
“நீங்கள் சொன்னது போலவே ஜெ.நியூஸ் சேனலுக்கு ஹன்ஸ்ராஜ் சக்சேனா தலைமை ஏற்கப் போகிறாரே?! கங்கிராட்ஸ்!” என்றபடி வரவேற்றார் நண்பர்.
“பாராட்டுதலை அவருக்கல்லவா சொல்ல வேண்டும்? சக்சேனா ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார். தனது நிர்வாகத்திறன் மற்றும் படிப்புத்திறன் இரண்டையும் ஒரு சேரக்காட்டி எப்படியாவது ஜெ.நியூஸ் சேனலை நம்பர் ஒன்னுக்கு கொண்டு வருவேன் என்று நண்பர்களிடம் குட்டி சபதமே போட்டிருக்கிறாராம்.. சுதாரிக்க வேண்டியது நியூஸ் சேனல்கள்தாம். இதற்கு அடுத்தபடியாக களமிறங்க பொழுதுபோக்கு சேனலும் ரெடியாம். போன வாரம் சொன்னது போல நான்கே நாட்களில் மாநில அளவில் சேனலுக்கான லைசென்ஸ் போன்ற பேப்பர்கள் மடமடவென மூவ் ஆனாலும் மத்தியிலிருந்து எல்லா ஒப்புதல்களும் பெற மொத்தம் 38 நாட்கள் ஆகியதாம். மத்திய அரசு லேசில் வளைந்து கொடுக்காமல் ஏகப்பட்ட கேள்விகள் கேட்டதுவாம்.! அப்புறம் இன்னொரு விஷயம்...சேனல் உரிமையாளர்கள் குழுவில் ஓ.பி.எஸ். இல்லை.
சி.எம். எடப்பாடியார் தவிர மூன்று மணியான அமைச்சர்களும், ஒரு அமைச்சரின் தம்பியும் இருப்பதாகத் தகவல். சேனல் அநேகமாக பிள்ளையார் சதுர்த்தியன்று தொடங்கப்படலாம் என்பது மட்டுமே இப்போதைக்கு தெரிகிறது. மேலதிக ஜெ நியூஸ் தகவல்களுக்கு கொஞ்சகாலம் பொறுக்கவேண்டும்.
“அது சரி... தந்தி டி.வி.யிலிருந்தும் ஒரு பொழுதுபோக்கு சேனல் வரப்போகிறதாமே?!”
“இது ரொம்ப காலமாக ஓடிக்கொண்டிருக்கும் செய்தி. இப்போதைக்கு வருகிற பிப்ரவரியில் ஆரம்பமாகிவிடும் என்றும் ஆயத்தப்பணிகளும் ஆட்கள் வேலை எடுப்பும் ஆகஸ்டு மாதத்திலிருந்து துவங்கலாம் என்றும் இப்போது பலமான பேச்சு எழுந்து வருகிறது. ஆளுங்கட்சியோடு இணக்கமான சேனல் என்பதால் எதுவும் நடக்கலாம்.!”
“பிக்பாஸ் ரேட்டிங்கில் இம்ப்ரூவ்மெண்ட் உண்டா?!”
“ம்ஹூம்... அதே நாலு புள்ளி சொச்சம்தான். சொல்லப்போனால் மவுசும் ரேட்டிங்கும் சற்று குறைந்துவிட்டது. சென்னை ரேட்டிங் மாத்திரம் எட்டு புள்ளிகள் சொச்சம் இருப்பதால் சேனல் மூச்சு விடுகிறது. இருந்தாலும் இப்படியே தொடர்ந்தால் தத்தளிப்புதான். அதுவுமின்றி கலாச்சார சீர்கேடு அது இது என சிலர் பிக்பாஸை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் செய்திகள் உலா வருவதால் அதில் கொஞ்சம் பீதியடைந்திருக்கிறது. சேனல்!”
“இப்போதுதான் தொழிலாளர்கள் பிரச்னையில் ஒரு சுமூக முடிவு கிட்டியது. அடுத்து கோர்ட் பிரச்னை வேறு எழப்போகிறதா?... பாவம் விஜய் டி.வி!”
“ஆனால் ஒரு விஷயம்... மொத்த டி.ஆர்.பி.யில் இப்போது 13 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தவாரம் ஜீ தமிழை முந்தி இருக்கிறது விஜய் டி.வி. இது முழு வெற்றியல்ல தற்காலிக நிம்மதி... அவ்வளவுதான்! நூறு புள்ளிகள் வித்தியாசமாவது விரைவில் காட்டப்படவேண்டும் என ஜரூராய் உழைக்கிறது ஜெரால்டு தலைமையிலான சீரியல் டீம்!”

“ஆமாம்... கலர்ஸ் டி.வி.யில் ஏதேனும் முன்னேற்றம் உண்டா?!”
“அதே 85 புள்ளிகள்தாம், இவ்வளவு செலவு செய்தும் 100 கூட தாண்டவில்லையா என மேலிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டது. விரைவில் இங்கே துணைத்தலைமைகளில் மாற்றங்கள் வரலாம். ஒளிபரப்பப்படும் சீரியலக்ளில் 'நாகினி' டப்பிங் மாத்திரமே ஒரு புள்ளியைத் தாண்டுகிறது. மற்ற ஒரிஜினல் தமிழ் சீரியல்கள் யாவும் அதற்கும் கீழேதான். ஆனால் சீரியல்களில் பேரழகி, சிவகாமி, வேலுநாச்சி போன்ற கதைகள் என்னவோ ஒன்றாகத்தான் இருக்கின்றன. இருப்பினும் தமிழ் ரசிகர்களிடம் ஏன் இன்னும் ஒரு ‘பிரேக்த்ரு’ கிடைக்காமல் இருக்கிறது என கலர்ஸ் தமிழ் மண்டையை உடைத்துக் கொள்கிறது. இப்போதைக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் பாலிமர், ஜெயா, கலைஞர், டி.வி.க்களை விட கலர்ஸ் தமிழ் முன்னிலையில் இருக்கிறது என்பதுதான்!”
“அதற்காகவா இத்தனை செலவு செய்தார்கள்? அது சரி, பாலிமர், ஜெயா, கலைஞர் எல்லாம் என்ன ரேட்டிங் வாங்குகின்றன?!”
“பலிமர் 69, ஜெயா65, கலைஞர் 57”
“அட கலைஞர் டி.வி. இத்தனை கம்மி ரேட்டிங்கிலா இருக்கிறது?!”
“அதை விட அதளபாதளம் ராஜ் டி.வி.யின் மொத்த ரேட்டிங்கே 16 புள்ளிகள்தாம். இத்தனைக்கும் ஒரே நிறுவனத்திற்கு ஐந்தாறு தொடர்களை செய்யக்கொடுத்து வாரியிறைத்து செலவழித்துள்ளது ராஜ் டி.வி. அப்படியும் வளர்ச்சியைக் காணோம். பேசாமல் நல்ல விலைக்கு யாராவது வாங்க முன்வந்தால் சேனலை விற்றுவிட்டுப் போய்விடலாம் எனும் அளவுக்கு விரக்தியில் இருக்கிறது ராஜ் டி.வி. மேலிடம்!”
“அய்யோ பாவம்! சரி... நீங்கள் சன் டி.வி. சேதிகளைச் சொல்லுங்கள்!”என்றார் நண்பர்.

சன் டி.வி.யில் இந்த வாரம் சுந்தர் சி. தயாரிப்பில் ‘மாயா’ புதுத்தொடர் ஒளிபரப்பாகத் துவங்கியிருக்கிறது. ஆரம்பமே அமர்க்களம்தான். தொடரின் கிராஃபிக்ஸ் காட்சிகள் அசத்தலாக இருக்கின்றன. இது நான்கு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெறும் என சன் நம்பிக்கையோடு காத்திருக்கிறது. இது தவிர சன் நெக்ஸ்ட்டில் சில புதிய விஷயங்கள் நடக்கப்போகிறது. அதை அடுத்தவாரம் சொல்கிறேன்!”
என விடைபெற்றேன் நான்!
(தொடரும்)

Leave a comment
Upload