தொடர்கள்
ஆன்மீகம்
மும்பை கணபதி கொண்டாட்டங்கள் 2026-  மோகன் ஜி

20260826000630308.jpg

கண்பதி பப்பா மோர்யா! [கணபதி தந்தையே (தலைவனே) போற்றி!]
மும்பை,விநாயக சதுர்த்தி அடுத்த கொண்டாட்டங்கள் முடிந்து இறுதியாக இன்று, அனந்த சதுர்த்தசி, விஸர்ஜன (விநாயகர் சிலை கரைப்பு விழா) நாள்.

கடந்த பல வருடங்களாக, விநாயக சதுர்த்தியின் போது மும்பையில் நான் இருக்க நேர்வது ஓர் தற்செயல் தான். கணபதியும் என்னோடு மும்பையில் டேரா அடித்து விடுகிறார். மும்பையில் அலங்காரப் பந்தல்களில் தொடர்ந்து பூஜைகளும் வகைவகையான பிரசாதங்களுமாய் சில நாட்கள் பற்பல வடிவங்களில் கோலாகலமாக இருந்தார் கணபதி பப்பா!

ஆறாயிரம் முதல் ஏழாயிரம் விநாயகரின் பெரிய சிலைகள் நகரத்தில் பத்து நாட்கள் பூஜை செய்யப்பட்டு அரபிக் கடலில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. லவுட் ஸ்பீக்கர்களில் கணபதி கானங்கள் முதல் மெஹபூபா மெஹபூபா வரை டெசிபல்கள் எகிறுகின்றன.
மண்டபங்களும் விதானங்களும் தோரண வாயில்களும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு ஒரு கொண்டாட்ட மனநிலையை உருவாக்கி விடுகின்றன. வண்ண விளக்கு அலங்காரங்களும் சீரியல் பல்பு சிமிட்டல்களுமாய் கல்கத்தாவின் துர்காபூஜையை நினைவூட்டுகின்றன.

2026082600065737.jpg

டிராபிக் ஜாம் இங்கு ஒரு வாழ்க்கைமுறை. இந்த விழாக் காலங்களில் அது இன்னமும் அதிகமாயிருக்கும். நாம் வண்டி ஓட்டவில்லையென்றால் பராக்கு பார்த்தபடி ஆனந்தமாக வரலாம்.

மகாராஷ்டிரர்களின் பிரதான தெய்வம் விநாயகர். கணபதி விழாக்கள் சிவாஜி மஹாராஜாவின் காலத்திலேயே பெரிதாய் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விழாவுக்கு புத்துயிர் கொடுத்து, தேசிய ஒருங்கிணைப்புக்கான ஒரு உத்தியாய் பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசியில் முன்னெடுத்தவர் பால கங்காதர திலகர். பொதுமக்கள் கூட்டம் கூடுவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் விதித்திருந்த தடையை, இந்த விநாயகர் விழா எடுப்பதன் மூலம் சாமர்த்தியமாய் முறியடித்தார். விழாவில் கூடிய பொதுமக்களுக்கு எழுச்சி உரைகளாற்றவும், போராட்ட திட்டங்களை வெளியிடவும் திலகர் செய்த ஏற்பாடு இது.

வருடாவருடம் சிலை செய்யும் கலைஞர்கள் சிலைகளில் ஏதாவது புதுமை செய்தபடி இருப்பார்கள். வெயிட் லிஃப்டிங் கணபதி, துரந்தர் கணபதி, பாஹுபலி கணபதி ,சிவன் பார்வதியுடன் தலைசாய்த்து செல்பி ஸ்டிக் கையிலேந்தியபடி செல்பி எடுத்துக் கொள்ளும் செல்லகணபதியும் உண்டு ! கோடிகளில் நன்கொடை பெறும் கணபதிகளும் உண்டு.

மும்பைக்கார்களின் உற்சாக மனப்பான்மை வியக்கத்தக்க ஒன்று. அதிலும் விழா காலங்களில் கேட்கவே வேண்டாம். பத்தாம் நாள் விசர்ஜன ஊர்வலங்கள் திமிலோகப் படும். விநாயகர் ஊர்வலங்கள் பல ஊர்களில் நடத்தப் பட்டாலும் மும்பையில் கணபதி விழா பெரும் வைபவம்தான்.

இன்று சாரைசாரையாக ஜனத்திரளுடன் விநாயக மூர்த்தங்கள் கடலை நோக்கி ஊர்வலமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. கணபதி உப்புக் கடலில் கரைந்து விடப் போகிறார். அங்கிருந்தே கருமேகமாக வானமேறி தன் அருளை மழையாகப் பொழியப் போகிறார்.
மூர்த்தங்களுடன் விஸர்ஜனத்துக்குத் தொடரும் முகங்களைப் பார்க்கிறேன்.

நல்லபடியாக சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிந்த திருப்தி, வழிபட்டு சீராட்டிய செல்ல கணபதியை கடலில் முங்கவிடப் போகின்றோமே என்ற சோகம், இரண்டும் கலந்த உணர்வுக் கலவையான முகங்கள். பேண்ட் வாத்தியங்கள், கின்னாரங்களின் ஜங்காரம், உதிர்க்கப் படும் பூக்கள், வெடிகள், வாணங்கள் என அதிரும் ஊர்கோலங்கள்.


வானவெளியில்‘அவுட்டு’கள் வெடித்து வண்ணச் சிதறலாய் உதிர்கின்றன. சின்னவனாய் இருந்த நாள் முதல் ‘அவுட்டு’ சிதறல் பார்க்கையில், கண்கள் அகல விரிய ‘அய்ய்…’ என்ற வியப்பொலி என் கண்டத்திலிருந்து எழும். கொஞ்ச வருஷமாக மனசுக்குள் அதை சொல்லிக் கொள்கிறேன். வயதாகிறதே!

கணபதிக்கு அடுத்த வருடம் வரை காத்திருக்கலாம். அது வரை என் அபிஷேக கணபதியையும் பஞ்சாயதன கணபதியையும் கொஞ்சிக் கொண்டிருந்தால் போயிற்று!

கண்பதி பப்பா மோர்யா!
புட்ச்சா வர்ஷா லவ்கர் ய்யா!!