தொடர்கள்
கதை
MET- கல்யாணத் தகுதித்தேர்வு -பா அய்யாசாமி

20260825233027205.jpg


இதோ உடனே வந்திடறேன்னு போன உனக்கு திரும்ப வர இத்தணை நேரமா? என்று அதிகாரமாக கேட்ட அய்யாசாமியை அதிசயமாகப் பார்த்தாள் ருக்கு.

ஏன் என்னாச்சு உங்களுக்கு என்றாள்

நம்ம பகுதியிலே கொடியேற்றப் போறாங்க, நேரத்திற்குப் போக வேண்டாமோ ?

அக்கம்பக்கம் போகவோ,சிறிது நேரம் கழிக்கவோ எனக்குச் சுதந்திரமில்லை, சுதந்திரநாளை நீங்க கொண்டாடப்
போறேள்,பேஷ்! என்றாள் ருக்கு.

ஏற்கனவே நமக்கு சந்திராஷ்டம்,இதிலே சனிக்கிழமை வேற வாயைக்கொடுத்து எக்கச்சக்கமாக இவள்கிட்டே மாட்டிகி்ட்டோமோ என பயந்தவாறே கொடியேற்ற புறப்பட்ட
அய்யாசாமிக்கு
போயிட்டு....'வாங்கோ' என ருக்கு அழுத்தி சொன்னதும் மனத்திற்குள் பீதி கிளம்பியது.

கையில் கொடியும், மிட்டாயகளுடன் திரும்ப வந்த அய்யாசாமியை,

ஏன் இத்தனை நேரம்? கொடியேற்றிவிட்டு நம்ம முதலமைச்சரே வீட்டிற்குப் போயிட்டார் உமக்கு என்ன? என்றதும்,

நல்ல விசயந்தான் ருக்கு,எதிராத்து சுந்தரம் தன் பொண்னுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கானாம்,
அவனோட தூரத்துச் சொந்தமாம்,நல்ல வசதியானவர்களாம்,கூட்டுக்குடும்பமாம்,
அதை அந்த பொண்ணு ஒத்துக்க மாட்டேங்கிறதாம், பெண்ணிடம் பேசுங்கோ,கொஞ்சம் புத்தி சொல்லுங்கோ என்றார்,

நீங்கள் என்ன சொன்னேள் அதற்கு ? கேட்டாள் ருக்கு.

அதற்கென்ன பேஷா பேசி முடிச்சுடறேன் என்றேன்.

ஓஹோ,என்னை மீறி முடிச்சிடுவேளா நீங்க?
என்றாள் தலையை முடிந்துக்கொண்டே..

என்னை ஏன் லேட்டுனு கேட்டேளே,அவள் அம்மாதான் என்கிட்டே பேசிண்டிருந்தா, வரனாக வந்துள்ள பையன் மாமி சைடிலே சொந்தமாம், நல்ல படிப்பு,கை நிறையச் சம்பளம்,ஆத்திற்கு ஒரே புள்ளையாம், அதையும் வேண்டாங்கிறாள் கொஞ்சம் பேசுங்கோ அவகிட்டே என்று கவலைபட்டார்கள் அதனால்தான் நானும் தாமதமாக வந்தேன் என்றாள் ருக்கு.

சரியான போட்டி! பார்ப்போம் நம்மில்
யார் பேச்சை அது கேட்கிறது? எந்த பையனைக் கல்யாணம் செய்துக்கொள்ள சம்மதிக்கப்போகிறது,
அவ அப்பா சொல்கிற பையனா, இல்லை அம்மா சொல்கிற பையனா? என வேகமாகச்சிரித்த அய்யாசாமியை பார்த்து,

என்ன ஏறிடுத்தா ? என்றாள்

என்ன, எது? என்றார்

கொடினா ? கொடியைக்கேட்டேன் என்றபடி வேறு வேலையில் மூழ்கினாள் ருக்கு.

மாலை ருக்கு வீட்டிற்கு வந்த ஜனனியை

காபி சாப்பிடறீயா? மாமா நன்னா போடுவேன் என்றபடி வந்தார் அய்யாசாமி.

வேண்டாம் மாமா இப்போதான் சாப்பிட்டேன்,அப்பா நீங்க வரச் சொன்னதாகச் சொன்னார் அதான் வந்தேன்,என்ன விசயம்? மொபைலில் ஏதும் பிரச்சனையா மாமா என கேட்டாள் ஜனனீ

இல்லை என்றவர் எப்படி விசயத்தை ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்தார்.

போய்யா வேலையைப் பார்த்துண்டு சொல்லிட்டா? அசிங்கமாகப் போயிடுமே,ருக்கு வேற என்னையே கண் விலக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்ன செய்ய...ம்
என யோசித்தார் அய்யாசாமி.

ஸ்டார்டிங் டிரெபிள்ளான்னா..
ஜனனீ இங்கே வாம்மா என்றாள் ருக்கு.

உன் அம்மா எல்லா விசயமும் சொன்னார்கள்,நல்ல குடும்பம்,தெரிந்த மனிதர்கள்,ஒரே பையன் நல்ல படிப்பு, ஐந்து இலக்கச் சம்பளம்,அப்புறம் ஏன் வேண்டாம்னு சொல்கிறாள் என ஆதங்கப்படுகிறாள் உன் அம்மா..
உன்னை நான் காட்டாயப் படுத்தவில்லை காரணம் மட்டும் சொல்லிடு மீதியை நான் பார்த்து பேசி விடுகிறேன் உன் அம்மாவிடம் என தலையைக்கோதி பூவினை அவள் தலையில் ஆசையாய் வைத்துவிட்டாள் ருக்கு.

ஆஹா.. ருக்கு நல்ல ஸ்கோர் பண்ணிடுவா
என மனத்திற்குள் நினைத்தார் அய்யாசாமி.

மகிழ்ச்சியாகி சிரித்தபடி அங்கியிருந்து நகர்ந்து வந்த ஜனனீயை நிறுத்தி,

ஏம்மா! அப்பா சொன்ன பையன் நல்ல வசதியாம், Joint Family, கிராமத்திலே எக்கச்சக்க அசையாச் சொத்துகள் இருக்காம்,ராணி மாதிரி வாழலாம் என சொல்கிறார் அதை ஏன் வேண்டாம் என்கிறாய்,வளர்த்து ஆளாக்குகிற வரை அப்பா வேண்டும், மணம் முடிக்க அப்பாவும் வேண்டாம் ஆட்டுக்குட்டியும் வேண்டாம் என்ன நினைக்கிறது தப்பில்லையோ என்றார் அய்யாசாமி.

பூமர் மாதிரி பேசாதீங்கோ மாமா..
நீங்க மாமி அளவிற்கில்லை என்றதும்

கொல் எனச் சிரித்தாள் ருக்கு.

சந்திராஷ்டமம் நன்னா வேலை செய்யறது போல.. சின்ன பொண்ணு நம்மைப்பார்த்து பூமர்னு சொல்றதே,
கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமே! என யோசித்தார்.

அப்பா,அம்மா இருவரும் உனக்கு எது நல்லது என பார்த்துதானே செய்வார்கள், அதனால்தான் அவர்கள் சொந்தத்திலே பையன் அமைந்து விட்டால் உன் வாழ்க்கை பிக்கல் பிடுங்கள் இல்லாமல் நன்றாக இருக்கும் என ஆசைப்படுகிறார்கள் என்றாள் ருக்கு.

அவர்கள் ஆசைப்பட உரிமையுண்டு மாமி, ஆனால் எனக்கும் பிடிக்கணுமில்லே, உங்ககிட்ட சொல்கிறேன் மாமி, நான் வேறு ஒருவரை நேசிக்கிறேன், அவனும் என்னை உயிராக நேசிக்கிறான்
என்றாள் ஜனனீ.

ஓ..ஓ நீ இதை அப்பா அம்மாவிடம் சொன்னியா?! என்று கேட்டார் அய்யாசாமி.

இவள் அதை பெற்றோர்களிடம் சொன்னதினாலே
தான் நம்மகிட்டே பேச சொல்லி அவர்கள் அனுப்பியுள்ளார்கள் என கணித்த ருக்குவை ஆச்சரியமாகப் பார்த்தனர் இருவரும்.

மாமி இதிலென்ன வேடிக்கை என்றால், நான் நேசிப்பவரை இருவருக்கும் தெரியும் அவர்களுக்கும் ஓகே தான் ஆனால் அவர்களது ego அவர்களைத் தடுக்கிறது என்றாள் ஜனனீ.

அப்படியா! சுந்தரம் அதைச் சொல்லாமல் மறைச்சுட்டானே என வாயைப்பிளந்தார் அய்யாசாமி.

அப்போ மூன்று பேரும் நம்ம ஊருதான், நல்ல இடம்,நல்ல பையன், நல்ல படிப்பு இதில் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் பெற்றோர்கள் குழம்பியுள்ளார்கள் என தெரிய வந்தது ருக்குவிற்கு.

மூன்றுமே நல்ல பையன்கள்தான் என்ற ருக்குவை

அதற்காக இவ என்ன பாஞ்சாலியா என அய்யாசாமி கேட்டதும்

சகிக்கலை!
என தலையில் அடித்துக்கொண்டாள் ருக்கு.

மூவருள் ஒருவரை தேர்ந்தெடுப்பது
போல பெற்றோர்களுக்கு காட்டி, நீ விரும்பியவனை அவர்களாகவே
மணம் செய்து வைக்கிறமாதிரி டெஸ்ட் ஒன்று வச்சுடுறேன் என்றாள் ருக்கு.

என்ன டெஸ்ட்?!

MET,மாப்பிள்ளை எலிஜிபிள் டெஸ்ட் என்ற ருக்கு.

ஆமாம் உனக்கு என்றைக்கு Group exam,கேட்டாள் ருக்கு.

நாளை ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு மாமி என்றது ஜனனீ.

நம்ம டெஸ்ட்டும் நாளைக்கே வச்சிடுவோம், காலையில் குருப் தேர்வு இருக்கு என மூவரிடமும் கூறி உன்னை தேர்வு மையத்திற்கு அழைத்துப் போகும்படி அவர்களிடம் சொல் என்று அய்யாசாமியின் காதில் விழும்படி சற்று சப்தமாக சொல்லி ஜனனீயை அனுப்பி வைத்தாள் ருக்கு.

காதில் வாங்கிய அய்யாசாமி,
சுந்தரத்திடம் நாளை நடக்கும் MET பற்றிய விசயத்தைச் சொல்லி
அவரது சொந்தக்காரப் பையனை என்ன வேலையாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி விரைவாக வந்து ஜனனீயைத் தேர்விற்கு அழைத்துப் போகச் சொல் என்றவர் ருக்கு திட்டம் போட்டால் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்று அவரிடம் கூறினார்.

மறுநாள் ஜனனீயின் தேர்வு நாள். காலை 9.00 மணிக்கெல்லாம் எதிர் வீட்டிற்கு கிளம்பிய ருக்குவிடம், நானும் வருகிறேன் என உடன் கிளம்பினார் அய்யாசாமி.

இரு தேர்விற்கும் தயாராகி காத்தியிருந்தாள் ஜனனீ வீட்டில்.

சுந்தரம் மற்றும் அவர்களது மனைவியிடம், மூவரைப்பற்றியும் எனக்குத்தெரியாது ஆனால் மூவரில்
ஜனனீக்கு யாரொருவர் பொருத்தமானவர் என நான் இன்று சொல்கிறேன் நீங்களும்,ஜனனீயும் ஒத்துக்கொண்டாள் தாராளமாக மணம் முடித்து வையுங்கள் என ருக்கு சொல்லவும்
சரியென்று ஒப்புக் கொண்டனர் பெற்றோர்.

காலை 9.10 மணிக்கு முதலில் சுந்தரம் சொன்ன பையன் தனது இருசக்கர வாகனத்தில் வந்ததும், அய்யாசாமியும்,
சுந்தரமும் தங்களது கட்டைவிரலை உயர்த்திக் காண்பித்துக் கொண்டனர்.

தேர்விற்கான வினா அய்யாசாமி மூலமாக சுந்தரத்திற்கு வெளியாகிருக்கிறது என்பதை கவனித்துக் கொண்டாள் ருக்கு.

9.15 மணிக்கு தலையில் கவசம் அணிந்து ஒரு வண்டி வரவும்,இவன்தான் காதலனாக இருப்பான்போல, முகத்தை மூடிக்கொண்டு ஏன் வரணும் என யோசித்தாள் ருக்கு.

9.20 மணிக்கு ஒருவர் வர அவனும் தலைக் கவசத்துடனே வரவும் சற்றே குழம்பிப் போனாள் ருக்கு.

இதில் யார் ஜனனீயைக் காதலிப்பவர் என கண்டு பிடிப்பதில் தடுமாற்றம் அடைந்த ருக்கு,சுதாரித்து முகத்தில் புன்முறுவள் பூத்தது.

ஐனனீயை தேர்விற்கு வழியனுப்பி வைத்தனர் பெற்றோர்கள்.

வெளியே வந்த ஜனனீயை கடைசியாக வந்தவர் கூட போம்மா என்றதும், அவரிடமிருந்த மற்றொரு தலைக் கவசத்தைப் பெற்று அதை அணிந்துக் கொண்டு மகிழ்வோடு கிளம்பிச் சென்றாள் ஜனனீ.

மற்ற இருவரையும் உள்ளே அழைத்து காபி கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தனர் சுந்தரமும் அவரது மனைவியும்.

மாமி,நீங்களும் எம்பொண்ணும் நினைச்சதை சாதிச்சுட்டேள், நான்தான் இனி சொந்தங்களை நாங்க சமாளிக்கணும் என்ற சுந்தரம்,கேள்வித்தாள் முன்னயே ரிலிஸ் ஆயிடுத்து அதானே வெற்றிக்கு காரணம் என்றார்.

கேள்வி தயாரித்தவாளே வெளியிடுவாளா என்ன?!சில கிரிமினல்ஸ்தான் இந்த வேலையைச் செய்யும் என்று அய்யாசாமியைப் பார்த்தாள் ருக்கு.

வாகனத்தை நேரத்திற்கு எடுத்து வரச்சொன்னது லீக்கானது,அது மட்டும் போதாது, சுய பாதுகாப்பும் அவசியம் என இரண்டாவதாக வந்தவர் தலைகவசம் போட்டு உணர்த்தினார்.

மூன்றாவதாக வந்தவர்தான் காதலனாக இருக்க வேண்டும் எப்படி முடிவு செய்தாய் என்ற அய்யாசாமியை
பரிதாபமாகப் பார்த்தாள் ருக்கு.

அழகு,பணம் அல்லது வயது போன்ற வெளிப்புற விஷயங்களைச் சார்ந்தது அல்ல காதல். எதிராளியின் சுதந்திரத்திற்கும் மதிப்பளிப்பது, சோதனையான நேரத்திலும் ஒருவரையொருவர் தாங்கிப்பிடித்து, எதையும் எதிர்பாராமல் அன்பையும் அக்கரையும் செலுத்துவதே உண்மையானக் காதல்.

தன்னுயிர்போல சக உயிர்களையும் நேசிப்பவனால் மட்டுமே சிந்தித்து மற்றொரு தலைக் கவசத்துடன் வரமுடியும்.
அதிலிருந்த அவனது அக்கரை ஒன்று போதும் உங்கள் மகளை அவனுக்கு மணம் முடிக்க என்ற ருக்கு அடுத்து ஆக வேண்டியதைப் பாருங்க என்று கிளம்பினாள்.

ஏன் ருக்கு என்கிட்டேயாவது சொல்,நீயும் ஜனனீயும் சேர்ந்துதானே இதை செய்தீர்கள்? இதுவும் NEET Question out ஆன மாதிரிதானே? என்றார்.

NEET வினாவிடை out ஆனதில் படித்தவர்களின் வாய்ப்பும்,
பல நோயாளிகளின் வாழ்க்கையும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு
அது மகா தப்பு.

கொண்ட காதலில் செயிக்கவும்,காதல் வாழ்க்கையினைத் தொடரவும், வினா விடைகள் வெளியாவதில் தவறேதுமில்லையே என்றாள் ருக்கு.