
ஒரு நடிகர் அல்லது நடிகைதான் ஒரு பொருளின் விற்பனையை அதிகப்படுத்த முடியும் என்று அதன் தயாரிப்பாளர் கருதலாம். ஆனால் அவரது அடுத்த தீர்மானம் என்பது மேலும் சிக்கலானது.
எந்த நடிகரை வைத்து தனது பொருளுக்கு விளம்பரம் தேடலாம்? “யார் குறைவான தொகைக்கு ஒத்துக் கொள்வார்கள்?’’ என்பது மட்டுமே இதைத் தீர்மானிக்காது. சொல்லப்போனால் இதைவிட முக்கியமாக கவனிக்க வேண்டிய கோணங்கள் பல உண்டு.
திரையில் அந்த நட்சத்திரம் எந்த பிம்பத்தை வெளிப்படுத்தி அதை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்தாரோ அது அவர் விளம்பரப் படுத்தும் பொருளை வாங்க உதவலாம். அல்லது உதவாமல் போகலாம்.
திரைப்படத்தில் பெரும்பாலும் வேட்டி அணிந்து தோன்றுபவர் வேட்டி விளம்பரத்தில் நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார். ஆனால் படத்தில் எப்போதும் ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து காட்சி அளிப்பவர் வேட்டி விளம்பரத்தில் தோன்றினால் அதை வினோதமாகப் பார்ப்பார்கள்.
தவிர, இதில் வேறு சில சிக்கல்களும் உண்டு. ஒரு தலைச்சாய (‘டை’) விளம்பரத்தில் பிரகாஷ்ராஜ் தோன்றுகிறார். ஆனால் அவர் வயது கொண்ட கதாநாயகர்கள் அதுபோன்ற விளம்பரத்தில் நடிக்கத் தயங்குவார்கள் - நிஜ வாழ்வில் அவர்கள் தினமும் தலைக்கு சாயம் ஏற்றிக் கொண்டால்கூட. சத்யராஜ் கிண்டலான மற்றும் குசும்பான வசனங்களைப் பேசுவதில் சமர்த்தர். உணர்வு பூர்வமான பாத்திரங்களிலும் அவர் நன்கு நடித்ததுண்டு என்றாலும் ‘விஷமமும் வில்லங்கமும் கலந்து பேசுபவர்’ என்ற இமேஜ் உருவாகி விட்டது.
எனவே அவர் ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் விளம்பரப்படுத்தினால் கூட ‘’நிஜமாவே இவர் பரிந்துரை செய்கிறாரா? அல்லது வஞ்சப்புகழ்ச்சி அணி போல அதைக் கிண்டல் செய்கிறாரா?’ என்ற சந்தேகம் மக்களுக்கு வர வாய்ப்பு உண்டு.
நடிகை வித்யா பாலன் பிரஷர் குக்கர் விளம்பரத்தில் தோன்றுகிறார். சென்ற வருடம் வெளியான ‘துமாரி சுலூ’ என்ற திரைப்படத்தில் நடுத்தரக் குடும்பத் தலைவியாக அவர் ஏற்ற வேடம் பெரிதும் பேசப்பட்டது. இந்த இமேஜ் இருக்கும் இந்த நிலையில்தான் அவருக்கு பிரஸ்டிஜ் விளம்பர வாய்ப்பு. சில வருடங்களுக்கு முன் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இந்தியில் படமானபோது (தி டர்ட்டி பிக்சர்) அதில் ஸ்மிதாவின் வேடத்தை ஏற்று நடித்திருந்தார் வித்யா பாலன். சிறந்த நடிப்புக்காக அந்தப் படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
என்றாலும் மிகக் குறைந்த ஆடைகளுடன் மிக நெருக்கமான காட்சிகளிலும் அவர் நடித்து பரபரப்பாக பேசப்பட்ட அந்தக் காலகட்டத்தில் அவருக்கு குக்கர் விளம்பர வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்.
ஜோதிகா நடித்து இருவித விளம்பரங்கள் வெளியாகின்றன. ஒன்றில் அவர் சமையல் குறித்துப் பேசுகிறார். இன்னொன்றில் ‘ஒரே நகை போட்டுக் கிட்டாலும் அது ஒஸ்தியாய் இருக்கணும்’’ என்றபடி பிரம்மாண்டமான சங்கிலி ஒன்றை அணிந்து வருகிறார். இந்த இரண்டில் எதை ஜோதிகாவின் பிம்பத்தோடு பொருத்திப் பார்த்தீர்கள்? இந்த மனவியலும் விளம்பரங்களுக்கு மிக அவசியம்.
‘’கிஸ் கிஸ் கிஸ்கான்’’ என்றபடி முறுக்குக் கம்பி விளம்பரத்தில் நமீதா தோன்றுவது மனதில் ஓடுகிறதா?
ஸ்நேகாவுக்கு இந்த விதத்தில் ஒரு சாதகமான இமேஜ் உண்டு. அவர் குறைந்த உடைகள் அணிந்து திரையில் தோன்றியதில்லை. எனவே அவர் குடும்பப் பெண்ணாக விளம்பரங்களில் வரும்போது அதை ஏற்பதற்கு பல பெண்களுக்கும் தயக்கம் உண்டாவதில்லை. அவர் நடிகர் பிரசன்னாவை மணந்து கொண்ட பிறகு இருவருமாகத் தோன்றும் விளம்பரங்கள் நிறைய வெளிவந்தன. என்ன காரணம்? நிஜவாழ்வில் கணவன், மனைவியாக இருப்பவர்கள் விளம்பரத்திலும் அப்படியே இருக்கிறார்கள். எனவே விளம்பரத்தில் அவர்கள் பரிந்துரைக்கும் பொருளும் அவர்களின் ‘நிஜமான’ பரிந்துரையாக இருக்கும் என்று கணிசமானவர்கள் எண்ண வாய்ப்பு உண்டு.
ஆனால் எதை வேண்டுமானாலும் மக்கள் நம்பிவிட மாட்டார்கள். நடிகை கஜோல் ஒரு தாயாக, தன் குழந்தைக்கும் ‘லைப்பாய்’ சோப்பைப் பரிந்துரைக்கிறார். ஆனால் டக்கென்று ஒரு வெள்ளைக் கோட்டை மாட்டிக் கொண்டு ‘நான் டாக்டர் சொல்றேன்’ என்றபடி டாக்டர்-அம்மாவாக அவர் கூறும்போது அதை எவ்வளவு பேர் ஏற்பார்கள் என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
தேவயானி (தொடக்கப்படத்தில் ஒரு கிளப் டான்ஸராக அறிமுகமானாலும்) காதல் கோட்டை படத்திலிருந்து தொடங்கி பெரும்பாலும் குடும்பத் தலைவி பாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். எனவே ஒரு குடும்பத் தலைவியாக இவர் விளம்பரங்களில் தோன்றும்போது அதை ஏற்றுக் கொள்வதில் பலருக்கும் மனத்தடை இருக்காது. (ஆனால் ஒரு ப்ராண்ட் நைட்டி விளம்பரத்தில், “இந்த நைட்டியைப் போட்டுக்கும்போது என்னை ஒரு குடும்பத் தலைவியா உணருகிறேன்’’ என்று அவர் கூறுவதன் விபரீதத்தை விளம்பரதாரர் அறிந்தாரா என்பது தெரியவில்லை).
இதில் இன்னொரு கோணமும் உண்டு. ‘உண்மை எது பொய் எது’ என்பதை பிரித்துப் பார்த்து அறிய முடியாத அப்பாவிகளை அவர்களுக்குப் பிடித்த பிரபலத்தைக் கொண்டு தங்கள் பொருள்களை வாங்க வைத்து விடலாம் என்ற நினைப்பு நேரெதிர் பலனையும் கொடுக்கக் கூடும். எடுத்துக்காட்டாக விஜய் ஒரு விளம்பரத்தில் தோன்றினார் என்ற காரணத்துக்காகவே அஜித் ரசிகர்கள் அந்தப் பொருளை வாங்காமல் கூட இருக்கலாம். சக தோழர்கள் ‘இன்னமும் அதையே பயன்படுத்துகிறாயே? இது நம்ம ‘தலை’யையே அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கு’’ என்று உசுப்பேத்தி விடலாம்.
எனவே எந்த நடிகரை எந்த வகை விளம்பரத்துக்குப் பயன்படுத்தலாம் என்கிற கோணத்தில் பலவித ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.
(தொடரும்)

Leave a comment
Upload