தொடர்கள்
தொடர்கள்
தமிழுக்கு ஒரு முத்தம்’ – 2 - பித்தன் வெங்கட்ராஜ்

20240228114511702.jpg

‘ஆள் பாதி, ஆடை பாதி’

‘ஆடையில்லா மனிதன் அரை மனிதன்’

ஆகிய பழமொழிகள் நமக்கு வெகுபரிச்சயமானவை. இதன்படி ஆதிமனிதன் அரை மனிதனாகத்தான் இருந்திருக்கிறான். மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிக உன்னதமான கண்டுபிடிப்பு என்றால் கண்ணை மூடிக்கொண்டு ‘ஆடை’ என்று சொல்லலாம். ஏனென்றால், ஆடை இல்லாத மனித குலத்தை இப்போது கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது நம்மால்.

மனிதன் தன் நிர்வாணத்தை மறைக்க ஆடை ஒன்று வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்த இடமே தனிமனித நாகரிகத்தின் தொடக்கம் என்றுகூடச் சொல்லலாம். அப்படி மனிதன் அணிந்த முதல் ஆடை ‘தழையாடை’தான் என்பதை நாம்‌ அனைவரும் அறிந்திருப்போம்.

20240228114721161.jpg

தழையாடை என்பது காடுகளில் கிடைக்கும் இலை தழைகளை வைத்துத் தயாரிக்கப்பட்ட ஆடை. அப்படித் தயாரிக்கப்பட்ட தழையாடைகளிலும் நம் குறிஞ்சி நிலப் பெண்கள் எந்த மாதிரியான தழையாடைகள் அணிந்திருந்தனர் என்று சொல்கிறது கீழ்வரும் திருமுருகாற்றுப்படைப் பாடல்.

இணைத்த கோதை, அணைத்த கூந்தல்

முடித்த குல்லை, இலையுடை நறும்பூ

செங்கால் மரா அந்த வால்இணர், இடைஇடுபு

சுரும்பு உணத் தொடுத்த பெருந்தண் மாத்தளை

திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ…( வரிகள் 200- 204)

அதாவது, பல்வேறு பூக்களையும், பூங்கொத்துகளையும் இடையிடையே வைத்துக் கட்டியதால் வண்டுகள் மொய்க்கக்கூடியதும், குளிர்ச்சி தரக்கூடியதுமான பெரிய இலை தழைகளான ஆடைகளைத் தம் அடிவயிறு மகிழும்படியாகப் பெண்கள் அணிந்திருந்தனர் என்கிறது திருமுருகாற்றுப்படை. தழையாடையிலும் எவ்வளவு அழகு!

இதுபோக,

‘பாசி அன்ன சிதர்வை நீக்கி

ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம்

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் உடீஇ’( வரிகள் 467-469)

என்ற பெரும்பாணாற்றுப்படை வரிகளில் ‘ஆவிஅன்ன அவிர்நூற் கலிங்கம்’ என்ற வரி ஆவிபோன்ற மெலிதான அதேசமயம் நல்ல ஒளிவீசக் கூடிய நூலால் ஆன ஆடை என்று பொருள் தருகிறது.

20240228115022672.jpg

பாசி போன்ற கந்தலான ஆடைகளை நீக்கி, ஆவிபோன்ற மெல்லிய மற்றும் நல்ல ஒளிவீசக்கூடிய நூலால் ஆன ஆடையை மன்னன் பாணர்க்கும் அவர்தம் சுற்றத்தார்க்கும் வழங்கினான் என்பது இப்பாடலின் செய்தி.

இதுபோலவே விதவிதமான நுண்ணிய வேலைப்பாடுகள் மிக்க ஆடைகள் பற்றிய பல தகவல்கள் நம் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. இவை ஆடை தயாரிப்பில் தமிழர்களின் கலை நயத்தைக் காட்டுகின்றன.

தழையாடை, பூக்கள் தொடுக்கப்பட்ட தழையாடை, ஆவி போன்ற மெலிதான அற்புதமான நூலாடை போன்றவற்றையும் தாண்டி இன்னோர் அற்புதமான ஆடை வழக்கம் மதுரைக் காஞ்சியில் குறிக்கப்பட்டுள்ளது.

‘வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச்

சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்

உடைஅணி பொலியக்… (வரிகள் 720-722)

என்னும் இவ்வரிகளில் ‘சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்’ என்றால், சோறு வடிக்கும்போது பெறப்பட்ட நீரினை உடைய ஆடை என்று பொருள். சோறு வடிக்கும்போது பெறப்பட்ட நீர் என்பது வேறொன்றுமல்ல, கஞ்சிதான். ஆம், கஞ்சி போட்டு சலவை செய்யப்பட்ட ஆடையை அரசன்‌ அணிந்திருந்தான் என்பதுதான்‌ அவ்வரிகளின் பொருள்.

சட்டைக்குக் கஞ்சி போடும் வழக்கம் இன்று நேற்று உதயமானதல்ல. கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் மருவிய காலத்திலேயே ஆடைகளுக்குக் கஞ்சி போடும் வழக்கம் இருந்துள்ளது என்பதை அறிய மிக வியப்பாக உள்ளதுதானே!

கஞ்சி போட்டுத் தேய்த்த சட்டையை அணிந்து மன்னன் கம்பீரமாகத் தோற்றமளித்தான் என்ற அற்புதமான தகவலை நமக்குத் தந்த மாங்குடி மருதனார்க்கு ஒரு தமிழ்முத்தம் தந்தோம்.

அவர்க்கும், நமக்கும் எப்போதும் ஒரு கஞ்சிபோட்ட ஆடையாய் கம்பீரம் கூட்டும் நம் தமிழுக்கு இத்தொடரில் இது இரண்டாவது முத்தம்.

தொடரும்.