்லை என்றால் மற்ற அனைத்து இருந்தும் பயன் இல்லை. அதனால் பெரியவர்கள் இறைவனிடம் அனுக்கிரகம் செய்யச் சொல்லிக் கேட்கும் போது கூட ஆயுள், ஆரோக்கியத்தை முதல் சொல்லி விட்டு, அதற்குப் பிறகு தான் ஐஸ்வர்யத்தை வேண்டுவார்கள்.
முன்னோர்கள் நம் உடலையும் உள்ளத்தையும் பேணி காக்க ஆன்மீக வழிகளையும், வழிபாட்டு முறைகளையும் வகுத்துள்ளனர். நம் தமிழ்நாட்டில் தீராத நோய்கள் தீர்க்கும் பல கோயில்கள் உள்ளன. பண்டைய காலம் தொட்டே, நவீன மருத்துவத்தால் கைவிடப்பட்ட பல தீராத பிணிகளைத் தீர்க்கும் "தெய்வீக மருத்துவமனைகளாக" இக்கோயில்கள் போற்றப்படுகின்றன.
தமிழ்நாட்டில் அனைத்து விதமான உடல் மற்றும் மன பிணிகளைத் தீர்க்கும் முக்கிய கோயில்கள் மாவட்டம் வாரியாக
சிலவற்றை நாம் காண்போம்:

மண்டல வாரியாக மாவட்டங்களின் பட்டியல்
1. வட தமிழக மாவட்டங்கள் (North Region)
2. மத்திய தமிழக மாவட்டங்கள் (Central Region)
3. மேற்கு தமிழக மாவட்டங்கள் (West Region)
4. தெற்கு தமிழக மாவட்டங்கள் (South Region)
1. வட தமிழக மாவட்டங்கள் (North Region)
சென்னை மாவட்டம்
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்

இங்குச் சிவபெருமான், அகஸ்திய முனிவருக்குப் பல்வேறு மூலிகைகளின் மருத்துவ குணங்களையும் மருத்துவ முறைகளையும் உபதேசித்ததால் "மருந்தீஸ்வரர்" (மருத்துவ சிவன்) என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.
இக்கோயில் நாள்பட்ட பிணிகள் மற்றும் தீராத உடல் உபாதைகளைத் தீர்க்கும் மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலமாகப் போற்றப்படுகிறது.
பாரிமுனை காளிகாம்பாள் கோயில்
சென்னை நகரின் காவல் தெய்வமாக வணங்கப்படும் இக்கோயிலுக்கு, மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி வந்து வழிபட்டுச் சென்றுள்ளார். கொடிய நோய்களிலிருந்து விடுபட இக்கோயில் ஒரு சிறந்த பரிகார ஸ்தலமாகும்.
வடபழனி முருகன் கோயில்
குழந்தை இல்லாத தம்பதியர் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்து முருகனின் அருள் பெறுகின்றனர். வடபழனி ஆண்டவரை வேண்டிக்கொள்வதன் மூலம் கடுமையான பிணிகள், மன அழுத்தம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்
இக்கோவிலில் உள்ள 'இஷ்ட சித்தி தீர்த்தம்' என்ற குளம் மிகவும் புனிதமானது. இந்த இஷ்ட சித்தி தீர்த்தத்தில் நீராடி கச்சபேஸ்வரரை மனமுருகி வழிபடின், நாள்பட்ட நோய்கள், தீராத காய்ச்சல், வயிற்று உபாதைகள் நீங்கி உடல் நலம் பெறும் என்பது ஐதீகம்.
கூரம் கூரத்தாழ்வார் கோயில்
வைணவ ஆச்சார்யரான ஸ்ரீ ராமானுஜரின் முதன்மை சீடரான ஸ்ரீ கூரத்தாழ்வான் அவதரித்த திருத்தலம் இதுவாகும். கண் பார்வை குறைபாடுகள் மற்றும் கண் நோய்களைத் தீர்க்கும் மிகச்சிறந்த பரிகாரத் தலமாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது.
திருமாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில்
செய்யாற்றின் வடகரையில் அமைந்துள்ள, மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தொண்டை நாட்டுத் தலங்களில் இது 7-ஆவது சிவத்தலமாகப் போற்றப்படுகிறது.
எலும்பு, முதுகுத்தண்டு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணமாக்கும் ஒரு அற்புதமான பரிகாரத் தலமாக ஆன்மீக அன்பர்களால் போற்றப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம்
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் (தாம்பரம்)
பித்தப்பை கற்கள் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் தீர இங்கு மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
காட்டூர் உத்திர வைத்திய லிங்கேஸ்வரர் கோயில்
இங்குள்ள மூலவர் உத்திர வைத்திய லிங்கேஸ்வரர் என்றும், தாயார் தையல் நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். பிணி தீர்க்கும் வைத்தியநாதராக விளங்கும் இத்தலம் உடல்நலக் குறைபாடுகள் நீங்க வழிபட உகந்த இடமாகும்.
திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர்கோயில்
செங்கல்பட்டு அருகில் அமைந்துள்ள இப்பகுதி திருவடிசூலம் சம்பந்தரால் பாடல் பெற்ற பழமையான தேவாரத் தலமாகும். இங்குள்ள இறைவனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில்
இங்குள்ள பெருமாள் தன் வலது கரத்தை சாலிஹோத்ர முனிவரின் தலை மீது வைத்தும், இடது கரத்தால் மார்பைத் தொட்டும் 'சயன' (கிடந்த) கோலத்தில் காட்சி தருகிறார். பக்தர்களின் பிணிகளைத் தீர்ப்பதால் இவர்"வைத்திய வீரராகவர்" (Doctor Perumal) என்று அழைக்கப்படுகிறார். கடுமையான வயிற்று வலி, கைகால் குடைச்சல், மூட்டு வலி மற்றும் நாள்பட்ட தோல் வியாதிகள்உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் குணமாகும் என்பது பல தலைமுறை நம்பிக்கை.
திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயில்
பூசலார் நாயனார் தன் மனதிற்குள்ளேயே கட்டிய உலகப் புகழ்பெற்ற சிவத்தலாம் இது. இருதயம் (இதயம்) சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள், ரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இங்கு வந்து சிவனையும், அவர்தம் இதயப் பகுதியில் கை வைத்தபடி இருக்கும் பூசலாரையும் தரிசித்துக் குணமடைகிறார்கள்.
திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில்
தேவாரப் பாடல் பெற்ற புகழ்பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலமாகும். நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், உயர்/குறைந்த இரத்த அழுத்தம் போன்ற தீவிர நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து மாசிலாமணீஸ்வரரையும், கொடியிடை அம்மனையும் மனமுருகி வழிபட்டுச் சிறப்புப் பரிகாரங்கள் செய்து நலம் பெறுகிறார்கள்.
ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் கோயில் (ஞாயிறு கிராமம் செங்குன்றம் அருகில்)
கண் பார்வை குறைபாடுகள். ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குச் சூரிய பகவானுக்குக் கோதுமைப் பொங்கல் படைத்து வழிபடக் கண் நோய்கள் குணமாகும்.
பேரம்பாக்கம் சோழிஸ்வரர் சுவாமி கோயில்
இக்கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்(Neurological Problems) மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் குணமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதற்கான பரிகார விவரங்கள் கோவில் சுவரிலும் குறிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம்
சந்தவாசல் கங்கையம்மன் கோயில்
கங்கையம்மன் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படும் தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் புனிதமானதாகவும் கருதப்படுகின்றது. பக்தர்களின் தீராத நோய்கள், உடல் உபாதைகள் மற்றும் அம்மை நோய்கள் இந்த தீர்த்தத்தை அருந்துவதன் மூலம் நீங்குவதாக மக்கள் நம்புகின்றனர்
படவேடு ரேணுகாம்பாள் கோயில்
இத்தலத்திற்கு அம்மை நோயால் (Smallpox) பாதிக்கப்பட்டவர்கள் வந்து சில நாட்கள் தங்கி, இக்கோயிலின் வேப்பிலை தீர்த்தத்தை அருந்தி, உடம்பில் தெளித்துக் கொண்டால் 3 அல்லது 4 நாட்களில் நோய் முற்றிலும் குணமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை
இங்கு வழங்கும் விபூதி பிரசாதம் தீராத நோய்களைத் தீர்க்கும் வல்லமை கொண்டது என்று நம்பப்படுகிறது. ஆனி மாதத்தின் கடைசி நாளில் நடத்தப்படும் யாகசாலையில் இருந்து சேகரிக்கப்படும் இந்த விபூதி பிணிகளைப் போக்கும் அருமருந்தாகக் கருதப்படுகிறது.
வேலூர் மாவட்டம்
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில்
சுவாசக் கோளாறுகள் (ஆஸ்துமா), நெஞ்சுச் சளி மற்றும் காய்ச்சல் உபாதைகள் குணமாகும். வேலூர் கோட்டையின் உள்ளே தண்ணீரின் நடுவே அமைந்துள்ள இக்கோவிலின் ஈசனை வழிபட, உடலின் வெப்பம் தணிந்து நலம் கிட்டும்.
விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயில்
கண் பார்வை மற்றும் உடல் நலக் குறைபாடுகளைத் தீர்க்கும் மிகச் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் உள்ள 'சிம்மக் கிணறு' என்ற தீர்த்தம் மிகவும் புனிதமானது. கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபடக் கண் நோய்கள் யாவும் குணமாகும் என்பது ஐதீகம்.
இராணிப்பேட்டை மாவட்டம்
சோளிங்கர் யோக நரசிம்மர் மற்றும் யோக ஆஞ்சநேயர் கோயில்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் (திருக்கடிகை) மலைக்கோவிலில் நரசிம்மரும், சிறிய மலையில் ஆஞ்சநேயரும் யோக முத்திரையில் அமர்ந்துள்ளனர். இங்குள்ள 'தக்கான் குளம்' என்ற தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை ஒரு 'கடிகை' நேரம் (24 நிமிடங்கள்) தியானித்து உருகி வழிபட்டால் மனநலப் பாதிப்புகள், மன அழுத்தம், தீய சக்திகளின் பயம் மற்றும் நீண்ட நாள் உடல் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
இங்குச் சிவலிங்கத்தின் மீது பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அதியற்புத ஹரிஹரன் தலம். தீராத நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள், இங்குள்ள புண்டரீக தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வணங்கிச் சென்றால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ஞானமலை முருகன் கோயில்
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற பழமையான மலைக் கோயில் இதுவாகும். முருகப் பெருமானின் பாதச் சுவடுகள் பதிந்த புனிதமான தலம். இங்குள்ள 'அங்கப்பிரதட்சிண மண்டபத்தில்' அமர்ந்து தியானம் செய்வதும், மலையேறி முருகனை வேண்டி அங்கப்பிரதட்சிணம் செய்வதும் உடலில் உள்ள நாள்பட்ட பிணிகளை நீக்கி, மன அமைதியைத் தரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் பிரசன்ன பார்வதி சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோயில்.
இங்குள்ள சிவபெருமான் "நஞ்சுண்டேஸ்வரர்" (விஷத்தை உண்டவர்) என்ற திருநாமத்துடன் அருள்கிறார். விஷக்கடிகள், தீராத நோய்கள் மற்றும் உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டு நலம் பெறுகிறார்கள். இக்கோவிலின் 'பெரியகுளம்' தீர்த்தம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.
வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்
வாணியம்பாடியில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோயிலாகும். தேவமாதா அதிதி பூஜித்த தலம் என்பதால் இது "அதிதீஸ்வரர் கோயில்" என்று அழைக்கப்படுகிறது. நாள்பட்ட உடல் பிணிகள் நீங்கவும், ஆயுள் பலம் பெறவும் மக்கள் இங்கு வந்து சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் பரிகாரங்கள் செய்கிறார்கள்.
கட்டேரி அம்மன் கோயில்
திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் காட்டேரி கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இங்குச் சிறப்புப் பூஜைகளும் அருள்வாக்கும் நடைபெறும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகளால் ஏற்படும் மனநல பாதிப்புகள், விசித்திரமான உடல் உபாதைகள் மற்றும் தீராத நோய்களுக்கு இங்குப் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டம்
திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில்
இக்கோயில் திண்டிவனம் அருகே சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
மனநலப் பாதிப்புகள், செய்வினை மற்றும் தீராத பயம் மற்றும் மனக்குழப்பத்தால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைத் தீர்க்கும் முதன்மைத் தலம். இங்குள்ள வக்ர காளியைப் பௌர்ணமி நாட்களில் வலம் வந்து தரிசிப்பது விசேஷம்.
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்
இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையான தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலமாகும். இத்தலத்து சிவனார் நேத்ரோதாரகேஸ்வரர் (கண் பார்வை அளித்த இறைவன்) என்றும் அழைக்கப்படுகிறார். விழி இழந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சிவபெருமான் இங்குதான் மீண்டும் கண் பார்வையை அருளினார் என்பது தல வரலாறு.
இங்கு வந்து வேண்டிக்கொண்டால் கண் தொடர்பான அனைத்துக் கோளாறுகளும், பார்வைக் குறைபாடுகளும் நீங்கும் என்பது பக்தர்களின் தீவிர நம்பிக்கையாகும்.
பேரங்கியூர் திருமூலநாதர் கோயில்
சோழ மன்னன் முதலாம் பராந்தகனால் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த சிவதலமாகும். இத்தலத்தில் சிவபெருமானை மனதார வழிபட்டு, சில பிரத்தியேக வழிபாடுகளைச் செய்வதன் மூலம் புற்றுநோய் (Cancer) போன்ற தீராத மற்றும் தீவிர நோய்களின் தாக்கம் குறைந்து முழு நிவாரணம் பெறலாம் என நம்பப்படுகிறது. மேலும், இங்குள்ள இறைவனுக்குச் சந்தனக் காப்பு சாத்தி வழிபடச் சந்தான பாக்கியம் (குழந்தைப் பேறு) கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மனநலம் சார்ந்த பிரச்சனைகள், தீராத வயிற்று வலி மற்றும் பில்லி, சூனிய பாதிப்புகள். மயான சூறையன்று இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்
பெருமாள் தனது திருவடிகளால் உலகை அளந்தவர் என்பதால், இங்கு வந்து அவரது திருவடிகளைச் சரணடைந்து வேண்டிப் பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு மூட்டு வலிகள், எலும்பு தேய்மானம், முடக்குவாதம் மற்றும் நீண்ட நாள் உடல் பலவீனம் போன்ற கால்கள் தொடர்பான அனைத்து நோய்களும், பிணிகளும் நீங்கும் என்பது மிகப் பலத்த நம்பிக்கையாகும்.
தச்சூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
இக்கோயிலில் ஒரே வளாகத்தில் 5 சுயம்பு லிங்கங்கள் தரைமட்டத்திலிருந்து 5 அடி உயரத்தில் அமைந்துள்ளன. ஆயுள் விருத்திக்கும், தீராத உடல் பிணிகள் மற்றும் நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக இது கருதப்படுகிறது.
கடலூர் மாவட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் அங்குள்ள சிவகங்கை தீர்த்தத்திற்குக் குஷ்ட நோய் (Leprosy) மற்றும் தீராத தோல் நோய்களைக் குணமாக்கும் ஆன்மீகக் குணம் இருப்பதாகப் புராணங்களும் வரலாறும் கூறுகின்றன. வரலாற்றின்படி, இரண்யவர்மன் என்ற மன்னன் இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்றான். இன்றளவும், தோல் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு நோய் குணமாக வேண்டும் என்று சிதம்பரம் சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, நடராஜரையும் சிவகாமியையும் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில்
'விருத்தாம்பிகை' என்ற பெயரே முதுமையைக் குறிப்பதால், வயதான காலத்தில் ஏற்படும் உடல் பலவீனம், மூட்டு வலி, நரம்புத் தளர்ச்சி மற்றும் பக்கவாத நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இங்கு வழங்கப்படும் பிரசாதங்களை உட்கொண்டு, மனதார வேண்டிக் கொண்டால் நரம்புகளுக்குத் தனி பலம் கிடைக்கும் என்பதும், முதுமைக்கால நோய்களின் வீரியம் குறையும் என்பதும் பக்தர்களின் அனுபவப்பூர்வமான நம்பிக்கை.
மருதூர் மருதாந்தேஸ்வரர் கோயில்
வடலூர் அருகே உள்ள மருதூர் மருதாந்தேஸ்வரர் கோவில் ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் பக்தர்களால் மிகவும் போற்றப்படும் ஒரு புனிதத் தலமாகும்.
இந்த கோயிலில் உள்ள மருத மரத்தை வலம் வந்து, இறைவனை மனமுருகிப் பிரார்த்தித்தால் இருதய நோய்கள், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகள் மற்றும் நீண்ட நாள் உடல் பலவீனம் ஆகியவை குணமாகும் என்பது பக்தர்களின் பலத்த நம்பிக்கையாகும்.
அடுத்த வாரம் மத்திய தமிழக மாவட்டங்கள் (Central Region) கோயில்கள்

Leave a comment
Upload