பள்ளிவாசல் எனும் இறைஆலயம்
----------------------------------------------------------------------------
வி.எஸ்.முஹம்மத் அமீன்

பள்ளி எனும் மையப்புள்ளி
நாள்தோறும் ஐவேளை ‘அல்லாஹு அக்பர்’ என்ற அழைப்போசை உங்கள் செவிகளை எட்டுகிறதல்லவா...! ஏகத்துவ நாதம் புறப்படுகின்ற அந்தப் பள்ளிவாசல்கள் எதற்காக? என்று கேட்டால் தொழுகை நடைபெறும் இடம் என எளிதாகச் சொல்லிவிடுவீர்கள். ஆனால் ஐங்காலத் தொழுகைக்காக மட்டுமே பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளனவா என்றால் இல்லை. சமூகக் கட்டமைப்பின் பண்பாட்டுப் பாசறைகள்தாம் பள்ளிவாசல்கள்.
கல்வி கற்றுக்கொடுக்கப்படும் கல்வி நிலையங்களாக பள்ளிவாசல்கள் திகழ்கின்றன. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் மஸ்ஜிதுந் நபவி என்னும் மதீனா பள்ளிவாசலில் ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் தங்கியிருந்து கல்வி கற்றனர். உலகின் முதல் பல்கலைக்கழகமாக மஸ்ஜிதுந் நபவி திகழ்ந்தது. நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க வரும் பிறநாட்டின் தலைவர்கள் மதீனா பள்ளிக்கே வருகைபுரிவர். அந்த வகையில் அரசியலின் மையப்புள்ளியே இந்தப் பள்ளி!
நபி(ஸல்) அவர்களிடம் வரும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கும் திருத்தலமாக அமைந்ததுதான் பள்ளிவாசல். வாயிதாக்கள் இல்லாமல் விரைவாக மிகச் சரியாகத் தீர்ப்பு எழுதப்பட்ட நீதிமன்றம்தான் பள்ளிவாசல். பணக்காரர், ஏழை, கறுப்பர், வெள்ளையர், வியாபாரி, மருத்துவர், அமைச்சர், ஆசிரியர், இராணுவ வீரர் என எல்லாரும் விரவி விரவி நிறைந்து விளங்கும் சமத்துவக் கூடம்தான் பள்ளிவாசல். அதனால்தான் தர்மங்கள் சேகரிக்கப்பட்டு வறியவர்களுக்கு விநியோகிக்கப்படும் தர்மத்தின் தலைவாயிலாக நபியின் பள்ளிவாசல் மிளிர்ந்தது.
அரசியல் விவகாரங்கள், சமூகப் பிரச்னைகள், எதுவாயினும் ஆலோசனை செய்யும் ஆலோசனை மன்றங்களாய் விளங்கியதுதான் இந்த இறை இல்லங்கள். இரகசியக் கூட்டமென்று எதுவுமில்லை. எல்லாமே மக்கள் முன்னிலையில் வெளிப்படையாகவே விவாதிக்கப்பட்டன. சில நேரங்களில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையாகவும் மஸ்ஜித் பயன்படுத்தப்பட்டது.
பல்கலைக் கழகமாக, நாடாளுமன்றமாக, நீதிமன்றமாக, சமத்துவக்கூடமாக, தர்ம நிலையமாக, ஆலோசனை மன்றமாக, மருத்துவமனையாக பள்ளிவாசல்கள் திகழ்ந்தன. இத்தனைக்குமிடையே இறைவனை நினைந்து வழிபாட்டில் மூழ்கித் திளைக்கும் அமைதி மேவும் மகத்தான ஆன்மிகத் தலமாகவும் பள்ளிவாசல் விளங்கியது.
பள்ளிவாசலின் உள்ளே என்ன இருக்கும்?
பள்ளிவாசல் என்பது தூய்மையான இடம் அவ்வளவுதான். தொழுகைக்காக உடற்சுத்தி எனும் உளூ’ச் செய்வதற்கான வசதி இருக்கும். தொழுகை நடத்தும் இமாம் நிற்பதற்கான இடமும், பின்னால் வரிசை கிரமமாக தொழுவதற்காகவும் இடம் இருக்கும். வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துவதற்கான மிம்பர் எனும் மூன்று படிகளைக் கொண்ட சிறுமேடை இருக்கும். (பிரசங்கம் செய்யும் ஒருவர் மட்டுமே அமரும் அளவிற்கான மேடை)
மினராக்கள் என்பது பள்ளிவாசல் என்பதற்கான அடையாளம்.
யாரெல்லாம் உள்ளே வரலாம்?
பள்ளிவாசல் எல்லாருக்குமான இடம். வி.ஐ.பிக்களுக்கான எந்த இருக்கையும், நுழைவாயிலும் சிறப்பும் இருக்காது. உள்ளே நுழைந்தால் எல்லோரும் சமம். தோளோடு தோள் உரசி வரிசையில் நின்றுதான் தொழ வேண்டும். முதலில் வருபவருக்கே முதல்வரிசையில் இடம். தொழிலாளி முதலில் வந்தால் அவருக்கு முதல் வரிசையிலும் முதலாளி சற்றே தாமதமாக வந்தால் அவருக்கு இறுதி வரிசையும்தான்.
பெண்களும் பள்ளிவாசலில் வந்து தொழலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வசதிகள் செய்யப்பட்டிருக்கும். ஆண்,பெண் சந்திப்பிற்கான வாய்ப்பு அங்கு இல்லை. ஆண்கள் ஒவ்வொரு நாளும் ஐந்துவேளை கட்டாயம் பள்ளிவாசலுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குத் தொழ வர வேண்டும். பெண்கள் விரும்பினால் வரலாம். விரும்பாவிட்டால் அவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளலாம்.

Leave a comment
Upload