இதய மருத்துவர்கள் விளக்கம்.
சென்னை போரூரில் தந்தையுடன் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது போன்ற அசம்பாவிதங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, நடக்கும்போது இளைஞர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு பற்றி இதய மருத்துவர்கள் சொல்வது இதுதான்.
மாரடைப்பு காரணமாக இது போன்ற உயிரிழப்புகள் நிகழ்வுகள் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால், திடீர் இதய மரணங்கள் மாரடைப்பால் ஏற்படுவது என்பது தவறு என்கின்றார்கள். மருத்துவர்கள்.அதேபோல் அவர்கள் மாரடைப்பு என்பது வேறு, திடீர் இதய மரணம் என்பது வேறு என்றும் குறிப்பிடுகிறார்கள்.
மாரடைப்பு என்பது இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்தின் தசைக்கு சரியாக ரத்தம் சென்று சேராததால் ஏற்படும் பாதிப்பு தான் மாரடைப்பு. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தாலும், அவர் சுயநினைவுடன் இருக்கலாம் பேசிக்கொண்டு கூட இருக்கலாம்.
அவர்களுக்கு நெஞ்சு வலி, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் ஆரம்பமாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

திடீர் இதய மரணம் என்பது ஒரு திடீர் நிகழ்வு என்று நாம் சொல்லலாம். இதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிடும். இதயம் இயக்கம் என்பது மின்சாரம் போன்றது தான். திடீரென மின்சாரம் தடைபட்டால் நமக்கு என்ன பாதிப்பு ஏற்படுமே அதே போல் தான் இதய இயக்கம் நின்று போனால் நமக்கு ஏற்படும் பாதிப்பு.
இதயத்தின் செயல்பாடு முழுவதும் நின்று விடுகிறது என்ற நிலையில் இதய மரணம் ஏற்படுகிறது. இதய மரணத்திற்கு வயது வரம்பு கிடையாது. சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லோருக்கும் எந்த வயதிலும் இதய மரணம் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதய மரணம் பெரும்பாலும் மரபணு சார்ந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.
மரபணு சார்ந்த இதய தசைப் பிரச்சனைகளான ஹைபர் டிராபிக் கார்டியோமயோபதி எனப்படும் இதயத் தசைப் பிரச்சனை அல்லது இதயம் துடிப்பதற்கு தேவையான மின் அமைப்பில் அசாதாரண நிகழ்வுகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். சிலருக்கு பிறவியிலேயே இதய ரத்தக்குழாயில் ஏற்படும் மாற்றுப்பாதைகள், அதாவது கொரோனரி அனாமலீஸ் எனப்படும் பாதிப்புகளும் திடீர் மரணத்துக்கு காரணம் என்கிறார்கள்.
இது போன்ற இதய மரணத்திற்கு விளையாட்டே உடற்பயிற்சியே நிச்சயம் காரணம் இல்லை. உடற்பயிற்சி அல்லது விளையாட்டு இதய நோயை உருவாக்குவதற்கான சாத்திய கூறுகள் குறைவுதான். ஆனால், அதிகமாக உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது விளையாடும் போது ஏற்கனவே உடலுக்குள் மறைந்து இருக்கும் இதய நோய் வெளிப்படுமே தவிர அது இதய நோயை உருவாக்காது.
நாம் உடற்பயிற்சி செய்யும் போது அல்லது விளையாடும் போது நமது உடலில் அட்ரினல் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் நமது இதயத்தை வேகமாக துடிக்க வைக்கிறது. இவ்வாறு வேகமாக இதயம் துடிக்கும் போது இதயத்தசை அசாதாரணமாக இருந்தாலோ, அசாதாரண மின்சாரம் உருவாகி இதயத்தில் செயல்பாடு திடீரென நின்று விட வாய்ப்பு உள்ளது. அப்படி என்றால் அனைவரும் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு அல்லது விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு இதயத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டுமா என்று கேட்டால் அது தேவையில்லை. ஆனால், ஆபத்து காரணிகள் இருப்பவர்கள் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
குடும்ப உறுப்பினர்கள் யாராவது பேஸ்மேக்கர், ஐ சிடி எனப்படும் இதய சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தால் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை பெறுவது நல்லது. விளையாட்டுகள் உடற்பயிற்சியின் போது ஏற்படும் அசௌவ்கரியங்கள் மற்றும் அறிகுறிகளை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.
இதயநோய் ஏற்படுவதற்கான துணை நோய்கள், நீரிழிவு (சர்க்கரை நோய்) ,அதிக ரத்த கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இதய நோய் ஆபத்துக்கான காரணம்.
மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களும் இதய நோய் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான பழக்கங்கள் தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Leave a comment
Upload