
நிலைக்கும் புகழ்
கம்பனின் கவியமுதம் என்றுமே தெவிட்டாத இனிமை தான்.
நேற்றைய தினம் தமிழ் ஆர்வமிக்க நண்பர் ஒருவர், இராவணன் இராமனால் வதம் செய்யப்படும் தருணத்தை ஒட்டிய பாடல்களைப் பற்றி விவாதித்தார். அடியேன் அறிந்ததை விளக்கினேன்.
இன்றைய தமிழ் அமிழ்திற்கு அந்தக் கட்டத்திலிருந்தே ஓரிரு பாடல்களை விவாதிக்கத் தோன்றுகிறது.
செறுகளத்தில் இலக்குவனிடம் தோற்றுவிட்ட இந்திரஜித்தன், நேரே தன் தந்தையான இராவணனிடம் வருகிறான். நம் வம்சம் செய்த பாவத்தினால் தான் பெரும் பழியை தேடிக் கொண்டோம். சீதாப்பிராட்டியை விட்டு விட்டால் நாம் உயிர் பிழைக்கலாம் என்று எடுத்துரைக்கிறான்.
அதற்கு இராவணனின் மறுமொழியை கீழ்க்கண்ட பாடலில் கம்பர் கூறுகிறார்
பாடல் :
முன்னையோர், இறந்தார் எல்லாம், இப் பகை முடிப்பர்
என்றும்,
பின்னையோர், நின்றோர் எல்லாம், வென்றனர் பெயர்வர்
என்றும்,
உன்னை, “நீ அவரை வென்று தருதி“ என்று உணர்ந்தும்
அன்றால்;
என்னையே நோக்கி, யான் இந்நெடும் பகை தேடிக்
கொண்டேன்.
பொருள் :
(இது நாள் வரை) முன்னே போருக்குச் சென்று மரணித்தவர்கள் யாவரும் இராமனுடன் கொண்ட பகையை முடித்து விடுவார்கள் என்றோ,
இனி போர் செய்ய சித்தமாக இருப்பவர்கள் எல்லோரும் பகை வென்று மீண்டு விடுவார்கள் என்றோ,
மகனே! நீயே அவர்களை வென்று வெற்றியைத் தருவாய் என்றோ,
எண்ணி இந்தப் பகையை நான் தேடிக் கொள்ளவில்லை.
எனது வலிமையின்பால் நம்பிக்கை கொண்டே இந்தப் பெரும் பகையை தேடிக் கொண்டேன்!
மேலும், நான் எனது உயிரை விட்டாலும் விடுவேனே ஒழிய சீதையை விடுவதாக இல்லை என்கின்றான் இராவணன். இங்கு சீதையை விடுவதாக இல்லை என்று சொன்னதில் இராவணனின் அந்த நேரத்து மனப்போக்கு, சீதை மேல் கொண்ட மையலால் அல்ல. இவ்வளவு தூரம் வந்துவிட்ட பிறகு, சீதையை திரும்ப அனுப்புதல் பெரும் மானக்கேடு என்ற எண்ணம் தான் என்று எனது ஆசிரியபெருந்தகை கூறுவார்.
மேலும் இராவணன் தொடர்கிறான்.
வென்றிலேன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பேர் நிற்கும் ஆயின்.
பொன்றுதல் ஒரு காலத்தும் தவிருமோ ? பொதுமைத்து அன்றோ!
இன்று உளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதி உண்டோ?
பொருள்;
நான் இராமனை போரில் வெல்லாது தோற்றேன் என்ற பெயர் எனக்கு உண்டானாலும், அந்த இராமனின் பெயர் நிலைக்குமாயின், வேதம் உள்ளளவும் அவனுடன் போரிட்ட எனது புகழும் நிலைக்கும் அல்லவா?
அந்த இராமனின் கீர்த்தி வரலாற்றில் நிலைக்குமா போலே அவனிடம் தோற்றேனாயின், என் புகழும் நீடிக்குமன்றோ?!
இன்று உயிர் வாழ்பவர் நாளை மாளலாம். ஆனால் புகழுக்கு முடிவு காலம் என்று உண்டோ?!
இராவணன் கூற்றினால் அவனுடைய முடிவு நெருங்கி விட்டது என்று உணர்ந்ததாகக் கொள்ளலாம். அப்படியான ஒரு சாவு கூட பெருமைக்குரியது என்று ஏற்றுக் கொள்ளும் அவனுடைய மன மாற்றத்தை அற்புதமாக இதில் கம்பர் வெளிப்படுத்துகிறார்.
கம்ப ரசம் ஒரு துளி பருகினால் போதுமா?!

Leave a comment
Upload