தொடர்கள்
மருத்துவ ஸ்பெஷல்
சருமப் பாதுகாப்பு- மரியா சிவானந்தம்

20260825140607965.jpeg

உடல் ஆரோக்கியம் என்றாலே இதயம் போன்ற உள்ளுறுப்புகள், கண், காது, கை ,கால்கள் போன்ற புற உறுப்புக்களை, நோயின்றி பராமரிப்பது என்று நாம் நினைக்கிறோம். இவ்வுறுப்புக்களைப் போர்த்தி பாதுகாக்கும் தோலைப் பராமரிப்பது பற்றி நாம் சிந்திப்பதில்லை. கொளுத்தும் வெயிலுக்கும், நடுக்கும் குளிருக்கும் ஈடு தந்து நம்மை காக்கும் தோல் பராமரிப்பு நம் ஆரோக்கியத்தின் முதல் படி.

' Just Let your skin breathe '(Felicity Huffman) என்னும் புகழ் பெற்ற சொற்றொடரை நாம் அறிந்துள்ளோம். நன்றாக குளித்து, முகம் கழுவி தூய்மையாக வைத்துக் கொண்டாலே சருமம் பொலிவுடன் இருக்கும், நடைமுறையில், காலத்துக்கு ஏற்ப நமது வழக்கங்கள் மாறி வருகின்றன.ஒப்பனை செய்துக் கொள்வதும், சருமத்தை அழகாக காட்டுவதும் மட்டுமே சமுகப்பராமரிப்பின் கீழ் வருவதல்ல.

'மாசு மருவற்ற சருமம் தரும் ‘ என்று விளம்பரங்களில் மயங்கி, தேவையற்ற கிரிம்களை உபயோகித்து தம் சருமத்தைப் பாழாக்கி கொண்டு, அதன் பின் விளைவுகளை அனுபவிப்பவர் பலர். சரும பராமரிப்பு என்பதை அழகுடன் இணைத்துப் பார்க்கும் சிந்தனை இங்கு எல்லோருக்கும் உண்டு. அதனால் ஒப்பனைக்கு என்று ஆயிரக்கணக்கில் செலவழிக்கும் மனோபாவம் உள்ளது.

தவிர தோலில் ஏற்படும் நிறமாற்றம், கரும் புள்ளிகள், மரு ,மங்கு, முகப்பரு, தேமல், வெண் புள்ளிகள் என்று உள்ளிருந்து தாக்கும் எதிரிகள் உண்டு இவற்றில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான சருமம் பெறுவது எப்படி ?

இவ்வித கேள்விகள் நமக்குள் எழுகின்றன.

விகடகவி ஹெல்த் ஸ்பெஷலுக்காக தோல் சிகிச்சை மருத்துவர், டாக்டர் .லாவண்யா M.B.B.S ,D .DERM ,F.A.M அவர்களைச் சந்தித்தோம்;

தோல் பராமரிப்பு பற்றிய நமது சந்தேகங்களைக் கேட்டு அவர் எளிமையாக பதில் தந்தார்.

அவரது சிறப்பு நேர்காணல் இதோ :

"சொல்லுங்க டாக்டர், எல்லா வயதினரும் சருமத்தைப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும் ?

சருமப்பராமரிப்பு என்பது அழகான தோற்றம் மட்டுமல்ல. அதைச் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இளமையில் சுருக்கமின்றி, பொலிவாக இருக்கும் சருமம் வயதாகும் போது தளர்ந்து போகிறது. நீர்ப்பசை இல்லாமல் உலர்ந்துப் போகவும் அனுமதித்து விடுகிறோம். இதைத் தவிர்க்க, எளிய பராமரிப்பு முறைகளை பின்பற்றினால் போதும். மென்மையான சோப் கொண்டு குளித்து, நீர்பசை குறையாமல் இருக்க மாய்சரைசர் உயோகிக்கலாம். வெயிலின் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்க சன்ஸகிரீன் லோஷன் தடவிக்கொள்ளலாம்

நல்ல ஆரோக்கியமான சருமத்திற்கான அடையாளம் என்ன ?

நல்ல நீர்ச்சத்துள்ள சருமம், தோல் நோய்கள் எதுவும் இல்லாமை, சிவந்த நிறம், எரிச்சல் எதுவும் இல்லாமல் இருத்தல், தோலில் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் விரைவாக குணம் அடையும் தன்மை இவையே ஆரோக்கியமான சருமத்தின் அடையாளம்.

அதிகமான மேக்கப் நமது சருமத்தை எப்படி பாதிக்கிறது ?

மேக்கப் சாதனங்களை உபயோகிக்கும் போது ஒருவரின் சருமத்துக்கு அது ஏற்றதாக இருக்கிறதா என்று சோதித்து பார்த்து உபயோகிக்க வேண்டும். எக்ஸ்பைரி தேதி பார்த்து, அது காலாவதி ஆகாமல் இருந்தால் மட்டும் உபயோகிக்கலாம். தூங்கும் முன் முழுமையாக மேக்கப்பை கலைந்து , கழுவுவது கட்டாயம். சரியாக நீக்கப்படாத மேக்கப் சருமத்துக்கு ஊறு விளைவிக்கும்.

முகப்பரு , மங்கு இவை முகத்தில் வந்தால் என்ன செய்வது?

மங்கு அல்லது முகப்பரு வந்தால் தோல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். நாமே சுய மருத்துவம் பார்க்க கூடாது. முகப்பரு வந்தால் அதைக் கிள்ள கூடாது . முகச் சுருக்கம் நீக்க 'ரெடினால்' (Retinol ) மற்றும் அமிலத்தன்மை கொண்ட அழகு சாதனப் பொருட்களை, மருத்தவர் ஒப்புதல் இன்றி பயன்படுத்த வேண்டாம். முகத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் (SPF 30 ) பயன்படுத்தலாம். வெளியில் செல்லும் போது குடை அல்லது தலைத்தொப்பி அணியலாம். உடலில் இருக்கும் கரும்புள்ளிகள் , மச்சங்கள் தம் அளவில் பெரிதானால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

சருமப்பராமரிப்பில் பூசு மஞ்சள், வேம்பு , தேங்காய் எண்ணெய் ,கற்றாழை போன்ற இயற்கை பொருட்களை நமது தாய்மார்கள் பயன்படுத்தி வந்துள்ளார் . இவை இன்றும் பயன்படுத்தலாமா ?

ஒரு தோல் மருத்துவராக , உங்கள் சருமத்துக்கு எது ஏற்றது என்பதை உறுதி செய்த பின்னே பயன்படுத்த வேண்டும் என்றே நான் சொல்வேன். 'இயற்கை ' பொருட்கள் என்று நாம் குறிப்பிடும் பொருட்களை நேரடியாக தோலில் பயன்படுத்தினால் சில 'சென்சிடிவ் ஸ்கின்' எனப்படும் மென்மையான சருமங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை. எரிச்சல் அல்லது மங்கு வர வாய்ப்புண்டு. உலர்ந்த சருமத்துக்கு தேங்காய் எண்ணெயை உடலில் தேய்த்துக் குளிக்கலாம். ஆனால் முகத்தில் தடவ வேண்டாம்.

நல்ல ஆரோக்கியமான சருமத்துக்கு என்ன செய்ய வேண்டும்

முதலில் தோலில் நீர்ப்பசை குறையாமல் இருக்க தண்ணீர் நிறைய குடியுங்கள். புரோட்டின் , நார்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள். நட்ஸ், ஒமேகா 3 (Fatty acid ) ஆகியவை தோலுக்கு தேவையான சத்தைக் கொடுக்கும்.

உடல் எடை குறைய Crash Diet போன்றவற்றை பின்பற்ற வேண்டாம். தோல் பராமரிப்புக்கு என்று ஒரே ஒரு Super Food பரிந்துரைக்க முடியாது. எல்லா சத்துக்களும் கலந்த சரிவிகித உணவு உங்கள் தட்டில் இருக்கட்டும் .

தோல் பிரச்சனைகளுக்கு மருத்தவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுக்க வேண்டும் . தலைக்கு பூசும் டை, மெஹந்தி , சருமக் களிம்புகள் இவற்றை முதலில் சோதித்த (Patch test ) செய்த பின்பே பயன்படுத்த வேண்டும்"

எளிமையான வழிகளே போதும் நல்ல ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்" என்று முடித்துக்கொண்டார்

விகடகவி வாசகர்கள் சார்பில் டாக்டர். லாவண்யா அவர்களுக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டோம் .

"The best makeup foundation you can wear is glowing skin " என்பது நிஜம் தான்.

நல்ல சருமம் நமக்கு உடல் பொலிவை தருகிறது . அது உள்ளத்தில் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

சருமத்தை நன்முறையில் பாதுகாப்போம்