
“லாலா லா... லால.. லல்ல லல்ல...”
முணுமுணுத்துக் கொண்டே குளியலறையிலிருந்து துண்டுடன் வெளியே வந்தார் சங்கராபரணன்.
‘இந்த இடத்துல... “என்னை யார் என்று எண்ணி எண்ணி...” பாலும் பழமும் விசு-ராமமூர்த்தி டியூன் போல வருதோ?’
“லா லல லாலா... லா லல லாலா...”
‘இங்கே... நான் ஒரு சிந்து காவடிச்சிந்து... ராஜா டியூனா?’
‘சேச்சே! அப்படியெல்லாம் அப்பட்டமா காப்பி அடிக்க மாட்டோமே! ரெண்டு பாட்டும் சிந்து பைரவி ராகம் தானே... நம்ம மெட்டும் அதே ராகம் தானே! ராகம் ஒன்றா இருந்தா பரவாயில்லை. மெட்டை அப்படியே காப்பி அடிக்கக் கூடாது. கொஞ்சம் மாற்ற வேண்டியதுதான்...’
என்று எண்ணியவாறே தலையைத் துடைத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தார் இசையமைப்பாளர் ‘இன்னிசை இமயம்’ சங்கராபரணன். வயது அறுபது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று கொடிகட்டிப் பறந்தவர். முந்நூறு படங்களுக்கு மேல், முப்பது வருஷமாக இசையமைத்தாச்சு. ஃபிலிம் ஃபேர் விருதுகள், கலைமாமணி, ஒரு தேசிய விருது... அப்புறம், கடைசியா பத்மஸ்ரீ விருதும் வாங்கியாச்சு.ஆஸ்கர் கனவு இல்லை
இப்பொழுது சிலப்பதிகாரத்தை இசைக்காவியமாக மாற்றும் பிராஜெக்ட்டில் இருக்கிறார்.
பக்கத்தில் இருந்த தினசரிப் பேப்பரை எடுத்தார்.
புதிய ஜெயில் கட்டுவதில் ஊழல், தி.வெ.ச. தலைவர் எதிர்க்கட்சிக்குத் தாவல், கஞ்சா போதையில் வகுப்பு ஆசிரியரின் கையை வெடுக்கென்று கடித்த மாணவன்... போன்ற செய்திகளைக் கடந்து ஒரு செய்தியைப் பார்த்தபோது அதிர்ந்துபோனார்.
"பிரபல இசையமைப்பாளர் இன்னிசை இமயம் சங்கராபரணனின் மகன் ராகப்பிரியன் எடுக்கும் பெரிய பட்ஜெட் படத்திலிருந்து இயக்குநர் செங்குட்டுவன் விலகல்.’..
நிருபர்கள் ‘ஏன்?’ என்று கேட்டதற்கு செங்குட்டுவன் பதில் சொல்லவில்லை."
ஒரு வாரம் முன்னால் தான் மகன் ராகப்பிரியன், சங்கராபரணனிடம் வந்து தன் முதல் படத்தை அவருடைய மிக நெருங்கிய தோழனான வெற்றிப்பட இயக்குநர் செங்குட்டுவனை இயக்கச் சொல்லும்படி கேட்டான்.
செங்குட்டுவனும் (பழைய செங்கானும்) சங்கராபரணனும் (பழைய சங்கரனும்)
முப்பது வருஷத்துக்கு முன்னால் நெல்லையிலிருந்து ஒன்றாகக் கிளம்பி சென்னைக்கு வந்தவர்கள்.
இதுவரை பதினெட்டு வெற்றிப் படங்கள் சேர்ந்து பண்ணியிருக்கிறார்கள்.
‘செங்குட்டுவன் இயக்கமும், சங்கராபரணன் இசையும்... இட்லியும் தேங்காய்ச் சட்னியும் போல’ என்று அக்காலப் பத்திரிகைகளில் எழுதியிருந்தார்கள்.
“இது ஒரு பெரிய விஷயமாடா...” என்று மகனிடம் சொல்லிவிட்டு செங்குட்டுவனுக்கு போன் போட்டார் சங்கராபரணன்.
விஷயத்தைச் சொன்னார்.
“அவ்வளவுதானே... சரிப்பா, உன் பையனைக் கூப்பிடு” என்று சொல்லி, ராகப்பிரியனிடம் தான் அவன் படத்தை இயக்கத் தயாராக இருப்பதை உறுதிசெய்துவிட்டார் செங்குட்டுவன்.
படத்தின் வேலைகளெல்லாம் விறுவிறுவென்று நடந்துகொண்டிருந்த இந்தச் சமயத்தில், திடீரென்று செங்குட்டுவன் விலகியது நியாயமா?
என்ன காரணமாக இருந்தாலும் நம்மகிட்ட சொல்லிட்டு, அப்புறம்கூட முடிவு பண்ணியிருக்கலாம்.
முப்பது வருஷத்துக்கும் மேலான நட்பைக்கூட அவன் மதிக்கவில்லையா?
சங்கராபரணனுக்கு கோபம்.
“நிதானம்... நிதானம். ஒரு பத்து நிமிஷம் அமைதியா இரு. அப்புறம் பார்த்துக்கலாம். கோபத்தை வெளியில் காட்டாதே... தொழிலுக்கு நல்லதில்லை.”
பின் கொஞ்சம் நிதானமடைந்து சிந்தித்தார்.
‘பையன்கிட்ட என்ன விஷயம்னு கேட்கலாமா?’
‘வேண்டாம்... வேண்டாம்.’
‘செங்கான்கிட்ட போன்ல கேட்டுவிடலாமா?’
கொஞ்சம் யோசித்து அதுவும் வேண்டாம் என்று முடிவு பண்ணினார்.
‘அவனை நேர்ல போய்ப் பார்த்துப் பேசிடலாம்!’
டக்கென்று செங்குட்டுவன் வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டார்.
“வாங்க அண்ணச்சி!” என்று வரவேற்றார் செங்குட்டுவனின் மனைவி பரிமளம்.
“செங்குட்டுவன் எங்கே?”
“இதோ கூப்பிடுதேன்... வந்துருவாரு. மொதோ காப்பிய கொடுக்கவா... சேவையும் தேங்காய்ப்பாலும் அப்புறம் சாப்பிடுதியளா?”
“காப்பி மட்டும் போதும்.”
வந்த காப்பியை முடிப்பதற்குள் செங்குட்டுவன் வந்துவிட்டார்.
“அடடே... என்னடா சங்கரா! நீயே வந்துட்ட... என்ன விஷயம், சொல்லு?” என்றார் செங்குட்டுவன்.
சங்கராபரணன் கொஞ்ச நேரம் முறைத்தார். பின் பேசினார்.
“ஏண்டா... நீயும் நானும் ஒரே ஸ்கூல்ல படிச்சோம், சேந்து கூத்தடிச்சோம். ஒண்ணா வீட்டை விட்டு ஓடி சென்னை வந்தோம்...! வாழ்க்கையில் ஜெயிச்சோம். எத்தனையோ படங்கள்ல சேர்ந்து ஹிட் கொடுத்தோம்... இப்ப ஏன்டா என் படம் வேண்டாம்னு விலகிட்ட? நான் அவ்வளவு அலட்சியமா போயிட்டேனா?”
“உன் படம்னு நீ ஏன்டா சொல்ற? அது உன் பையனோட படம்!”
“என் படமோ, என் பையன் படமோ,
எதுவா இருந்தா என்ன?
“அப்படி இல்லைடா... அன்னிக்கு நீயே போன் போட்டு, ‘என் பையன் படத்துக்கு நீதான் டைரக்ஷன்’னு சொன்னபோதே சந்தோஷமா ஒப்புகிட்டேன்.
எவ்வளவு முக்கியமான நண்பன் நீ!
அப்புறம் படத்துக்கு வேண்டிய ஹீரோ, ஹீரோயின் எல்லாரையும் செலக்ட் பண்ணிட்டோம். மியூசிக் யாரு என்ற கேள்வி வந்தபோது, நான் உன் பையன்கிட்ட சொன்னேன்...
‘உங்க அப்பாவை விட்டா வேற எவன்டா இருக்கான்?’னு.”
செங்குட்டுவன் கொஞ்சம் நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார்:
“உன் பையன் சொன்னான்...
‘அங்கிள், நீங்கதான் இந்தப் படத்துக்கு டைரக்டர். ஏன்? நீங்க இன்னிக்கும் வெற்றிகரமான டைரக்டர். ஜென் ஸீ இளைஞர்களுக்கு உங்களைப் பிடிக்குது. அதனால உங்க படம் ஓடுது.
ஆனா எங்கப்பா அப்படி இல்லையே... அவர் காலம் சில வருஷங்களுக்கு முன்னாடியே முடிஞ்சுபோச்சு!
இன்னைக்கு அவர் மியூசிக் போட்டா ஒரு ‘ஜென் ஸீ’ பையன் கூட கேட்க மாட்டான். படம் ஓடாது!
நம் திரை இசையின் பரிணாமமே மாறிப்போச்சு. அவர் எங்கப்பாங்கிற ஒரே காரணத்துக்காக நான் அவரை மியூசிக் டைரக்டரா போட முடியாது.
என் வயசுல யாராவது ஒரு நல்ல மியூசிக் டைரக்டரைப் போடலாம்... அப்பதான் படம் ஹிட் ஆகும்’னு சொன்னான்டா.
நான் இதுக்கப்புறமும் அந்தப் படத்துக்கு நான் டைரக்டரா இருக்கணும்னு நினைக்கிறியா?”
உணர்ச்சி பொங்கப் பேசிய செங்குட்டுவனை அன்பு கலந்து பார்த்தார் சங்கராபரணன். பின் அவர் தோள் மீது கை போட்டுக் கொண்டு மெதுவாகச் சொன்னார்:
“ஆமாம்... நீ என் பையன் படத்துல இருக்கணும்.
அந்தப் படம் நிச்சயமாக நல்லா ஓட, நீ அதுல டைரக்டர்ங்கிறது ஒரு முக்கிய காரணமா அமையும்.
நான் என் பையன் படத்துக்கு மியூசிக் போட மாட்டேன்.
நம்ம உணர்ச்சி வேற, உண்மை வேறங்கிறதை நாம புரிஞ்சுக்கணும்... ஒத்துக்கணும்!
எல்லாத்துக்கும் மேல, ராகப்பிரியனோட படத்துல போட்ட பணம் முழுக்க என்னோடது இல்லையா?”
என்று முடித்துக் கடகடவென்று சிரித்தார், படத்தின் ஃபைனான்சியர் சங்கராபரணன்.

Leave a comment
Upload