தொடர்கள்
அனுபவம்
பிள்ளையார்களின் பரிதாப நிலை -இந்துமதி கணேஷ்

"விநாயகனே வேல்வினையை வேரறுக்க வல்லான்" என்று ஹை டெசிபலில் சீர்காழியில் குரலில் தான் அன்றைய நாளே விடியும்.

சின்ன வயதில் விநாயகர் சதுர்த்தி என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நாளாகத் தான் இருக்கும்.

அதற்கு முதற்காரணம் அன்றைக்கு ஒரு நாள் விடுமுறை கிடைக்கும்,

இன்னொன்று அன்று மட்டுமே பிள்ளையாருக்கு பிடித்தது என்று மோதக கொழுக்கட்டைகளை செய்வார்கள்.

வருடத்திற்கு ஒரு நாள் செய்யப்படும் அந்த பலகாரத்திற்காகவே விநாயகரை மிகவும் பிடிக்கும்.

இன்னொரு காரணமும் விநாயகரை எனது இஷ்ட தெய்வமாக வைத்திருந்தது,

அது வகை தொகையற்ற அவரின் தொப்பை. கவலைப்படாமல் மனதிற்கு பிடித்ததை சாப்பிடும் கடவுள் நமக்கு அணுக்கமாக இருந்தால் தானே நாமும் அவரைப் போல வெளுத்துக் வாங்கலாம் !?

அப்போதெல்லாம் கடையில் (விற்கப்படும்?) மண் பிள்ளையார்களை வாங்கி வைத்து வழிபட்டதாக நினைவில்லை.

வீட்டில் ஏற்கனவே வழிபடப் படும் விநாயகர் படங்களுக்கு பூ போட்டு பூஜை செய்வோம் அவ்வளவே.

தென்கோடியில் உள்ள எங்கள் ஊரில் கதம்ப சரங்களும், அருகம்புல்லும், எறுக்கம்பூ மாலைகளையும் அன்று பல கடைகளில் பார்க்க முடியும், அவல், பொறி எல்லாம் கிடைத்திருக்கின்றன.

ஆனால் மண் பிள்ளையாரை எல்லாம் கடந்த பத்தாண்டுகளில் தான் அதிகம் பார்க்கிறேன்.

முதலில் மண் பிள்ளையார்களுக்கு கண் மட்டும் வைத்து கொடுத்தார்கள், இப்போதெல்லாம் பல பெயிண்டுகளை பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பிள்ளையாருக்கு பிளாஸ்டிக்கில் மாலை, கொடை என்று பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது.

20260825222457580.jpeg

இப்படி அலங்கரிக்கப்பட்ட பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ் பிள்ளையார்களை நாம் வீட்டோடு வைத்திருக்க போகிறோம் என்றாலும் பரவாயில்லை ஆனால் இவைகளை நாம் நீர் நிலைகளில் கரைப்பதென்பது நீர் வாழ் உயிரிகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் விநாயகருக்கு குடை, பிளாஸ்டிக் மாலைகள் என்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் நீரில் சென்று மைக்ரோ பிளாஸ்டிக்காக மாறி பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும் உடைந்தோ அல்லது பாதி கரைந்தோ, கை கால்கள் சிதிலமடைந்து நீர்நிலைகளில் கிடக்கும் பிள்ளையார்கள் தான் அதிகம் மனதை பாதிக்கிறார்கள்.

விநாயகர் சதுர்த்தியை இந்த முறையில் இவ்வளவு விமரிசையாக கொண்டாடும் பழக்கம் தமிழர்களின் பாரம்பரிய வழக்கத்தில் இல்லை என்பதை நாம் நினைவு கூறவேண்டியது அவசியம்.

நீரில் பிள்ளையாரை கரைக்கும் வழக்கம் எப்போதிருந்து இவ்வளவு தீவிரமடைந்தது என்று தெரியவில்லை ஆனால் தெருவுக்கு தெரு இளைஞர்கள் ஒன்று கூடி பிள்ளையாரின் பெயரைச் சொல்லி காசு சேர்த்து ஒரு சிலையை வாங்கிவிட்டு அதைக் கரைக்க போகிறோம் என்று சேர்ந்து குடித்து கும்மாளமடிப்பதை போன வாரம் நடந்த ஊர்வலத்தில் கண்கூடாகப் பார்த்தேன்.

20260825222529299.jpg

பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ் போன்ற பொருட்களால் சிலைகள் செய்து அதை நீர் நிலைகளில் கரைக்கும் பொழுது அங்கு வாழும் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும்.

ரசாயன கலவையான பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்பது சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள ஒரு ரசாயன பொடி. இதில் சிலைகளை செய்து ஆற்றில் கலப்பதால் நீர் நிலைகளில் சுண்ணாம்பு சத்து அதிகரிக்கக்கூடும்.

நீரின் காரத்தன்மை அதிகரிக்கும் பொழுது அந்த நீரில் வாழும் மீன்கள் போன்ற உயிரினங்கள் உடலில் பாதிப்புகள் உண்டாகும். களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கரைப்பதால் உயிரினங்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாது ஆனால் நீர் கொள்திறன் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும்.

எங்கள் பகுதியில் இருந்த ஒரு குளத்ததில் மீன்கள் நிறைய உண்டு, அவைகளுக்கு பொறி வாங்கி போடுவோரை அதிகம் பார்த்திருக்கிறேன். ஆனால் போன விநாயகர் சதுர்த்திக்கு பிறகு அங்கு கரைக்கப்பட்ட விநாயகர்களால் அந்த குளம் மாசடைந்து விட்டது,

அங்கு தற்போது மீன்களைக் காணமுடிவதில்லை. குளமும் தூர் வார வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. நன்றாக இருக்கும் ஒரு நீர்நிலையை பண்டிகை என்ற பெயரில் எவ்வளவு மாசுக்கு உள்ளாக்குகிறோம் என்பதை நாம் உணர வேண்டும்.

சென்னை, சிட்லபாக்கம் ஏரி மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது, மிகவும் முயன்று ஒரு குழுவாக அரசிடம் இருந்து போராடி நிதி வாங்கி ஒரு குழு அந்த ஏரியை சீரமைத்திருக்கிறது.

இரண்டு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டிலிருந்து வலசை பறவைகள் அங்கு வந்து இறங்கியது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம். அந்த ஏரியை சீரமைத்த குழுவினர் அங்குள்ள மக்களிடம் விநாயகரை இங்கு கொண்டு வந்து கரைக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்த போதிலும் மக்கள் விடுவதாய் இல்லை.

அறிவியல் அறிஞர்களிடம் ஆலோசனை கேட்டால் அரிசி மாவிலோ அல்லது கிழங்கி மாவிலோ பிள்ளையார்களை செய்து அதை கரைத்தால் நீர் நிலைகளில் வாழும் உயிர்களுக்கும் அது உணவாக அமையும் மேலும் பிளாஸ்ட்டர் ஆப் பாரிஸ் போல கரைந்து கரையாமலும் இருந்து நீர்நிலைகளை மாசு படுத்தாது என்று ஆலோசனை வழங்குகிறார்கள்.

அடுத்த வருடத்தில் இருந்து நாமும் இப்படி நீர்நிலைகளை மாசு படுத்தாத வகையில் விநாயகரை வழிபடுவோம்.