தொடர்கள்
ஷெர்லக்
ஷெர்லக் - தமிழ்நாட்டில் கட்சிகள் இணைகின்றன!

20180614011657589.jpg

“ஷெர்லக்! இது என்ன! தலைப்பை மட்டும் நீட்டுகிறீர்? எந்தக் கட்சிகள் இணைய போகிறது?”

எதிரே அமர்ந்த ஷெர்லக் “பொறுமை” என்றார்! “கேளும்! தமிழக காங்கிரஸில் நடக்கும் கோஷ்டி மோதல்கள் மேலிடத்தை எரிச்சலூட்டிவிட்டது! பேசாமல் ஜி.கே.வாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை காங்கிரஸில் சேர்க்க நினைக்கிறது மேலிடம்! வாசனையே தமிழக காங்கிரஸ் தலைவராக்குவது.. இல்லையேல் அவரை அகில இந்திய அளவில் பதவி கொடுத்துவிட்டு, அவர் சொல்பவரை தமிழக தலைவராக்குவது! இப்படி டெல்லியில் ஒரு யோசனை.. அதை செயல்படுத்த முயற்சியும் நடக்கிறது!”

“கட்சிகள் இணைவதாக பன்மையில் அல்லவா சொன்னீர்?”

“பொறுமை! சமீபத்தில் மு.க.ஸ்டாலினை வைகோ சந்தித்தார்! தி.மு.கழகம் ஆகஸ்ட் மாதம் மாநில சுயாட்சி மாநாடு நடத்துகிறது! அதற்கு இந்திய அளவில் உள்ள பல கட்சி தலைவர்களை கலந்துகொள்ள தி.மு.க. அழைப்பு விடுக்கப்போகிறது! வைகோ அதற்கு முன்பு ஒரு மாநாடு நடத்தபோவதாகவும், அதுபற்றி பேச ஸ்டாலினை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது! ஆனால் ஆகஸ்ட் மாநாட்டில், வைகோ தி.மு.கழகத்தில் இணைவார் - ம.தி.மு.க. தாய்க்கட்சியுடனே சேரும் என்கிறார்கள்!”

“அப்படி ஒரு பேச்சு இருக்கிறதா?”

20180614011801712.jpg

“அதே நேரத்தில் மு.க.அழகிரியை தனிமைப்படுத்தி வளைக்க பி.ஜே.பி.யில் பெரிய முயற்சி நடக்கிறது! அழகிரி பி.ஜே.பி. பக்கம் வந்தால், தி.மு.க. பலவீனமடையும் என்பது பி.ஜே.பி. கருத்து! அழகிரி வந்தால், அவருக்கு ராஜ்யசபை பதவி கிடைக்குமாம்! அப்புறம் மத்திய மந்திரியாகவும் ஆகலாம்!”

“அடடே!”

“முன்பு அழகிரி மத்திய அமைச்சராக இருந்தது ஞாபகம் இருக்கிறதா? அப்போது மதுரையில் ஒரு மருந்து ஆராய்ச்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது! பி.ஜே.பி. இப்போது அழகிரியின் அந்த பழைய திட்டத்தை நிறைவேற்ற உத்தரவு போட்டிருக்கிறது! நிலம் கையகப்படுத்தும் பணி ஆரம்பம்! எல்லாம் அழகிரியை திருப்திப்படுத்த! ரஜினியின் ஆதரவும் அவருக்கு இருக்குமாம்!”

“தேர்தல் நெருங்க நெருங்க.. இப்படி எல்லாம் நடக்கும்!”

“தி.மு.கழகத்தில் அழகிரியை சேர்க்க ஸ்டாலின் தயாராக இல்லை! கனிமொழிக்கு தென்மண்டல பொறுப்பாளர் பதவி தர அவர் தயார்!”

“அது அழகிரி வகித்த பதவி ஆயிற்றே?”

“கரெக்ட்! ஆனால் தி.மு.க.வில் மோதல் நடந்து கொண்டேதான் இருக்கிறது! இரண்டு சபாநாயகர்களின் மகன்கள் அறிவாலயத்திலேயே மோதிக்கொண்டார்கள் சில நாட்களுக்கு முன்பு!”

“அப்படியா? யார் அது?”

“சேடப்பட்டியார் மகன் மணிமாறனும், பழனிவேல்ராஜன் மகன் தியாகராஜனும்! மதுரையில் மாவட்ட அளவில் செய்யப்பட்ட மாறுதல்களை அடுத்து இந்த மோதல்! பேசாமல் ஒதுங்கி இருக்கும் பழைய பொன்.முத்துராமலிங்கத்தையே மதுரை மாவட்ட தலைவராக்கலாமா என்று ஸ்டாலின் நினைக்கிறார்!”

“சரி.. அ.தி.மு.கழக செய்திகளுக்கு வருகிறீர்களா?”

“அங்கே எடப்பாடியாரும், பன்னீர்செல்வமும் ஒருவர் காலை மற்றவர் வார ஏதாவது செய்து கொண்டிருக்கிறார்கள்! முதல்வர் எடப்பாடியார் மிக ரகசியமாக துணை முதல்வர் பன்னீர் நடவடிக்கைகளைப்பற்றி துல்லியமாக விசாரணை நடத்தினார்! கண்டுபிடிப்புகள் அவரை திடுக்கிட வைத்துவிட்டது!”

“அப்படி என்ன கண்டுபிடிப்பு?”

2018061401185451.jpg

“பன்னீர்செல்வம் வெளிநாடு செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறார்! மத்திய அரசு ஓ.கே. செய்திருக்கிறது! எல்லாமே எடப்பாடிக்கு தெரியாமல்! துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை பன்னீர் மகன் சந்தித்துப் பேசியிருக்கிறார்! ஏன் என்று எடப்பாடியார் விழிக்கிறார்! சற்று பன்னீர்பற்றி பீதியில்தான் இருக்கிறார் எடப்பாடி!”

20180614032855938.jpg

“அடப்பாவமே!”

“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காமராஜர் பிறந்தநாள் அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதாக இருந்தது! ஆனால் இப்போது மாறிவிட்டது! எதனால் என்று தெரியவில்லை! இப்போது பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி அடிக்கல் நாட்டுவார் என்கிறார்கள்! அது முப்பெரும் விழாவாக இருக்குமாம்! கூட்டணி அறிவிப்பு, தேர்தல் பிரசார துவக்க விழா இப்படி!”

“ஓ!”

“தினகரன் செய்தியையும் கேளுங்கள்! முட்டுக்கட்டைகளைத் தாண்டி கோவையில் தினகரன் நடத்திய கூட்டம் பிரம்மாண்டமாக இருந்தது! கொங்கு மண்டலமே கலகலத்தது! கொங்கு மண்டல அ.தி.மு.க. அமைச்சர்கள் எடப்பாடி, வேலுமணி, தங்கமணி பயங்கர அதிர்ச்சியில்! உண்மையில் தினகரன் சட்டமன்ற தேர்தலுக்கே தயாராகிவிட்டார்! 150 தொகுதிகளுக்கு ஆய்வு நடத்தி, ஒரு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்கள் ரெடி! எம்.பி. தொகுதிக்கும் தனியாக லிஸ்ட் உண்டு! அதோடு எம்.ஜி.ஆர். காலத்து தலைவர்களையும் தனது கட்சியில் சேர அழைக்கப்போகிறார்!”

“தினகரன் விடமாட்டார் போலிருக்கிறதே?”

“அதனால்தான் பி.ஜே.பி. இவர் மீதும் ஒரு கண் வைத்திருக்கிறது!”

- ஷெர்லக் ‘குட்பை’ கூறினார்.