கடந்த வாரம், ஹாங்காங் தமிழ் வகுப்பின் ஆண்டு விழா நடைபெற்றது.
தமிழ்ப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெறுவதும், அதில் குழந்தைகள் மழலையுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதும், புதிதல்ல.

ஹாங்காங் தமிழ் வகுப்பின் ஆசிரியைகளும், முக்கிய ஒருங்கிணைப்பாளர்களும்.
ஆனால் ஹாங்காங் போன்ற ஒரு அயல்தேசத்தில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக தமிழ் வகுப்பு நடத்தி, தமிழ் பேசும் குழந்தைகளுக்கு தமிழ் எழுதப் படிக்க, பேச கற்றுக் கொடுப்பது தமிழர்கள் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம்.
ஹாங்காங் தமிழ் வகுப்பு குறித்து பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி விட்டது எனினும், தீபாவளியையோ, ரம்ஜானையோ வருடந்தோறும் கொண்டாடுவதில்லையா? அப்படிக் கொண்டாட வேண்டிய விஷயம்தான் தமிழ்வகுப்பு.
இதன் துவக்கம் மிக எளிமையாக ஒரு உணவகத்தில் துவங்கியது.
டாக்டர் ஜவஹர் அலி பர்மீயத் தமிழர். அறுவதுகளிலேயே ஹாங்காங் வந்து விட்டவர். மருத்துவம் தவிர இதர தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு உணவகம் ஒன்று சுங் கிங் என்ற கட்டிடத்தில் உள்ளது.
உபைதுல்லாவிற்கு ஒரு யோசனை வந்தது. ஹாங்காங் போன்ற ஊரில் இடம் தான் பற்றாக்குறை. டாக்டரிடம் உணவகத்தை கேட்டுப் பார்த்தால் என்ன, தமிழ் சொல்லிக் கொடுக்க?

உபைதுல்லா
விஷயத்தை சொன்னதும், டாக்டர் அகமகிழ்ந்து சம்மதித்தார். அப்படித் துவங்கப்பட்டதுதான் ஹாங்காங் தமிழ் வகுப்பு. விளையாடுவதற்காக இளம் இந்திய நண்பர்கள் குழு என்று துவங்கப்பட்ட குழுவில் தமிழ் சொல்லிக் கொடுக்க வகுப்புகள் துவங்க வேண்டும் என்று யோசனை சொல்லப்பட்டவுடன் காழி அலாவுதீன், அப்துல் அஜீஸ், காதர், ஷேக் போன்ற பல நண்பர்கள் கை கொடுக்க, இன்று 14வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது ஹாங்காங் தமிழ் வகுப்பு.
ஆசிரியர்கள் - சித்ரா, கலை அருண், பிரியா பூவராகவன், சுதா ரவி, ராதா மணி, அனு, கதீஜா, ஷஃபீனா, காதர், ஷிபு, தனா, எம்.எம்.எஸ்., இப்படி இவர்கள் பட்டியல் வெகு நீளம்.
இத்தனை வருடத்தில் இந்த ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் வாரா வாரம் சனிக்கிழமைகளில் மதியம் இரண்டு மணி நேரம் தங்கள் நேரத்தை செலவழிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டு தான்.
மாணவர்களிடம் இடத்திற்கு மட்டும் சொற்பத் தொகை வாங்கப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர்களுக்கு இதில் பத்து பைசா கூட இல்லை.
ஆனால் ‘இந்த மன நிறைவுக்கு எத்தனை டாலர்கள் கொட்டிக் கொடுத்தாலும் ஈடு இணையாகாது’ என்கிறார் உபைதுல்லா.
அஜீஸ் வருடத்தில் பத்து மாதங்கள் சனிக்கிழமை நோக்கி செலுத்தப்பட்டவராகவே தன் வாழ்க்கையை வாழ்கிறார்.

அப்துல் அஜீஸ்
இப்படி ஓரிருவரை சொல்லி விட்டு மற்றவர்களை விட்டு விடுவது தவறு. இருப்பினும், இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இது ஹாங்காங் மட்டுமல்ல அனைத்து வெளிநாடுகளிலும் நடைபெற வேண்டும்.
அமெரிக்கா போன்ற தேசத்தில் பல ஊர்களில் தமிழ்ப் பள்ளிகள் இருக்கிறது. இதை எத்தனை குழந்தைகள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது சந்தேகம்தான்.
நான் சென்ற பல ஊர்களில் தமிழ் கற்றுக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என்று கேட்கும் பெற்றோர்களை கன்னம் கன்னமாக இழைய வேண்டும் என்று எனக்குள் ஒரு வெறி வரும்.
என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலரது குழந்தைகள் தமிழில் பேசினால் முழிப்பதும், ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவதும் அதை என் நண்பர்களும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்வதும் துரோகம்.
சொந்த தாத்தா பாட்டியிடம் தமிழ் பேசத் தெரியாத பேரன் பேத்திகளை வளர்ப்பது பெரும் சாபம்.
அதற்காக ஹாங்காங் தமிழ் வகுப்பு மிகப் பெரிய எழுத்தாளர்களை தருவிக்கப் போகிறது என்று நான் நம்பவில்லை. ஆனாலும் தமிழ் எழுதப் படிக்க தெரியாத (குறிப்பாக டிஜிட்டல் விகடகவியைப் படிக்கத் தெரியாத) தமிழ்ச் சமூகத்தை நிச்சயம் தவிர்த்து விடும்.
ராம் - ஹாங்காங்

Leave a comment
Upload