தொடர்கள்
விகடகவியார்
குறைவாக அல்லது கூடுதலாக தூங்கினாலும் முதுமை வரும்

20260825175446564.jpeg

ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்கலாம்? இந்த சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. பொதுவாக ஆறு மணி முதல் எட்டு மணி நேரம் தூக்கம் போதுமானது என்பதுதான் மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

இதை விட குறைவாக அல்லது அதிக நேரம் தூங்கினால் அவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் முதுமை அடைந்தவர் போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு நாளைக்கு 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்குபவர்களுக்கு பெரிய அளவு உடல்நிலை பிரச்சனைகள் இல்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மிகக் குறைவாக அல்லது அதிகமாக தூங்கியவர்களிடம் முதுமைக்கான அறிகுறிகள் தென்படுகிறது என்று அந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொண்டார்கள். தூங்கும் நேரத்துக்கும் முதுமை அடைவதற்கும் இடையே ' U ' வடிவிலான தொடர்பு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இயல்பான அளவு தூங்கியவர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள். மிகக்குறைவாக அல்லது அதிக நேரம் தூங்கியவர்கள் ஆரோக்கியம் குறைந்து முதுமையானவர்கள் போன்ற தோற்றத்துடன் அவர்கள் காணப்பட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஒரே அளவு தூக்கம் தேவைப்படுவதில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதய ஆரோக்கியத்துக்கு ஆறு மணி நேரத்துக்கு போதுமானது .மூளையின் ஆரோக்கியத்திற்கு எட்டு மணி நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. வயதுக்கும் தூக்கத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள் .

இளைஞர்கள் ஆறு மணி முதல் 8 மணி தான் தூங்கும் பழக்கம் அவர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. ஆனால், வயதாகும் போது தூங்கும் நேரம் மெல்ல குறைய தொடங்குகிறது. சில வயதானவர்கள்," இரவு முழுவதும் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டே இருந்தேன்" என்று சொல்வதற்கு அவர்கள் முதுமை தான் காரணம் என்கிறார்கள்.

தூக்கமின்மை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பாதிக்கக்கூடும். இதனால் சிறுநீரகம் மூளையில் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே நேரத்தில் தூக்கம் என்பது அவசியம் என்கிறார்கள். மூளை செயல் என்பது ஒரு கணினி போல தான். நாம் தூங்கும் போது கூட செயல்பட்டுக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் அந்த தினம் நாம் பெற்ற நினைவுகளை அது ஒழுங்குபடுத்துகிறது.

தவிர நாம் தூங்கும் போது மூளையில் சேரும் கழிவு பொருட்கள் அகற்றப்படுகின்றன. மூளைக்கும் இதயத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உடலின் பல்வேறு செயல்பாடுகளை மூளை கட்டுப்படுத்துகிறது. மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்காவிட்டால், அது இதயத்தின் செயல்பாட்டை பாதிக்க செய்யும்.

சும்மா படுத்திருக்கிறேன் என்பதும் சரி இல்லை. அமைதியான தூக்கம் ஆரோக்கியத்துக்கான வழி. அதேபோல் குறட்டை என்பதுவும் தூக்கம் தடைபடுவதற்கான அறிகுறி. அதிக நேர தூக்கம் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை பாதிக்கும். உடற்பயிற்சி மற்றும் யோகா அமைதியான தூக்கத்துக்கு சிறந்த வழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மொபைல் போனுக்கு மின்னூட்டம் இல்லாவிட்டால் அது செயல்படாது. அதேபோல் தூக்கம் இல்லாவிட்டால் மூளை திறம்பட செயல்பட முடியாது.

விழித்து எழும்போது புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பு இருப்பதாக உணர்ந்தால் நீங்கள் அமைதியாக தூங்கினீர்கள் என்று அர்த்தம்.

தூங்கி எழும்போதே தலைவலி உடல் வலி போன்ற தொந்தரவுகள் இருந்தால் நீங்க சரியாக தூங்கவில்லை என்பதுதான்.

தூக்கம் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல மனம் சம்பந்தப்பட்டது தேவையற்ற சிந்தனைகள் எதிர்வினை செயல்பாடுகள் கூட நமது தூக்கத்துக்கு எதிரிகளே.