தொடர்கள்
கவர் ஸ்டோரி
கொல்கத்தா.. கொடுமை…நீதிமன்றம் கடுமை !! வன்முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு - விகடகவியார்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்கோள் காட்டியது

20240723180337492.jpg

இந்த விசாரணையின் போது மருத்துவமனையில் இது போன்ற பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் சம்பவத்தை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எடுத்துக் காட்டினார். “மருத்துவத் துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு 'அருணா ஷான்பாக்' வழக்கு ஓர் எடுத்துக்காட்டு” என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். அந்த வழக்கு குறித்த தகவலகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த விவரத்தை இங்கே காணலாம்...

மும்பை கிங் எட்வர்ட் மெமோரியல் (KEM) மருத்துவமனையில் செவிலியராகப் பணிக்குச் சேர்ந்தவர் அருணா ஷான்பாக். அப்போது 25 வயதான அருணா, அறுவைச்சிகிச்சைப் பிரிவில் செவிலியராகப் பணிபுரிந்தார். பின்னர், அதே மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்த சுந்தீப் சர்தேசாய் என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதுடன், 1974-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் நடைபெறுவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டிருந்தது.

1973-ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி இரவு வார்டு ஊழியராகப் பணியாற்றிய சோஹன்லால் பார்தா வால்மீகி என்ற நபர், பின்னால் வந்து அவரைத் தாக்கினார். மேலும், நாயைக் கட்டி வைக்கும் சங்கிலியால் அருணாவின் கழுத்தை இறுக்கினார். அருணா சுயநினைவை இழந்தார்.

அருணாவைப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, நகையையும் பணத்தையும் சோஹன்லால் எடுத்துச் சென்றுவிட்டார். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் நாய்களுக்கான உணவுப் பொருட்களை சோஹன்லால் திருடியதையும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் அருணா தெரிவிப்பதாகக் கூறியதையும் அடுத்தே, அவர் அருணாவைக் கொலை செய்யும் நோக்கத்தில் இருந்துள்ளார்.

தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்த தாக்குதலால் அருணாவுக்கு மூளையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாததால், அருணாவின் கண்கள் மட்டுமே திறந்திருந்தன. வேற எந்த உணர்வுகளும் அவரிடம் இல்லை.

கோமா நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். அருணாவின் இந்த நிலையால் குடும்பம் அதிர்ந்து போனது திருமணம் நின்றுபோனது. குடும்பத்தினர் அருணாவை உதறியபோதும், மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு உணவு கொடுத்ததுடன், அவருடைய அடிப்படைத் தேவைகளுக்காகவும் உதவி செய்தனர்.

இதற்கிடையே அருணா பாதிக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, சோஹன்லால் கைது செய்யப்பட்டார். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், இது எதுவுமே அருணாவுக்குத் தெரியாது என்பதுதான். சோஹன்லால் மீது திருட்டு, கொலை முயற்சி என இரு வழக்குகளே பதியப்பட்டன. இன்று போல், அன்று பாலியல் வன்புணர்வு வழக்கு அவர் மீது பாயவில்லை. இதையடுத்து, அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அவர் 1980-இல் விடுதலை செய்யப்பட்டார்.

அதே நேரத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக படுத்த படுக்கையாகக் கிடந்த அருணாவின் நிலையைப் பார்க்க முடியாதவர்கள், அவரைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இருப்பினும் அருணாவின் தோழியும் செவிலியருமான பிரதீபா பிரபு, “மருத்துவமனை அருணாவைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறது, இயற்கையான மரணத்துக்கு அருணா தகுதியானவர்” என்று சொன்னதால், கருணைக் கொலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளிக்கவில்லை.

2011-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி, ‘அருணா மூளைச்சாவு அடையவில்லை’ என தெரிவித்த உச்ச நீதிமன்றம் அருணாவின் கருணைக் கொலை மனுவை நிராகரித்தது. அப்போதுதான், இவரைப் பற்றி செய்திகள் நாடு முழுவதும் தெரிய ஆரம்பித்தன. இப்படியாக வழக்கிற்குப் பிறகும் கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் உயிரோடு இருந்த அருணா, 2015-ஆம் ஆண்டு மே 18 அன்று நிமோனியா தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தைத்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இன்று எடுத்துக்காட்டியுள்ளார். இதேபோன்ற ஒரு கொடூர சம்பவம் தான் மருத்துவர் ஒருவரின் மீது கொல்கத்தா மருத்துவமனையில் தற்போது அரங்கேறியிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

20240724083024356.jpeg