தொடர்கள்
அரசியல்
சர்ச்சைகளும் அமித்ஷாவும்!

20180614020115201.jpg

அமித்ஷா எப்போது தமிழகம் வந்தாலும் சர்ச்சைகளும் சலசலப்புகளும், சடை போட்டு வருவது வாடிக்கை.. இம்முறை அமித்ஷா வரும் போது டிவிட்டர் ட்ரெண்டிங்கில் GO BACK AMITHSHA என்று மாற்றுக் கட்சியினரால் திடமிட்டுப் பரப்பப்பட்ட ஹேஷ்டேக் வைரலாகப் பரவியது. முன்னர் மோடி தமிழகம் வந்த போதும் "Go Back Modi" ஹேஷ் டேக் பரப்பப்பட்டது நினைவிருக்கும். இது போன்ற கூச்சல்கள் கூட்டத்தையோ கூட்டத்திற்கு வந்த கட்சியினரையோ பாதிக்கிறதா என கேட்டோம். அவ்வளவுதான்!...பொங்கி விட்டார்கள் பாஜகவினர்.

"அமித்ஷா அரசு நிகழ்ச்சிக்காக வரவில்லை, தன் கட்சியின் சித்தாந்தங்களுக்கு துணையாக வரும் தொண்டர்களை சந்திக்க வருகிறார். அவரின் கட்சி ஊழியர்கள் 20000 பேர் அவருக்காகக் காத்திருக்கும் போது அவர் ஏன் திரும்பிச் செல்லவேண்டும் என்பதே எங்கள் வாதம்.

அது மட்டுமின்றி அமீத் ஷா ஒரு அகில இந்தியத் தலைவர். சீதாராம் எசூரியும், ராகுல் காந்தியும், அரவிந்த் கெஜ்ரிவாலும், மாயாவதியும், மம்தாவும், தேவ கவுடாவும்... அந்தந்தக் கட்சியின் தலைவர் என்ற முறையில் தமிழக மக்களைச் சந்திக்க உரிமை உள்ளது போலவே அமீத் ஷாவுக்கும் உரிமை உள்ளது.


ஒரு கட்சியுடன் உங்களுக்கு கொள்கை வேறுபாடு உள்ளதா - அந்தத் தலைவரையே ஒரே மேடையில் அழைத்து விவாதியுங்கள். அவருடைய பிரச்சார உரையை Point by Point விமர்சியுங்கள். அவ்வளவு ஏன்? அவருடைய கொள்கைகளை நார் நாராகக் கிழியுங்கள்! அவர் முன் வைக்கும் கருத்துகளை உங்களுடைய அறிவு பூர்வமான விவாதங்களால் மட்டைக்கு நான்கு கீற்றாகக் கிழியுங்கள்! ஜனநாயகம் அதற்கான சகல உரிமைகளையும் உங்களுக்கு வழங்கி இருக்கிறது!

அதை விடுத்து "மாநிலத்துக்கு உள்ளேயே வராதே - திரும்பிப் போ" - என்பது கருத்துலக Facism! அவரின் கருத்துக்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.! எங்கே அமித்ஷா போன்றவர்களின் ஆனித்தரமான மேடைப் பேச்சுக்களால் உண்மைகளை அறிந்து நம் மக்கள் விழித்துக்கொண்டு விடுவார்களோ எனும் அச்சம்தான் இது போன்ற முட்டாள்தனமான கூச்சலுக்கு அடிப்படை. இவர்கள் எவ்வளவு முயன்றாலும் மக்கள் விழிப்புறுவதை இனி இவர்களால் தடுக்க முடியாது. யார் என்ன பேசினாலும் எங்களுக்கு எந்த பாதிப்புமில்லை. " என பிஜேபி தலைவர்கள் கொதித்துப் போய் நம்மிடம் கருத்து சொன்னார்கள்.