ஸ்ரீக்ருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

மும்பையில் விநாயக சதுர்த்தி களைகட்டத் தொடங்கி விட்டது. சிறிதும் பெரிதுமாக விநாயகர் சிலைகள் லாரிகளிலும் டெம்போக்களிலும் விழா பந்தல்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன.
நின்ற விநாயகர், ஒய்யாரமாக கையை அண்டை கொடுத்து சாய்ந்த பிள்ளையார், சித்தி புத்திகளோடு சம்சார கணபதி,
எலி மேலும் மயில் மேலும் மோட்டார் சைக்கிள் மேலும் ஆரோகணித்த விநாயகர்கள் என்று எத்தனை மூர்த்தங்கள் சாலையில் போய்க் கொண்டிருக்கின்றன?!
முன்மாலையின் வாகன நெரிசல் வேறு! என் கார் ஜானவாச ஊர்கோலமாய் ஊர்கிறது. மாதுங்கா வரை போகிறேன். ராம சமாஜம் கோயில் காமாட்சிக்கு புடவை சார்த்த வேண்டும். புடவையைக் கொடுக்கத் தான் போய்க் கொண்டிருக்கிறேன்.
நாளைக்கு கிருஷ்ண ஜெயந்தி.
மாதுங்கான்னா பாதி மைலாப்பூர்.
தமிழ் ஒலிக்கும் தெருக்கள்.
‘இங்க வேண்டாண்டி! மூலைக் கடையிலே புஷ்பம் வாங்கிக்கலாம். நல்லாருக்கும்’. யாரோ கனமான குரலில் பேசியபடி கடந்தார்கள்
‘டிடிங்’ என்றொரு வாட்ஸப் மெசேஜ் என் மொபைலில் வந்து விழுந்தது.
அப்படியே பழனியப்பா ஸ்டோரில் ஐந்தாறு ஐட்டங்கள் வாங்கி வருமாறு இல்லத்தரசியின் வேண்டுகோள்… வேண்டுகோளென்ன.. கட்டளை தான்!
காரை பார்க் பண்ணச் சொல்லிவிட்டு காலாற நடந்தேன். பாதையோர வண்டிக் கடைகளில் முத்துமுத்தாக நாவல் பழங்கள் கண் சிமிட்டுகின்றன. மிஷினில் வார்த்தார்போல ஒரே அளவில்…
‘காக்கை றெக்கையிலே
காயாம்பு நெறத்தினிலே
நாவப் பழத்தினிலே
நல்கருப்பு எங்க மச்சான்!’ பழைய நாட்டுப்புற வரிகளை என் வாய் முணுமுணுத்தது.
முன்பெல்லாம், இப்படித் தோணுவதையெல்லாம் என்னுடன் இருப்பவர்களுக்குச் சொல்லி என் வித்வத்தை பறை சாற்றியபடி இருப்பேன்.
இப்போதோ இங்கே அப்படி உடன் வருபவர் அதிகமில்லை. பிள்ளைகளுக்கோ நேரமில்லே. அப்படியே கூட வந்தாலும் அவர்கள் மொபைலில் ஓயாத அலுவலக சள்ளை. என் இல்லத்தரசியும் அதிகம் கூட வருவதில்லை. அவள் ஜமா பெண்டுகளோடு போவாள். என் வசனங்கள் அவளுக்கு அலுத்திருக்கும்!
பழனியப்பா ஸ்டோர் போகும் குறுகலான சந்தில் திரும்பினேன். அங்கே ஒரு ‘காலா பீலி’ கருப்பும் மஞ்சளுமாக வர்ணமடித்த லோக்கல் டாக்ஸி பாதையை அடைத்து நின்றிருந்தது.
நீண்ட தாடி வைத்த அதன் ஒல்லியான டிரைவருக்கும் அதில் பயணம் செய்த இளைஞனுக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. இருவரும் வண்டியிலிருந்து இறங்கி பிளாட்பார்முக்கு வந்து விட்டிருந்தார்கள்.
அவர்கள் வழிவிட்டால்தான் நான் போகவே இடம் கிடைக்கும். நின்று அவர்களை கவனித்தேன்.
“சாப்! நீங்க ஏறும்போதே கேஷாகத் தான் கொடுக்கடுணும்னு சொன்னேன் இல்லையா? இப்போ ஜீபே பண்றேன்னா என்ன அர்த்தம்? என் கிட்டே ஜீபே எழவுல்லாம் கிடையாது” இது டிரைவர்
“ஏம்ப்பா! நான் வண்டில ஏறும் போது மொபைல்ல பேசிக்கிட்டே ஏறினதால நீ சொன்னதை கவனிக்கல்லே. இப்ப நான் என்ன பண்றது? என் கிட்டே இப்போ மொபைல் மட்டும் தானே இருக்கு?” இளைஞனின் பதில்.
“கையிலே நூறு ருபாய்கூட இல்லாம எப்படி வெளியில கிளம்புறீங்க? “
அந்தப் பிள்ளை பளீரென்று நம்ம அஜீத் போல இருந்தான். மயில் நீலத்துல டைட்டா டி சர்ட். வெள்ளை பேண்ட், சாக்லேட் வண்ண ஷூ. கையில் டிஸ்ஸோ வாட்ச். தடிமனாக ஒரு தங்க செயின் டிசர்ட் காலர் அருகே நெளிந்தது. ஜிம்மில் உரமேற்றிய உடல்வாகு.
எனக்கொரு பெண் பிள்ளை மட்டும் இருந்திருந்தால் விசாரிச்சுட்டு கண்ணைமூடிக் கொண்டு கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பேன்.
“டிரைவருக்கு எவ்வளவு தம்பி கொடுக்கணும்?” கேட்டது நான் தான்.
“தொண்ணூத்தியஞ்சு ரூபா தான். நான் வரும்போது பணம் வச்சுக்கல்லே. நீங்க நூறு ரூபாய் கேஷா கொடுத்தீங்கன்னா
கையோட உங்களுக்கு ஜீபே பண்ணிடறேன். ப்ளீஸ்”
“ ஹாங்.. ஹாங்… நீங்க பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டேன்” என்றபடி நூறு ரூபாயை எடுத்து நீட்டினேன்.
அதை வாங்கிக் கொண்டு டிரைவர் வண்டியைக் கிளப்பவும், நம்ம அஜீத் மாப்பிள்ளை தம்பிக்கு மொபைலில் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
வலது ஆட்காட்டி விரலின் முதற் கணுவில் கட்டைவிரலில் பொருத்தி ஒரு இன்ச் என்பது போன்ற முத்திரையுடன் ‘ஒரு நிமிஷம்’ என்று அலைபேசியோடு ஒதுங்கினான்.
எனக்கும் அப்போதே தர்மபத்தினியிடமிருந்து மொபைலில் அழைப்பு வர, ‘சொல்லும்மா!’ என்று விசாரித்தபடி நடந்தேன்.
“மறக்காம வொயிட் பட்டர் ஒரு கிலோ வாங்கிக்குங்க!” என்றாள்.
அது என்ன வொயிட் பட்டர்? வெண்ணைன்னாலே வெள்ளையாத் தானே இருக்கும்? சால்ட் போடாத பட்டரைத் தான் இப்படிச் சொன்னாளா?
நமக்கென்ன போச்சு? அண்ணாச்சிக் கிட்டே அவ சொன்னதைச் சொல்லுவோம். அவர் கொடுக்கிறதை வீட்டுல கொடுப்போம். கிருஷ்ணராச்சு! ‘வொயிட் பட்டரா’ச்சு!
வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வாங்கி வந்த சரக்கை பையிலிருந்து எடுத்து வைத்தபடி,‘இன்னைக்கு லட்சணமா ஒரு பையன் கையில பணம் இல்லாம டேக்ஸில வந்தானா…’ என்று இவளிடம் சொல்ல ஆரம்பித்தேன்.
“எவ்வளவு ரூபாய் இன்னைக்கு மொய் எழுதினீங்க?” என்றாள்.
அட ஆமாம்! அஜீத் தம்பி கிட்டே நின்னு ஜீ பேயில் பணம் வாங்காம வந்துட்டமே! போகட்டும். நூறு ரூபாய் தானே?
வொயிட் பட்டரை பிரிட்ஜில் எடுத்து வைத்தேன்.

Leave a comment
Upload