பழமுதிர் சோலை

பழமுதிர் சோலை முருகனின் ஆறாம்படை வீடாகும். இங்கு உயரமான மலைகளிலும் பசுமையான செறிந்த சோலைகள், காடுகள் போன்றவற்றில் முருகன் விரும்பி வீற்றிருக்கின்றான். வழிபாட்டிற்கு என்று இடங்கள் ஒன்றும் இல்லை. மனம் உருகி நாம் எங்கு இறைவனை நினைக்கின்றோமோ அங்கெல்லாம் காட்சியளிப்பான் என்று நக்கீரர் குறிப்பிடுகிறார்.
வழிபாட்டிடங்களால் ஏற்றத்தாழ்வு ஒன்றுமில்லை. அன்பொன்றே வேண்டப்படுகிறது. அடியவர் இருக்கும் இடம் தேடிவந்து முன்னின்று அருள்புரிவான் என்று அவனுடைய எளிமையை விளக்குவதாகப் பழமுதிர்சோலை அமைந்துள்ளது. குறிஞ்சி நிலப்பகுதியில் அமைந்த முருகன் குன்று தோறாடல் ஐந்தாம் படைவீடாகும். குறிஞ்சி, முல்லை நிலப் பகுதியில் மரம், செடி, கொடிகள் செறிந்த சோலைகளில் அமைந்த முருகன் கோயில் பழமுதிர்சோலை என்ற ஆறாம் படைவீடாகக் காட்சியளிக்கிறது.
இச்சை வழிபாடு : பழமுதிர் சோலையில், குறப்பெண், தன்முன்னிலையில் முருகன் வரல் வேண்டுமெனவும், நல்நகர் வாழவேண்டும் எனவும் விரும்பி வழிபட்டாள் என்று கூறியிருத்தலால் அவள் இச்சையால் வழிபட்டாள் என்பது பெறப்படும். “பெண்” என்னுஞ் சொல்லே பெட்பு (இச்சை) உடையவர் என்பதை விளக்குதலும் அறிக.
திருமுருகாற்றுப்படையில் முருகனின் பிறப்பு முதலான புராண வரலாறு, முருகன் உறைந்திருக்கும் இடங்கள், அங்கு வழிபாடு இயற்றுவோரின் இயல்புகள், அருவ மற்றும் உருவ வழிபாட்டு முறைகள், குறிப்பாக வெறியாட்டு, குன்றக்குரவை, பலியிடுதல், கல்தறி நடுதல் முதலானவையும் பண்டைத் தமிழரின் வாழ்க்கை முறைகளில் உணவு, உடை, வழிபாடு, பிறர் நலன் வேண்டும் பண்பு ஆகியனவும் பண்பாட்டுச் செய்திகளாக வெளிப்படுகின்றன.
திருமுருகாற்றுப்படையில் எடுத்துக் காட்டப்படும் பழந்தமிழர் வழிபாட்டுச் செய்திகள் பிற்காலத்தில் வந்த சிலப்பதிகாரத்திலும் நன்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பழந்தமிழர் வழிவந்த வழிபாட்டு நடைமுறைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் அதிகம் பதிவுசெய்துள்ள திருமுருகாற்றுப்படை பண்டைத்தமிழர் பண்பாட்டின் ஒரு பகுதியை அறிந்து கொள்வதற்குரிய மூலாதாரமாகவும் விளங்குகின்றது.
காஞ்சி மகாபெரிவா படிக்க சொன்ன திருமுருகாற்றுப்படை:
ஒரு சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும் சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள். எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூரணமாக நம்பும் திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் மகா பெரிவா தங்கியிருந்த காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார். சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார். எல்லாவற்றையும் கேட்ட பின், மகான், தங்கை மீனாளைப் பார்த்தார். பிறகு அவரின் பார்வை அவரது குடும்பத்தார் பக்கமும் திரும்பியது. மகானின் கண்களின் ஒளி விசேஷமே எல்லா நோய்களையும் போக்க வல்லது அல்லவா! மகான் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு பிறகு பேசினார் – “அவளைத் தினமும் ‘திருமுருகாற்றுப்படை’ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும்” என்றார்.
“அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே” என்று மெதுவாக மகானிடம் திருநாவுக்கரசு சொன்னார். “அதனாலென்ன? தெரிந்தவரைப் படிக்கச் சொல்லு… இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே! திருமுருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில் விழுந்தால் போதும்” என்று சொல்லி தன் கையை உயர்த்தி மீனாளுக்கு அருளாசி வழங்கினார்.
மகான் சொன்னவாறே மீனாளிடம், ‘திருமுருகாற்றுப்படை’ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். ஒரே மாதம்தான்… மீனாள் பூரண குணமடைந்தாள். மனக் கோளாறு முழுமையாக விலகி, இயல்பு நிலைக்கு அவள் வந்தது காஞ்சி மகானின் பேரருள்தான் என்கிறார், பதிப்பக ஜாம்பவான் திருநாவுக்கரசு. மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.
(வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு அருள்); (தெய்வத்தின் குரல் 7 பாகமும் தன் வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டவர்).
திருமுருகாற்றுப்படை முருக பக்தர்களுக்கு முக்கியமான ஸ்துதி. திருமுருகாற்றுப்படையைப் படிப்பதனால் அறுபடை வீடுகளிலுள்ள முருகப் பெருமானைத் தரிசித்த பலன் கிடைக்கும். பலர் இதனைப் பாராயணம் செய்தே கைகண்ட மருந்தாகப் பலனும் அடைந்திருக்கிறார்கள். நாமும் திருமுருகாற்றுப்படை பாராயணம் செய்து வாழ்வில் நற்பலன்களைப் பெறுவோம்.

Leave a comment
Upload