தொடர்கள்
கதை
ஒரே வார்த்தை -வி பிரபாவதி

20260128082213272.jpeg

வனஜாவின் மனநிலை அறிந்து செயல்படுவான் பாஸ்கரன். கொஞ்சம் கோவம், கொஞ்சம் பாசம், கொஞ்சம் கரிசனம் என்றிருப்பவள். எல்லாம் கொஞ்சம்தான். ஆனால் எதுவும் ‘கொஞ்சும்’ விதத்தில் இருக்காது.

தற்போது அம்மா ஊரிலிருந்து வருகிறாள். சின்ன வயதில் அப்பா இறந்து விட்டாலும் நிலபுலம், வீடு வாசல் இருந்ததால் கஷ்டநிலை இருக்கவில்லை.

விபரம் தெரிந்த வயதில் அப்பாவின் இழப்பு வெற்றிடமாய் போனது. நல்ல விவசாயி, நல்ல மனிதர், சிறந்த பக்திமான். சீக்கிரம் சிவனடி சேர்ந்துவிட்டார்.

இவர்கள் கிராமத்துக்குப் போய் வருவதுண்டு. பெரிதாக சண்டை சச்சரவுகளோ, சந்தோஷங்களோ குறிப்பிடும்படி இருந்ததில்லை. பெரியம்மா, சின்னம்மா முன் பெருமையாக நடந்து கொள்வார் அம்மா.

தற்போது திருமணம் ஆகி மூன்று வருடங்கள் கழித்து அம்மா முதலில் சென்னைக்கு வருகிறாள். எத்தனை நாட்கள் தங்கப் போகிறாள் என்பது தெரியாது. நல்லவேளையாக அவன் குடியருப்பது டபுள் பெட்ரூம் ப்ளாட்!

அலுவலகத்திலிருந்து வந்தவனுக்கு ஆச்சர்யம். அட்டாச்சுடு பாத்ரூம் இருக்கும் தங்கள் அறையை மாமியாருக்காக தயார் செய்திருந்தாள்.

துணை தேவதை மாரியம்மாவின் கணவன் கோவிந்தன் உதவியிருக்கிறான்.

மறுநாள் கார் எடுத்துக் கொண்டு போய் அம்மாவை அழைத்து வந்தான். சென்னையை அதிசயமாக பார்த்துக் கொண்டு வந்தாள் அம்மா. முகமலர்ச்சியுடன் காணப்பட்டாள். பயண அலுப்பே தெரியவில்லை.

வாசலுக்கு வந்து வரவேற்றாள் வனஜா. “வாங்க அத்தை, உள்ள வாங்க” என்றவாறு கைப்பையை வாங்கி அமரச்செய்தாள்.

பாஸ்கரன் காரிலிருந்து இறக்கிய இரண்டு மூன்று லக்கேஜுகளை இவளும் வாங்கி உள்ளே வைத்தாள்.

இருவருக்கும் காபி கலந்து தந்தாள். வனஜாவிற்கு எப்போதுமே ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’தான்.

அதுதான் பாஸ்கருக்கு பயமாக இருந்தது. இருவருக்கும் ஒத்துப் போக வேண்டுமே என்ற கவலை. என்னாகுமோ? அலுவலகத்திற்கு போன் வந்து ஓடிவர வேண்டுமோ? அம்மா கோபித்துக் கொண்டு ஊருக்குப் போக நேரிடுமா?

இல்லை வனஜா ஐந்து கிலோ மீட்டரில் இருக்கும் பிறந்த வீட்டிற்கு போய்விடுவாளா?

குழம்பித் தவித்தான்.

வனஜா சாதாரணமாக இருந்தாள். டிபன், சமையல், டின்னர் என்று அசத்தினாள். அம்மாவும் உதவி செய்தாள். நாட்கள் நன்றாகவே நகர்ந்தன. இருவரும் ரொம்பவும் ஈஷிக்கவில்லை என்றாலும் மனஸ்தாபங்கள், தடித்த வார்த்தைகள் வரவில்லை.

பாஸ்கரனுக்கு சந்தோஷம் என்றாலும் ஆச்சர்யமும் அதிசயமுமாக இருந்தது. எப்படி சாத்தியம். வனஜா ரொம்ப நல்லவளா? நான் புரிந்து கொள்ளவில்லையா?

“வாங்கம்மா, வாங்கப்பா, அத்தை எங்கம்மா அப்பா வந்துருக்காங்க என்று மூவரையும் ஹாலில் சோபாவில் அமரவைத்துப் பேசச் செய்தாள்.

காபி கொடுத்துவிட்டு தனக்கு மீட்டிங் இருப்பதால் சாப்பாடு எல்லாம் விரைவில் தயார் செய்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டாள்.

“நல்லாருக்கிங்களா? ஊர்ல எல்லாம் எப்படியிருக்காங்க?”வனஜாவின் அம்மா நலம் விசாரித்தார்.

“ம்ம் எல்லாரும் நல்லா இருக்கோங்க. நீங்க எப்படி இருக்கீங்க? அறுவடைக்குள்ள போகணும். புள்ளங்க கூப்ட்டுக்கிட்டே இருக்காங்க. சரி வந்து கொஞ்சநாள் இருக்கலாம்னு வந்தேன்” என்றாள் பாஸ்கரனின் அம்மா.

“நல்லா இருங்க, அடிக்கடி வாங்க. ஒங்க வீட்டுக்கு நீங்க வர்ரதுக்கென்ன” என்றார் வனஜாவின் தந்தை.

பாஸ்கர் குழப்பத்தின் உச்சியில் இருந்தான். அதென்ன எதுவுமே நடக்கவில்லை. எல்லாம் அமைதியாகப் போய்க் கொண்டிருக்கிறது? எப்படி? வனஜாவின் அம்மாவும் உள்ளே போய் மகளுக்கு எதுவும் சொல்லித்தரவில்லை. புரியவில்லை. “எது நடக்கிறதோ? அது நன்றாகவே நடந்தது.

அம்மாவை அழைத்துக் கொண்டு இரண்டு படங்கள் போய்ப் பார்த்தாள். மாலுக்குப் போய்வந்தாள். புடவைக் கடைக்குச் சென்று அத்தைக்கு, பெரிய அத்தைக்கு, சின்ன அத்தைக்கு, பெரிய அத்தை மருமகளுக்கு என்று புடவைகள் வாங்கி அடுக்கிக் கொடுத்தாள்.

அம்மா மிகவும் சந்தோஷமாக ஊருக்குக் கிளம்பினாள். அம்மா தன்னைவிட வனஜாவிடமே அதிகம் பேசியதாக பழகியதாக நினைத்தான் பாஸ்கரன்.

“ அத்தை நான் வனஜா பேசறேன். நீங்க மட்டும் எனக்குப் போன் பண்ணலன்னா நா எப்படி நடந்துட்டுருப்பேன்னு தெரியாது. நீங்க சொன்னதால அத்தையும் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. நானும் ஒரு புது மாதிரியான சந்தோஷத்தை அனுபவித்தேன். ரொம்ப தேங்க்ஸ் அத்தை”என்றாள்.

பாஸ்கரனுக்கு குழப்பம் அதிகமானது எனலாம். மெல்ல வனஜாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

என்ன நடந்திருக்கும்?பெரியத்தை வனஜாவிடம் போன் போட்டு “அம்மாடி ஒங்கத்தை வாழ்க்கைல பெரிய சந்தோஷத்தை அனுபவிச்சதில்லை. அவ ஒலகமே அவள் மகன்தான். இப்ப நீயும் அவ மனசுல நெறைஞ்சு இருக்க. ஒங்க மாமியார், அத்தை வர்ராங்கன்னு நெனைக்காம “அம்மா” வர்ராங்கன்னு நெனச்சுப் பாத்துக்கம்மா. இங்க கிராமத்துல சின்ன விஷயம்னாலும் ஊதி ஊதி பெரிசாக்குவாங்க. சூதானமா நடந்துக்கம்மா” என்று சொல்லியிருந்தாள். அதன் பிரதிபலிப்பு தான் இந்த அன்பும், சந்தோஷமும்.

வனஜா காத்திருந்தாள். ஊருக்குச் சென்ற அத்தைத் தன்னைப்பற்றி என்னென்ன சொல்லியருப்பாள் என்பதை பெரியம்மா வாயிலாகக் கேட்க ஆர்வமாகக் காத்திருந்தாள்.