
பகடைக் காய் உருட்டி, பட்டத்து யானை மாலை போட்டு, பக்கத்து நாட்டின் மேல் படை எடுத்து, ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த காலங்கள் அந்தக் காலம். ஆனால் மாற்றுக்கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் பாதம் பட்டுவிட்டால் போதும். பா.ஜ.கா.விற்கு சாதகமான ஆட்சி மாற்றம் அங்கு அவசியம் ஏற்படும் என்று பலரும் நம்புவது இந்தக் காலம்.
அப்படி என்ன ஒரு மந்திர வித்தை செய்கிறார்... மாற்றங்கள் ஏற்பட என்னென்ன மாயங்கள் செய்கிறார் என்று ஊகங்களும், ஊடகங்களும் ஊதி ஊதி பல செய்திகளை உரக்கச் சொல்கின்றன. அதில் உண்மைகள் எத்தனை? என்பதை அமித்ஷா மட்டுமே அறிவார்.
நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் மனதில் இருப்பதை அப்படியே படம் பிடித்தாற் போல அறிந்து நடப்பவர் அமித்ஷா. பிரதமர் உள்ளத்தின் உண்மையான மன்–கி-பாத் என்ன என்பதை உணர்ந்து நடப்பதால்தான் அவரை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக தன்னருகேயே வைத்துக் கொண்டிருக்கிறார் நம் பிரதமர்.

ஆரவார ‘அமித்ஷா யார்?’ என தமிழர்கள் அறிய வேண்டாமா?... இதோ அவரது அரசியல் வாழ்க்கைக் குறிப்பு!
அகமதாபாத்தில் கல்லூரிக் காலத்திலேயே தன்னை, ஆர்.எஸ்.எஸ். சேவகராக உருவாக்கிக் கொண்டவர் அமித்ஷா. அன்று ஏ.பி.வி.பி இயக்கத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். குஜராத் மாநிலம் காந்திநகரில் அத்வானி போட்டியிட்டபோது அவரின் தேர்தல் முகவராகப் பணியாற்றினார்.
இந்திய நாட்டின் கொள்கைகள் என்பது நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கொள்கைகளாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளாக இருக்கக் கூடாது என்று பலமாக நம்பும் நாட்டுப்பற்று மிக்கவர்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், 2002-ம் ஆண்டு வெற்றி பெற்று, குஜராத் அரசியலில் மோடி முதல்வர் ஆனபோது, அவரின் அமைச்சரவையில் இளம் வயது அமைச்சராக அமித்ஷா பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்டார்.. ஆனால் தொடர் வழக்குகளால் 2005ஆம் ஆண்டு முதல் அலைக்கழிக்கப்பட்டு, சில ஆண்டுகள் குஜராத்திற்குள்ளே கூட நுழைய முடியாத நிலையில்தான் அவருக்குத் துன்பங்கள் தொடர்ந்தன.

2013-ல் உத்திரப் பிரதேசத் தேர்தலில் லோக்சபா தேர்தல் பொறுப்பாளராக அமித்ஷா நியமிக்கப்பட்டார். அப்போது அவரின் சிறப்பான அணுகு முறையும், தேர்தல் வியூகங்களும், பி.ஜே.பி-க்கு 71 தொகுதிகளைப் பெற்றுத் தந்தன. தொடர்ந்து நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தல்களில் பஞ்சாப் மாநிலம் தவிர்த்து பாஜகவை அனைத்து மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியதில் அமித்ஷாவிற்குப் பெரும் பங்கு உண்டு.
தன் தனித்துவமான சிந்தனையாலும், துல்லியமான கணிப்புகளாலும், தெளிவான திட்டமிடலாலும், துடிப்பான செயல் திறத்தாலும், அரசியல் மேதையாக தன்னை செதுக்கிக் கொண்டவர் அமித்ஷா.

தன் எண்ணங்களையும், செயல் திட்டங்களையும், வெளிப்படையாகச் செய்யமாட்டார். அதே சம்யம் மறைமுகக் காய் நகர்த்தலின் மன்னன்! இதனால்தான் எதிர்க் கட்சிகள் இவரை எதிர்கொள்ள முடியாமல் சற்று திணறிப் போகிறது.
இத்தனை அறிமுகம் போதும்! இப்பேர்ப்பட்டவரின் சமீபத்திய தமிழகப் பயணத்திற்கு வருவோம்...! இவரது தமிழகப் பயணமும், பயணத்தின் போது பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மத்தியில் இவர் பேசிய பேச்சும் பெரும் அர்த்தங்களை உள்ளடக்கியவை.
தன் பேச்சின் தொடக்கத்திலேயே எந்தவித முகமனும் இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே, தன் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு “செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்” என்ற திருக்குறளை நினைவூட்டி அதிரடியாக பதில் அளித்தார். அடுத்து ‘தமிழகத்தில் எங்கே இருக்கிறது பா.ஜ.க.?’ என்று கேட்டவர்களுக்கு.. ‘2019 மார்ச் மாதத்தில் தெரியும்’ என்ற தன்னம்பிக்கையான பதிலளித்து தொடக்கத்திலேயே உச்சகட்ட விறுவிறுப்பை கூட்டினார்.

அவர் தொடர்ந்து பேசியபோது..., ‘தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாகத் திகழ்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் ஊழலுக்காக அதிகம் சிறை சென்றது தமிழகத்தில்தான்’ என்று வெளிப்படையாக சொன்னார். பத்தாண்டுகள் என அழுத்திக் கூறியதன் மூலம் இந்த அம்பு தி.மு.க.வை நோக்கியா அல்லது அ.தி.மு.க.வை நோக்கியா என்று திகைக்க வைத்தார். அ.தி.மு.க. அரசையும், அக்கட்சியையும் மறைமுகமாக பாஜக இயக்குவதாக பெரிதாக நம்பப்படும் இன்றைய சூழலில், ஒரு புதிய அணுகுமுறைக்கு அச்சாரமாகவும் இவர் தொடுத்த அம்பு இருக்குமோ என்கிற தோற்றத்தையும் கூடவே ஏற்படுத்தினார்.
கட்சியின் சக்தி கேந்திர நிர்வாகிகள் மத்தியில் பேசிய போது ‘ஊழல் இல்லாத கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி’ என அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். இதன் மூலம் அது ஒரு புதிய கட்சியாக அதுவும் ரஜினிகாந்த் உருவாக்கும் கட்சியாகத்தான் இருக்குமோ என்ற தோற்றத்தையும் உருவாக்கிவிட்டார். அதே சமயத்தில் 2019 பாராளுமன்றத் தேர்தலில் தன் கட்சிக்கு அதிகமான உறுப்பினர்களைப் பெற முயற்சிக்கும் அவரால், அ.தி.மு.க. ஆதரவை முழுமையாக தவிர்க்க முடியுமா எனும் கேள்வியையும் சாதுர்யமாக எழுப்புகிறது அவரது இந்த அறிவிப்பு.
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, "தமிழுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல... அதன் தொன்மையும் சிறப்பையும் உணர்ந்தவர்கள், தமிழ் மொழிக்கு பாரதிய ஜனதா கட்சி நிறைய செய்திருக்கிறது. இதுநாள் வரை இந்தியில் இருந்த ரயில்வே டிக்கெட்டுகள், பாஜக ஆட்சியில்தான் தமிழ் மொழியில் அச்சிடப்பட்டன!” என்று முழங்கினார்.
“முந்தைய பத்தாண்டுகளில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் அவர்கள் 13வது நிதி கமிஷனின் கீழ் தமிழகத்திற்குக் கொடுத்த நிதிஒதுக்கீடு, ரூபாய். 94,540 கோடி. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் 14வது நிதி கமிஷனின் கீழ் தமிழகத்திற்கு ரூபாய்.1,99,096 கோடி தரப்பட்டது. அதாவது ஒரு இலட்சத்தி ஐந்தாயிரம் கோடி அதிகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார் அமித்ஷா.
மத்திய அரசின் திட்டங்களின் மூலம் 1,35,000 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. குறுகிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக 340 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்காக 2,875 கோடி ரூபாயும், சென்னை. மோனோ ரயில் திட்டத்திற்காக 3,267 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது என்றும் அமித்ஷா நீண்ட பட்டியலிட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்காக 5 லட்சத்து 10,000 கோடி ரூபாய் நிதியினை பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கியுள்ளது. இது காங்கிரஸ் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த பத்து ஆண்டுகளில் வழங்கிய தொகையை விட அதிகம் என்று புள்ளி விவரங்களை அள்ளி விட்டார்,.
“தமிழகத்தில் இதற்கு முன்பாக ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்தீர்கள் என்று எனக்கு கணக்கு கொடுங்கள். நீங்கள் உண்மையில் என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது!” என அரசியல் குண்டுகள் வீசினார்.
“இந்த நான்காண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டும் சுமத்த முடியாத அளவிற்கு மோடியின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால் ஊழல்வாதிகளின் பிடியில் காலம் காலமாகச் சிக்கித் தவிக்கும் தமிழகத்தையும் அதன் மக்களையும் நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது” என்று அவர் கூறிச் சென்றது அணுகுண்டு ரகம்..

'மத்திய ஆட்சியைப் போல தமிழகத்திலும் ஊழல் இல்லாத நல்லாட்சியைக் கொண்டு வருவோம் என இங்கிருக்கும் நம் கட்சியின் ஊழியர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும்' என்று அவர் கூறியது படித்தவர்களையும் இளைஞர்களையும் பெரிதும் கவர்ந்தது.
கூட்டத்தில் அமித்ஷாவின் ஆவேசமான பேச்சும், ஆக்கபூர்வமான கருத்துக்களும் ஈடுபாடற்ற தமிழ் மொழி பெயர்ப்பால் கொஞ்சம் அமுங்கிப் போனது நிஜம். மைக்ரோ இரிகேஷன் என்பதை மொழி பெயர்ப்பாளர், சிறுநீர்ப் பாசனம் என மொழி பெயர்த்தது சமூக வலைதளத்தில் சிரிப்புக்கிடமானது. மீம்ஸ் வாசிகளுக்கு ஹெவி மீல்ஸ் இந்த சிறுநீர்ப் பாசனம்!
அடுத்த பத்து மாதங்களில் செய்ய வேண்டிய செயல் திட்டங்களை வகுத்துக் கொடுத்து, 'அக்டோபர் மாதத்தில் இரண்டு லட்சம் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேச மோடியை அழைத்து வருவேன்' என்று அடுத்த கட்ட ஊக்க மருந்தையும் ஊழியர்களுக்கு ஊட்டிச் சென்றுள்ளார்.
ஆனால் ஒன்று!...பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் நிலை நிறுத்துவேன், தமிழகத்தை தலை நிமிர்த்துவேன் என்ற அமித்ஷாவின் அறைகூவலை எந்த எதிர்க்கட்சியும் எளிதாக எடுத்துக் கொள்ளாது என்பது மட்டும் நிச்சயம்! பல காட்சி மாற்றங்களுக்கு வித்திட்ட இவரின் பேச்சு, மிக விரைவில் தமிழக ஆட்சி மாற்றங்களுக்கும் வழிகோலுமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்!
ஆக மொத்தம் தண்ணீருக்காகத் தவிக்கும் தமிழகத்தில் தாமரை மலருமா? என்ற கேள்விக்கு ‘ஆம்பலை அரியணை ஏற்றுவேன்’ என்று அறைகூவல் விடும் அமித்ஷாவின் அடுத்தகட்ட நகர்வுகளை அனைத்து மக்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Leave a comment
Upload