தொடர்கள்
கதை
சென்னைக்கு மிக அருகில் - குட்டி பாலா

20260805093109864.jpeg

"என்ன குமார், திடீர் சென்னை விஜயம்?" என்று கேட்ட நந்தகோபாலிடம் "மாமா, நண்பன் ஆரோக்கிய சாமியின் புதுமனை புகுவிழா. நாளை இங்கே சென்னையில். முப்பதாண்டு பழக்கம். தட்ட முடியவில்லை. அதான் குடும்பத்தோடு" என்றான் குமார்.

"நீயும் சென்னையில் முன்பே ஓர் இடத்தை வாங்கிப் போட்டிருக்கலாம். கிராமத்திலேதான் செட்டில் ஆவேன் என்று

அடம் பிடிக்கிறாய்" என்றார் நந்தகோபால்.

"மாமா, அது காலஞ்சென்ற அவன் தந்தையின் மனையில் இவன் வங்கிக்கடனில் வீடுகட்டியிருக்கிறான்" என்றான் குமார்.

"30 வருடங்களுக்கு முன் சில ஆயிரங்களுக்கு வாங்கிய மனைகள் இப்போது கோடிகளை குவிக்கிறது. உன் நண்பனின் தந்தை புத்திசாலி --என்னைப் போலவே" என்று சிரித்தார்.

"சரி, நண்பன் வீடு எந்த ஏரியா?" என்றதற்கு அழைப்பிதழை அவரிடம் தந்தான் குமார்.

அழைப்பிதழைப் படித்த நந்தகோபால் "அட, மூர்த்தி நகரா! அங்கேதான் என்னுடைய மனையும் இருக்கிறது. நான் 30 வருடங்களுக்கு முன் வாங்கியபோது அது புறநகர்.இப்போது

நகரின் முக்கிய குடியிருப்பு பகுதியாகிவிட்டது. மனை விலையும் கணிசமாக உயர்ந்திருக்கும். அதை விற்பதற்கு ஏற்பாடு செய்தால் நல்லது. அதனால் நானும் வருகிறேன்" என்றவர் பத்திர நகலை பீரோவிலிருந்து எடுத்து பையில் வைத்துக் கொண்டார்.

சடங்குகள் எல்லாம் முடிந்து விடைபெறும்போது நண்பனிடம்

"என் மாமாவுடைய மனையும் இங்கே உள்ளது அவர் அதை விற்க விரும்புகிறார். உன்னால் முடிந்த உதவியை செய்" என்று பத்திர நகலை அவனிடம் கொடுத்தான் குமார்.

பத்திரத்தை மேலோட்டமாக படித்த ஆரோக்கியசாமிக்கு அதில் ஏதோ குழப்பம் இருப்பதாக தோன்றவே தனது மனைக்கான பத்திரத்தை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்ததும் திடுக்கிட்டான்.

குமாரை தனியாக அழைத்து இரண்டு பத்திரங்களில் குறிப்பிட்டுள்ள நான்கு பக்கஎல்லைகளும் ஒன்றாகவே இருப்பதை சுட்டிக்காட்டி "குமார் உன் மாமா நன்றாக ஏமாந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்" என்றான்.

அதிர்ந்துபோன குமார் "மாமாவுக்கு இந்த குழப்பம் தெரிந்தால் விபரீதமாகிவிடும். ஆகவே இப்போது மாமாவிடம் இதுபற்றி ஏதும் தெரிவிக்க வேண்டாம்" என்றான்.

ஒரு வாரம் நண்பர்கள் இருவரும் அலைந்து சேகரித்த விவரங்கள் 30 வருடங்களுக்குமுன்நில உரிமையாளர் காலஞ்சென்ற வஜ்ரவேல், ஒரே மனையை மாமா நந்தகோபாலுக்கும் ஆரோக்கியசாமியின் தந்தை ஜோசப்புக்கும் விற்பனை செய்திருப்பதை உறுதி செய்தன. வழக்கு தொடர்ந்தால் இருவருக்கும் சிக்கல் என்று வக்கீலும் அறிவுறுத்தினார்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த விவரம் மாமாவுக்கு தெரிந்தால் வயதான காலத்தில்அவருக்கு பெரும் மனவேதனை மட்டுமே மிஞ்சும் என்று அஞ்சிய குமார் மாமாவிடம் இதை மறைப்பதே நல்லதென்று முடிவு செய்தான்.

ஒரு மாதஞ்சென்று ஆரோக்கியசாமி நந்தகோபாலை அழைத்து "சார் நம்ம ஏரியாவில் மெட்ரோ வரவுள்ளது. அதனால் கொஞ்சம் பொறுத்தால் நல்ல விலை கிடைக்கும். உங்களுக்கு ஒன்றும் அவசரம் இல்லையே" என்று கேட்டான்.

நந்தகோபாலும் "எனக்கு என்ன தம்பி அவசரம். பிள்ளையா குட்டியா. எனக்குப் பின்னால் எல்லாம் குமாருக்குத்தானே.

நீங்கள் இருவருமே தீர்மானித்துக் கொள்ளுங்கள்" என்றார்.

குமாருக்கு சொரேல் என்றது. ஆரோக்கியசாமிக்கும் தான்.

நந்தகோபால் மாமா இறந்து போய் சில மாதங்கள் இருக்கும்.

கிராமத்தில் தன் வீட்டில் தினசரியை படித்துக்கொண்டிருந்த குமார் சென்னைக்கு மிக அருகில் என்ற விளம்பரத்தை பார்த்து விட்டெறிந்தான்.

நண்பன் தான் இருந்தாலும் நந்தகோபால் மாமாவிற்கும் பங்கு இருக்கிறதே.....

வக்கீலைப் பார்க்க புறப்பட்டான் குமார். !!