தொடர்கள்
கதை
சின்ன சின்ன ஆசை - குட்டி பாலா

20260825235206529.jpeg


"என்னங்க, இந்தப் பெண்ணைப் பாருங்கள்" என்று கணவன் கந்தப்பனை அழைத்து மொபைலை காட்டினாள் கௌசல்யா.

"ஆஹா அடக்கமான- ஆனால் அட்டகாசமான அழகு. யார் இவள்?" என்று ஆர்வமாக கேட்டார் ஜிகே சில்க்ஸ் ஓனர் கந்தப்பன்.

"தெரியாது. கண்ணனின் (அவர்களின் ஒரே மகன்) காலேஜ் விழா போட்டோவில் இருந்தது" என்றாள் கௌசல்யா.

"சரி, அவனிடம் பிறகு கேட்டுக் கொள்ளலாம். நான் புறப்பட வேண்டும்" என்று சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டவர் சட்டென்று நின்று "கௌசல்யா, அந்த போட்டோவைக் காட்டு" என்று வாங்கி ஜூம் பண்ணிப் பார்த்துவிட்டு "இந்த போட்டோவை நம் கடையில்தான் எடுத்திருக்கிறார்கள்" என்று சிரித்தார்.

தொடர்ந்து "இந்தப் பெண் புடவை அணிந்து கொண்டு அழகு பார்க்கும் கண்ணாடியில் கீழே ஓரமாக நம் கடை லோகோ GKS இருப்பதை கவனித்தாயா?" என்று மகிழ்ச்சியோடு மறுபடியும் சிரித்தார்.

அந்த போட்டோவில் எடுக்கப்பட்ட தேதியும் நேரமும் இருந்ததைப் பார்த்துவிட்டு "இவள் யாரென்று இன்றே கண்டுபிடித்து விடலாம்" என்று சொல்லிவிட்டு கடைக்கு புறப்பட்டார்.

கடை அலுவலகத்தில் அந்த போட்டோவை மேனேஜரிடம் காட்டி விசாரித்ததில் அது அங்கே வேலை செய்யும் சேல்ஸ் உமன் திலகாவின் மகள் என்று தெரிந்ததும் திலகாவை வரவழைத்தார்.

பயத்தோடு முதலாளியின் அறைக்குள் நுழைந்ததுமே "அய்யா மன்னித்துவிடுங்கள்" என்று காலில் விழுந்தாள் திலகா.

புரியாமல் திகைத்த கந்தப்பன் "எழுந்திரு" என்று சொன்னதும் "அய்யா, ரொம்ப நாளாக என் ஒரே மகள் பானுப்பிரியா இது போன்ற விலை உயர்ந்த பட்டுப்புடவை கட்டிக்கொண்டு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள். என் கணவரோ ஒரு தூய்மை பணியாளர்.

நம்மால் இது மாதிரி புடவைகள் ஒருநாளும் வாங்க முடியாது என்று சொல்லி தட்டிக் கழித்து வந்தேன். அவள் 'உங்க கடையில் உள்ள பொம்மைகளுக்கும் அங்கே சேலை வாங்க வர பெண்களுக்கும் புடவை கட்டிவிடும் வேலைதானே பார்க்கிறாய். ஒரே ஒருமுறை சொந்தப் பெண்ணுக்கு கட்டி விட்டால் குறைந்தா போய்விடுவாய். நான் என்ன விலைக்கா வாங்க சொல்லுகிறேன்' என்று விடாமல் நச்சரித்தாள். கடைசியில் அவளுடைய ஆசைக்காக இப்படி செய்து விட்டேன். தயவு செய்து மன்னித்து விடுங்கள்" என்று மீண்டும் காலில் விழ வந்தாள்.

"சீச்சீ, நிறுத்து உன் அழுகையை. மகள் மூலம் உனக்கு அதிர்ஷ்டம் வந்திருக்கிறது. இனிமேல் இது மாதிரி நிறைய போட்டோக்கள் நம் எல்லா கடைகளிலும் தொங்கப் போகிறது" என்றார்.

"அய்யா புரியவில்லையே என்றவளிடம் "நாளைக்கே உன் மகளை அழைத்துக் கொண்டு வா என்றதும் "சரிங்க" என்று கண்களை துடைத்துக்கொண்டு வெளியேறினாள் திலகா.

இன்று ஜிகே சில்க்ஸின் விளம்பர மாடலாக திலகாவின் மகள் பானுப்ரியா.

புதிய கிளைக்காக தகுந்த மாடலை தேடிவந்த தனக்கு இவளை அனுப்பி வைத்தது தான் வணங்கும் கண்ணனே என்று மகிழ்ந்தார் கந்தப்பன்.

அவள் ஜி.கே. சில்க்ஸ் மட்டுமல்ல... இன்னும் பல பிரபல கம்பெனிகளுக்கு மாடலாகப் போகிறாள் என்பது அவருக்கு தெரியாது பாவம்.