தொடர்கள்
அரசியல்
என்னடா அரசியல் இது?! (13) வெளுத்து வாங்குகிறார் நாஞ்சில் சம்பத்

20180614011307470.jpg

1993-ம் வருடம் அக்டோபர் மாதம் 3-ந்தேதி தூர்தர்ஷனில் செய்தி வாசித்த ஷோபனா ரவி ‘வைகோவின் ஆதாயத்திற்காக விடுதலைபுலிகள் கருணாநிதியை கொல்ல சதி’ என்று மத்திய அரசின் ஊர்ஜிதம் ஆகாத செய்தி சொல்கிறது என செய்தியில் சொன்னார்கள். நாடு முழுவதும் அந்த செய்தி அதிர்வலைகளை உருவாக்கியது. அந்நேரத்தில் திருக்கோவிலூர் பொதுக்கூட்ட மேடையிலிருக்கும்போது இந்தத் தகவல் எனக்கு சொல்லப்பட்டது.

அளவில்லாத துயரத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளானேன். ‘இது தான் தி.மு.க வில் நான் பேசும் கடைசி பொதுக்கூட்டம்’ என முடிவு எடுத்துவிட்டேன். ஒன்றரை மணிநேரம் பெரியாரையும், அண்ணாவைப்பற்றியும் பேசிவிட்டு, நன்றி, வணக்கம், என முடிக்க.

கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தலைவர் பற்றியும், தளபதி பற்றியும் எதுவும் பேசவில்லை என சற்று குறைபட்டுக்கொண்டார்கள். என்னிடமும் கேட்டார்கள் ‘அதற்கென்ன.. இனிவரும் பொதுக்கூட்டங்களில் பேசினால் போச்சு’ என வேகமாக வெளியே வந்தேன். முதல் வேளையாக திருக்கோவிலூர் பொதுத் தொலைபேசி மூலம் வைகோவை தொடர்பு கொண்டேன். அவர் குமுறி குமுறி அழுதார். ‘ஏற்கெனவே இப்படி ஒரு பழி வரும் என்று சொன்னீர்கள். ஆனால் அதை நான் நம்பவில்லை. இன்று அது நடந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லையே சம்பத்’ என அழுதார். ‘கவலை வேண்டாம். இன்று தி.மு.க மேடையில் பேசியது கடைசி என முடிவெடுத்துவிட்டேன். நாளை சென்னை வருவேன். உங்களை சந்திக்கிறேன். நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் இருங்கள்’ என்று சொன்னேன்.

அன்று இரவே சென்னைக்கு பயணமாகி வைகோவை சந்திக்க புறப்பட்டேன். அண்ணாநகர் அய்யப்பன் கோவில் எதிரே வைகோ வாடகைக்கு இருந்த 148 y பிளாக் வீட்டில் சந்திக்க போனபோது அலை அலையாக அணி அணியாக முகம் தெரியாத தம்பிமார்கள் வைகோவின் வீட்டுக்கு வந்து கொண்டே இருந்ததை பார்த்து பரவசமானேன். வைகோவிடம் ‘இது நல்ல தொடக்கம். உங்களுக்கான அரசியல் இதுதான் ஆர்மபம் என சொல்லிவிட்டு, செய்தியாளர்களுக்கு மத்தியில், ‘கருணாநிதி சாதாரண தலைவரல்ல... தலைவர்களை உருவாக்கும் தலைவர்’ என்று பேட்டி கொடுத்தேன்.

அந்த நாளிலிருந்து 1994-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதிவரை ம.தி.மு.க என்ற கட்சி உதயமாகிற வரை தலைநகர் சென்னையிலேயே இருந்து அதற்கான ஆயத்த வேலைகளை செய்தேன். அரண் அமைத்தேன். ம.தி.மு.க. என்ற வடிவம் உருவாக என்னை நான் அர்ப்பணித்தேன்.’

பயணங்கள் விரியும் - சில காலம் கழித்து! இப்போதைக்கு விடைபெறுகிறேன்.


சந்திப்பு: வி.சந்திரசேகரன்