தொடர்கள்
ஆன்மீகம்
"உலகை வலம் வரும் லிசியு நகரின் புனித தெரேசாவின் திருப்பண்டம் " -ஸ்வேதா அப்புதாஸ்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லிசியு நகரின் புனித தெரேசா ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புகழ்பெற்ற துறவியும் புனிதரும் ஆவர்.
2026082423115219.jpeg

இவர் குழந்தை இயேசுவின் தெரசா என்றும் இயேசுவின் சிறு மலர் என்றும் இவரை அழைக்கிறார்கள்.
தெரேசா 1873 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள் பிறந்தார் .சிறு வயதில் இருந்தே கன்னியாஸ்திரியாகவேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்த இவரை பதினெட்டு வயது முடியாமல் மடத்தில் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டனர் .தன் தந்தை லூயிஸ் மார்டினுடன் வத்திக்கான் சென்று நேரடியாக பதிமூன்றாம் லியோ போப் ஆண்டவரை சந்தித்து தன் ஆதங்கத்தை கூற போப் கார்மேல் மடத்தில் தெரேசாவை சேர்த்துக்கொள்ள உத்தரவை பிறப்பித்துள்ளார் .
1888 ஆம் ஆண்டு தன் 15 ஆம் வயதில் நார்மண்டியில் உள்ள கிலோய்ஸ்ட்டர் கார்மல் மடத்தில் சேர்ந்து பல சேவைகளை செய்து வந்தார் , எளிய செயல்களை அன்புடன் செய்வதன் மூலம் சிறு வழிகளை பின்பற்றுவதன் மூலம் இறைவனை அடையலாம் என்ற ஆன்மீகப்பாதையை (Little way ) உலகிற்கு கற்பித்தார் மறைவான வாழ்க்கையை வாழ்ந்து காசநோயால் பாதிக்கப்பட்டு தனது 24 வயதில் 1873
ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார் .

2026082423124425.jpeg

தான் காசநோயால் போராடிக்கொண்டிருக்கும் போது தன் சுயசரிதையை எழுதியுள்ளார் இவரின் இறப்புக்கு பின் "ஓர் ஆன்மாவின் வரலாறு "(The Story of a Soul ) என்ற புத்தகத்தை கார்மேல் மடம் வெளியிட அந்த புத்தகம் உலகம் முழுவதும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .
தெரசா பல புதுமைகளை செய்துள்ளார் என்பது வரலாறு.
1913 மற்றும் 1916 ஆம் வருடத்தில் சிஸ்டர் லூயிஸ் என்பவர் வயிற்று அல்சர் நோயால் பாதிக்கப்பட்டு துடிதுடித்து தெரேசாவிடம் ஜெபம் செய்து வர அதிசயமாக அந்த நோய் மறைந்து போனதாம் !.
23 வயது சார்லஸ் ஆன் என்ற குருமட மாணவனுக்கு முத்திப்போன காசநோயால் இறக்கும் தருவாயில் தெரேசாவிடம் ஜெபிக்க இரவோடு இரவாக அவரின் நுரையீரல் குணமடைந்து பழைய நிலைக்கு வந்து புது மனிதராக எழுந்து அமர்ந்த அதிசியம் நிகழ்ந்துள்ளது

அவரின் இறப்புக்கு பின் ஆயிரம் பேர் உடல் நல குறைவு , கண்பார்வை பாதிப்பு , காயங்கள் எல்லாம் குணமடைந்துள்ளன .
தெரேசாவிடம் பிராத்திக்கும் போது திடீர் என்று ரோஜா மலர்களின் மணம் அந்த அறை முழுவதும் கமழும் என்பதை சுவாசித்துள்ளனர் .

20260824231550986.jpeg
முதல் உலக போரில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் சிப்பாய்கள் தெரேசாவிடம் ஜெபிக்க அவர்கள் போர் பயங்கரத்தில் இருந்து காப்பாற்ற பட்டுள்ளனர் .
புனித தெரசா ரோஜா மலரை அதிகம் நேசித்தவர் "நான் பரலோகத்தில் இருந்து இறைவனின் அருள் மழையை ரோஜா மலர்களாக பொழிய செய்வேன் " என்று கூறியுள்ளார்.
அதே போல இது நாள் வரை அவரின் அற்புதங்கள் நடக்கும் பொழுது ரோஜா மலர்களின் மணம் கமழ்வதை உணரமுடிகிறது என்று கூறுகின்றனர்.
இவரின் அற்புதங்களை ஆராய்ந்து 1925 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி அன்றைய போப் ஆண்டவர் பதினொன்றாம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி கௌரவித்தார்

20260824231631598.jpeg
புனித தெரேசாவின் திரு பண்டம் 1994 ஆம் வருடம் உலகம் முழுவதும் எடுத்து வரப்பட்டது. அதற்கு காரணம் புனிதர் தான் உயிரோடு இருக்கும் பொழுது வெளியுலகத்திற்கு சென்று இறைவனின் வார்த்தையை போதிக்க முடியாமல் போனது தன் உடல் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார் .அதனை பதிவு செய்த திருச்சபை அவரின் திருப்பண்டத்தை உலகம் முழுவதும் எடுத்து செல்ல முடிவு செய்து இது வரை 70 நாடுகளுக்கு சென்று வந்துள்ளது .
புனித தெரேசாவுக்கு புனிதர் பட்டம் கொடுத்து நுறு வருடம் முடியும் இந்த வருடத்தில் அவரின் அற்புத திருபண்டம் உலகம் முழுவதும் உள்ள முக்கிய ஆலயங்களுக்கு எடுத்து வர படுகிறது .

தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள ஆலயங்களுக்கு திருபண்டம் இறைமக்களின் வணக்கத்திற்காக எடுத்து செல்ல பட்டுவருகிறது .செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரை புனிதப்பயணம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கடந்த ஞாயிற்று கிழமை முதல் நீலகிரி மறைமாவட்ட ஆலயங்களுக்கு இந்த திருப்பண்டம் கொண்டுவரப்பட்டது . 22 ஆம் தேதி இரவு நீலகிரியின் முதல் கத்தோலிக்க ஆலயமான செயின்ட். மேரிஸ் ஆலயத்திற்கு திருப்பண்டம் எடுத்துவரப்பட்டது .

20260824233226325.jpeg
மறைமாவட்ட அருளகம் மேய்ப்பு பணிக்குழு இயக்குனர் முனைவர் பெரியநாயகம் மற்றும் குரு டிக்சன் வழிநடத்தி வந்தனர் .
திருப்பண்டத்தை மதுரை குரு பால்ஸ்டான்லி பாதுகாப்பாக எடுத்துவந்துள்ளார் . இரவு 12 .30 வரை இறைமக்களின் வணக்க வழிபாடு நடந்தது .23 ஆம் தேதி காலை மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் மற்றும் பங்கு குரு பெனடிக்ட் தலைமையில் பத்து குருக்கள் இணைந்து சிறப்பு பவனி மற்றும் ஆடம்பர திருப்பலி நடைபெற்று புனிதரின் திருப்பண்டம் வணங்கப்பட்டது .
உதகை மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் கூறும் போது,


" இன்றைக்கு உதகைக்கு முக்கியமான நாள். அதுவும் சிறப்பாக கத்தோலிக்க திருச்சபைக்கு ஆசிர்வதிக்க பட்ட நாள். காரணம் இறைமக்களால் அதிகம் நேசிக்க படுகின்ற புனித குழந்தை தெரேசம்மாள் என்று அழைக்கப்படுகின்ற புனிதவதியின் திருப்பண்டமானது உலகெங்கும் 70 நாடுகளுக்கு சென்று இப்பொழுது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது.
அதிலும் உதகைக்கு வந்து ஏராளமான மக்கள் வணக்கமரியாதை செலுத்தி அந்த புனிதையிடம் ஜெபிக்கும் பொழுது கடவுளிடம் பரிந்து பேசி நம் தேவைகளை அவர் நிறைவேற்றுகிறார் என்பது அனைவரின் நம்பிக்கை.
அவரின் நோயை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்ததால் நோயாளிகளுக்கு ஜெபித்து குணமாக்குகிறார்.
பிரான்ஸ் நாட்டில் அவர்கள் வாழ்ந்த மடத்தின் அனுமதி பெற்று திருப்பண்டம் உலகமுழுவதும் எடுத்து சென்று அனைத்து மக்களுக்கும் ஆசீர் கிடைக்க வேண்டும் என்பது திருச்சபை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்".என்று கூறினார்.
20260824233338930.jpeg
புனித தெரசா வாழ்ந்த கார்மல் மடத்தை சார்ந்த கன்னியாஸ்திரி சிஸ்டர். ரின்சி கூறுகிறார்,
" புனித தெரசாவின் திருப்பண்டமானது மரியன்னை ஆலயத்தில் வழிபாட்டிற்காக கொண்டுவரப்பட்டது. அவருடைய புனிதர் பட்டம் பெற்று நூறாவது வருடத்தை கொண்டாடும்விதமாக வழிபாட்டிற்காக வைக்க பட்டுள்ளது.


இந்த புனிதரோடு இணைந்த கார்மல் சபையில் வாழ்ந்துகொண்டிருக்கும் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்து அவரின் ஆசிரையும் அற்புதத்தையும் பெற்று செல்லுமாறு கார்மல் துறவியான நான் வாழ்த்துகிறேன்.

மதுரையில் இருந்து புனித தெரசாவின் திருப்பண்டத்தை நீலகிரி, கோவை மறைமாவட்ட ஆலயங்களுக்கு எடுத்து வந்த கப்புச்சின் குரு பால் ஸ்டான்லி பேசும்போது,

20260824233642200.jpeg
" புனித குழந்தை தெரசாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் தருணத்தில், சிறப்பாக உதகைக்கு புனிதரின் திருப்பண்ட பேழை கொண்டுவரப்பட்டுள்ளது.
பல உலக நாடுகளுக்கு பாதுகாவலியாக மறைவல்லுனராய் இருப்பவர் உதகைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இவரின் நூற்றாண்டை பற்றி தெரிவிக்க வேண்டுமென்றால் எல்லா மக்களுக்கும் அன்பு, இரக்கத்தை சிறு வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.
சிறு வழியை இறப்பில் கூட காண முடியும் என்பதை உணர்த்தியுள்ளார்.


இறைவனுக்கு அர்ப்பணித்த இவர் தன்னுடன் இருந்த அருட்சகோதரிகளுக்கு நம்பிக்கை, அமைதி, கடமையை உணர்ந்தவராக வாழ்ந்திருக்கிறார்.
இந்த திருப்பண்டத்தினால் பல புதுமைகள் நடந்துள்ளன.
நாமும் குடும்பத்தில் அன்பையும், இரக்கத்தையும் பகிர்ந்து புனிதையை போல வாழ்வோம்" என்று கூறினார்.

இந்த புனிதரின் பெற்றோரும் புனிதர்கள் என்பது அதிசயமான ஒன்று.
லூயிஸ் மார்ட்டின் ஒரு வாட்ச் மேக்கர் மற்றும் நகை வியாபாரி இவர் துறவியாக வேண்டும் என்று விருப்பி முடியாமல் போனது.
மரியா அசிலி திடமான லேஸ் உற்பத்தியாளர் அவரும் துறவியாக விரும்பி காசநோயினால் மடத்தில் சேர முடியாமல்
இருவரும் பிரான்ஸ் நாட்டில் அலென்க்கோன் என்ற இடத்தில் சந்தித்து 1838 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு மிக சிறந்த இறை பக்தியில் வாழ்ந்தார்கள்.
20260824234704489.jpeg

இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்து அதில் நான்கு குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விட்டன.
ஐந்து பெண்குழந்தைகள் நன்றாக வளர்ந்தன. குடும்பமே தெய்வ பக்தியில் வளர ஐவரும் கன்னியாஸ்திரிகளாக துறவியானார்கள்.
மரியா, பவுலின், லியோனி, செலின் மற்றும் தெரசா
ஒரு புனிதர்களின் குடும்பமாக திகழ்ந்தனர்.
அம்மா அசிலி 1877 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் நாள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார் அப்பொழுது தெரசாவின் வயது நான்கு.
லூயிஸ் மார்ட்டின் மனநோய்யாளியாக போராடி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 1894 ஆம் வருடம் ஜூலை 29 ஆம் நாள் இறந்து போனார்.

20260824235134841.jpeg
இந்த தம்பதியினர் பல புதுமைகள் செய்துள்ளனர்
திருமணத்திற்கு பின்னும் தெய்வ பக்தியில் இவர்களின் வாழ்க்கை நகர ஐந்து பெண் குழந்தைகளையும் துறவிகளாக அர்ப்பணித்து தங்களின் இறை பக்தியில் திகழ்ந்துள்ளனர்.
இவர்களின் இறை பக்தியால் போப் பிரான்சிஸ் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் நாள் இவர்களை புனிதர்களாக உயர்த்தினார். உலகத்தின் முதல் தம்பதி புனிதர்கள் என்று திகழ்கின்றனர்.
20260824235455466.jpeg

புனித தெரசா திருப்பண்டம் பேழையினுள் அவரின் எலும்பு, தலை முடி, அவரின் அங்கியின் ஒரு துண்டு மற்றும் ரோஜா மலர் இருப்பதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 1 ஆம் தேதி அவரின் திருவிழாவை கொண்டாடும் தருணத்தில் திருப்பண்டம் வந்து சென்றதே புதுமையான விஷயம்.



புனித.தெரசாவின் திருப்பண்டம் விஜயம் செய்த அனைத்து ஆலயங்களில் ரோஜா மலர் வாசனை கமழ்ந்ததை உணர முடிந்ததாம் !