தொடர்கள்
தொடர்கள்
திரும்பிப் பார்க்கிறேன்! - அஞ்சலி தேவி - 1 - க. பரத்

20180614002604928.jpg

திரைப்படங்களில் கதாநாயகர்கள் நீண்ட நாள் கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் கதாநாயகிகள் நான்கைந்து வருடங்களில் கதாநாயகி என்ற பதவியிலிருந்து விலகி அக்கா, அண்ணி, அம்மா போன்ற கதாபாத்திரங்களுக்கு சென்றுவிடுவார்கள். காரணம் அவர்களின் உடல்வாகு அப்படி. கல்யாணம், குழந்தைகள் என்று அவர்களுடைய உருவமைப்பை மாற்றிவிடும். ஆனால் கதாநாயகிகளில் நீண்ட நாட்கள் கதாநாயகியாக இருந்தவர்கள் பானுமதி, இன்னொருவர் அஞ்சலி தேவி. இதில் அஞ்சலி தேவியின் கலையுலக பங்கப்பளிப்பே தனி.


அஞ்சலி தேவி பேட்டிக்கு தயாராகியிருந்த சமயத்தில் இயக்குனர் ஸ்ரீதர் மறைந்து விட்டார், என்ற செய்தி எங்களை வந்து சேர்ந்தது. அந்த செய்தியை கேட்ட கணமே அஞ்சலி தேவி மௌனமாகிவிட்டார். கண்களில் துளிர்ந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார். எவ்வளவு பெரிய டைரக்டர், எவ்வளவு நல்ல படங்களை கொடுத்திருக்கிறார், எவ்வளவு புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்…. என்று அவர் உதடுகள் முணுமுணுத்தது. அவர் மனம் ஒரு நிலையில் இல்லை என்பது மட்டும் புரிந்தது.

“என் மனசு சரியில்லே… இன்னிக்கு இந்தப் பேட்டி வேண்டாமே, இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாமே”… என்று நா தழுதழுக்க கெஞ்சலாகக் கேட்டார். எங்களுக்கும் அவர் சொல்வது சரியென்று பட்டது. திரையுலகில் பிரபலமான இயக்குனர்.. தொழில்முறையில் சிகரம் தொட்டவர். அவரை யாரோ… என்று நினைக்காமல் அவருக்கு ஒரு சகோதர உணர்வு ஏற்பட்டதே அதுதான் அவருடைய அர்பணிப்பு.

இன்னொரு நாள் இனிதே தொடங்கியது பேட்டி. அஞ்சலிதேவியின் இயற்பெயர் அஞ்சலி குமாரி. பிறந்தது பெத்தாபுரம், வளர்ந்தது காக்கி நாடா. இவர் தந்தையின் பெயர் நோக்கய்யா.. அம்மா பெயர் சத்தியவதி. இவர் நாலாவது படித்துக் கொண்டிருக்கும் போது இவருடைய தந்தை இவரை ஹரிச்சந்திரா நாடகத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த நாடகத்தில் திடீரென்று ஒரு பிரச்சனை. லோகதாசனாக நடிக்க வேண்டிய பையனுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லை. அதனால் நடிக்க முடியவில்லை. அந்த வாய்ப்பு அஞ்சலிதேவிக்கு கிடைத்தது. பரபரவென்று தலை முடியை வெட்டி, ஆண்பிள்ளை போல க்ராப் செய்தார்கள். மளமளவென்று வசனங்களை சொல்லிக் கொடுத்தார்கள்.


நாடகத்தில் ஒரு காட்சி அதுவும் உச்சகட்டம். லோகிதாசன் இறந்துவிடுவான். சந்திரமதி சுடுகாட்டில் ஈமச்சடங்குகள் செய்ய வேண்டும். லோகிதாசன் தரையில் படுத்திருப்பான். அவனுடைய இரு உள்ளங்கைகளிலும் வறட்டி வைத்து அதன் மீது கற்பூரம் ஏற்றப்பட்டது. கற்பூரம் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க, வசனங்களும் பாடல்களும் அரங்கேறிக் கொண்டிருந்தன. கற்பூரம் மெல்ல மெல்ல எரிந்து கையை சுட ஆரம்பித்தது. நாடக அனுபவமே இல்லாத அஞ்சலி தேவி கை சுட ஆரம்பித்தும், சற்றும் அசைவில்லாமல் பிணம் மாதிரியே படுத்திருந்தார். நாடகம் முடிந்து அனைவரும் ஒரு மனதாக பாராட்டினார்கள். அந்த வயதிலேயே தன்னுடைய தேர்ந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார் அஞ்சலிதேவி.


அதன்பிறகு அஞ்சலி தேவிக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது. அப்போது (இப்போதும்) யங் மென் ஹேப்பி கிளப் என்று ஒரு கிளப் இருந்தது. அங்கு நடனம், பாட்டு, நடிப்பு என்று எல்லாமே சொல்லிக் கொடுப்பார்கள். அஞ்சலியின் தந்தை அதில் உறுப்பினராக இருந்ததால் அங்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். அங்குதான் (அஞ்சலி தேவியின் கணவராக வரப்போகிற) ஆதிநாரயணராவ் இசை ஆசிரியராய் இருந்தார். அந்த கிளப்பிற்கு அஞ்சலியின் தந்தை அஞ்சலி தேவியை சைக்கிளில்தான் கூட்டிச் செல்வார்.


அந்த க்ளப்பில் 1943ம் வருடம் ‘ராஜஸ்ரீ’ என்ற நாடகம் போட்டார்கள். அந்த நாடகத்தில் அஞ்சலி தேவி குழந்தை நட்சத்திரமாக நடித்து முதல் பரிசு வாங்கினார். அது மட்டுமல்ல அந்த நாடகத்தை ரசித்த ஒரு ரசிகர் அஞ்சலி தேவிக்கு ஒரு தங்கச்சங்கிலியை பரிசளித்தார். அந்த நாடகத்திற்கு நீதிபதிகளாக வந்திருந்தவர்கள் பழம்பெரும் நடிகர்கள் பி. கண்ணாம்பாவும், வி. நாகைய்யாவும். அவர்களை நமஸ்கரித்து ஆசியும் பெற்றார் அஞ்சலி தேவி.


தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார். அஞ்சலிதேவிக்கு 12 வயதானதும். நடிப்பதற்கு வீட்டில் தடை போட்டார்கள். திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளும் நடந்தது. நடிப்பின் மீதுள்ள ஆசையால் தொடர்ந்து நாடகத்தில் நடிக்க அப்பாவிடம் விண்ணப்பித்தார். அவரும் அனுமதித்தார். அப்போது தான் ஆதி நாராயணரானவை இவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அந்த க்ளப்பில் அமைச்சூர் நாடகங்கள் தான் போடுவார்கள். அஞ்சலி தேவியும் தன் கணவரின் அனுமதியுடன் நான்கு நாடகங்களில் நடித்தார். அதில் ஒரு நாடகத்திற்கு அந்தக் காலத்தில் பிரபலமாய் இருந்த இயக்குனர் சி. புல்லைய்யா வந்திருந்தார். அஞ்சலி தேவியின் நடிப்பை பார்த்து சினிமாவில் நடிக்கும்படி அழைத்தார். ஆனால் நாராயணராவ் மறுத்துவிட்டார். அதன் பிறகு தெலுங்கு நகைச்சுவை நடிகர் ரேலங்கி சிபாரிசில் இன்னொரு படம் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சமயம் கர்ப்பமாய் இருந்த காரணத்தால் நடிக்க முடியவில்லை.

அந்த க்ளப்பில் உருவான இன்னொரு பிரபலம். எஸ்.வி. ரங்காராவ் அவர்கள். அவர் ஆதி நாரயணராவுக்கு நெருக்கமான நண்பர். எஸ்.வி ரங்காராவின் மாமா ஒரு திரைப்படம் தயாரிப்பதாக இருந்தது. அதற்கு இசையமைக்க, ஆதி நாராயணராவை அழைத்தார் ரங்காராவ். அதற்காக சேலம் போக வேண்டியதாக இருந்தது. பிரசவமாகி இரண்டு மாதங்களே ஆகி இருந்த நிலையில் அஞ்சலி தேவியும் உடன் சென்றார். அந்த படத்தின் இயக்குனர் சி. புல்லய்யா, அஞ்சலி தேவியைப் பார்த்ததும் மீண்டும் நடிக்க அழைத்தார். சிறிது தயக்கத்திற்கு பிறகு நடிக்க சம்மதித்தார் அஞ்சலி. அந்தப் படத்தில் நடன மங்கையாக நடித்தார் அஞ்சலி. யதார்த்தம் ராகவய்யா டான்ஸ் மாஸ்டர். மிக அழகாக நுணுக்கமாக நடனம் சொல்லிக் கொடுத்தார். உடன் ஆடியது வசுந்தரா தேவி. வைஜயந்தி மாலாவின் தாய்.


அடுத்த படம் ஜெயராமா என்ற தெலுங்குப்படம். அதில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருக்கிறார் அஞ்சலி தேவி. அஞ்சலி தேவி முதலில் நடித்த தமிழ் படம் மகாத்மா.
டி.பி. சுந்தரம் அவர்கள் இயக்கியது. அடுத்ததாக இவர் நடித்த தமிழ்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர் சுந்தரம் இயக்கிய படம். அதில் நடிக்கும் விஷயமாக அஞ்சலி தேவியை காண வந்தார், மார்டன் தியேட்டர்ஸின் தயாரிப்பு நிர்வாகி. டி.ஆர் சுந்தரம் பற்றி பெருமையாகக் கூறியவர், “மூன்று மாதம் கால்ஷீட் கொடுத்தால் போதும் மாதம் பத்து நாள்தான் வேலை இருக்கும். சம்பளம் மாதம் 20 ரூபாய்” என்று கூறிச் சென்றார்.
அஞ்சலி தேவிக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஷாக். முதல் படத்திலேயே பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்களே. இதென்ன வெறும் இருபது ரூபா? மார்டன் தியேட்டர்ஸ் எவ்வளவு பெரிய கம்பெனி. 20 ரூபாய் சம்பளமா, என்று குழம்பிக் கொண்டிருந்தார்கள். அன்று மாலை இருபதாயிரம் ரூபாய்க்கு செக் வந்ததும் தான் சமாதானமானார்கள். இருபதாயிரம் ரூபாயைத்தான் இருபது ரூபாய் என்று சொல்லயிருக்கிறார்கள் என்பதை பிறகு புரிந்து கொண்டார்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸ் என்பது மிகவும் கட்டுப்பாடான நிறுவனம். படப்பிடிப்பு நேரத்தில் ஒரு நாற்காலி மட்டும்தான் இருக்கும். அதில் இயக்குனர் மட்டும்தான் உட்காருவார். இயக்குனருக்கு மட்டும் கண்ணாடி தம்பளரில் காபி. மற்றவர்களுக்கு ஸ்டீல் தம்பளர். சூடான அந்தக் காபியை குடிக்கும் போது கையும் சுடும், வாயும் சுடும். எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அஞ்சலி தேவி இந்த கஷ்டத்தை டி.ஆர் சுந்தரத்திடம் சொல்ல.. அன்று முதல் அனைவருக்கும் கண்ணாடி தம்பளரில் காபி. இப்படி ஆதித்தன் கனவு, மாயாவதி, சர்வாதிகாரி என்று மூன்று படங்கள் மார்டன் தியேட்டர்ஸுக்காக நடித்துக் கொடுத்தார் அஞ்சலிதேவி.


தன்னை பற்றி சொல்லிக் கொள்ளும்போது, தான் மிக அதிர்ஷ்டசாலி என்று கூறிக் கொள்கிறார் அஞ்சலிதேவி. காரணம் மிகத்திறமை வாய்ந்த இயக்குனர்களிடம் வேலை செய்ததுதான். அவர்கள் தங்கத்தை ஆபரணங்கள் ஆக்குவது போல் ஒரு நடிகையின் திறமையை மேம்படுத்துவார்கள். அதே போல் தொழில்நுட்பக் கலைஞர்களையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார். காரணம் எல்லோரும் ஒத்துழைத்தால் தான், ஒரு நல்ல படத்தைக் கொடுக்க முடியும். அடுத்து இயக்கனர் ராம்நாத் இயக்கத்தில் கன்னியின் காதல், வேதாந்தந்தம் ராகவய்யா நடன இயக்குனர். அதில் மாதுரி தேவிதான் கதாநாயகி.


அடுத்து மர்மயோகி. அதில் எம்.ஜி.ஆர் சேனாதிபதியாக நடித்த படம். இந்த படத்தில்தான் எம்.ஜி.ஆர். பற்றி ஒரளவிற்கு புரிந்து கொள்ள முடிந்ததாம். சாண்டோ சின்னப்ப தேவர்தான் சண்டைப் பயிற்சி. அந்தப்படத்தின் போது கூட இவரால் சரளமாக தமிழ் பேசமுடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தமிழை புரிந்துக் கொண்டு பேசியிருக்கிறார். மர்மயோகி பட ஷுட்டிங் போதுதான். அஞ்சலி தேவிக்கு விஸ்டம் டூத் முளைக்கு முகம் வீங்கிவிட்டது. ஷுட்டிங் நடக்க முடியாத நிலை. இயக்குனர் டி.ஆர் சுந்தரம் அவர்கள்தான் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்ய, அனைவரும் ஒத்துழைக்க படப்பிடிப்பை நடத்தினார். அந்த படத்தில்தான் அனைவரும் ஒற்றுமையாக ஒத்துழைத்தால், படம் நன்றாக வரும் என்று பாடத்தை படித்தாகக் கூறுகிறார்.


இதுவரை நடித்த படங்களில் பெரும்பாலும் ரம்பை, மேனகை, ஊர்வசி போன்ற வேடங்களில் தான் அதிகம் நடித்திருக்கிறார். வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களே வரவில்லை. அப்போது மாயக்குதிரை என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் என்னடாவென்றால், ராட்சசி வேடம். கேட்கவே பிடிக்கவில்லை. அஞ்சலி தேவியோ முகத்தில் அடித்தாற்போல் வேண்டாம் என்று சொல்ல… அதன் தயாரிப்பு நிர்வாகிகள் அதிர்ந்து போனார்கள். அவர்கள் மட்டுமா? அஞ்சலி தேவியின் கணவர் ஆதி நாராயணராவும்தான்…

(தொடரும்)