
கொ.பரந்தாமன், காட்பாடி
கேள்வி: வாழ்க்கை வரலாற்று நூல்கள் படிக்க ஆர்வமாக உள்ளது. முதலில் யாரைப் பற்றிய புத்தகத்தை சிபாரிசு செய்வீர்கள்?
பதில்: கல்லூரிப் பருவத்தின்போது, நான் முதலில் படித்த புத்தகம் இத்தாலிய சிற்பி பென்வென்யூட்டோ செலினி எழுதிய சுயசரிதை. எனது தாத்தா டாக்டர் பி.டி.ராகவாச்சாரி கொடுத்து படிக்கச் சொன்னார். அடுத்த புத்தகம் கிரேக்க எழுத்தாளர் எழுதிய ப்ளூடார்க் எழுதிய Lives (வாழ்க்கை வரலாறுகள்) - கிரெக்க, ரோமானிய தலைவர்களைப் பற்றிய புத்தகம், மூன்றாவது மாஜினியின் வாழ்க்கை வரலாறு. ஏன்? நீங்கள் காந்திஜியின் Experiments with Truthலிருந்து ஆரம்பியுங்களேன்.
மாதரசி கோவிந்தராஜன், சின்னசேலம்
கேள்வி: தனிமையிலே இருப்பதில் மனக்கவலை குறையுமா? அதிகமாகுமா?
பதில்: நீங்கள் ஞானியாக இருந்தால் தனிமை ஏகாந்தமாக இருக்கும். இல்லையேல் கவலை வாட்டும். ஏதென்ஸ் நகரில் வசித்த சாக்ரடீஸை சுற்றிலும் நண்பர்கள் குழாம் எப்போதும் இருந்தது. அதுவே அவருக்கு முன் வாழ்ந்த டயோஜனீஸ் தனிமையை விரும்பினார். இரவில் தெருவில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியை க்ளீன் பண்ணி, அதைப் படுக்கப் போட்டு அதில் தூங்குவார். இருவருமே பெரிய தத்துவ ஞானிகள். இப்போது மனோதத்துவ டாக்டர்கள் தனிமை தவறு என்கிறார்கள். மன அழுத்தம் குறைய நண்பர்களுடன் வாழ வேண்டும் என்கிறார்கள்!

டி. செங்கல்வராயன், திருப்பாப்புலியூர்
கேள்வி: காலங்காலமாக கேட்கப்படும் கேள்விதான். கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?
பதில்: கண்ணகி கற்புடனேயே இருந்த பண்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். கற்பு அவள் ரத்தத்தில் ஊறியிருந்தது. மாதவி கணிகை. பொதுவாழ்வில் ஈடுபட்டவள். அப்படியும் கோவலனிடம் உண்மையான காதலுடன் வாழ்ந்தாள். என்னைக் கேட்டால் மாதவி ஒரு படி மேல் என்பேன்!
நைனார் முகமது, திருமங்கலம்
கேள்வி: இந்தியாவில் இரண்டே கட்சிகள் மட்டும் இருந்தால் எப்படி இருக்கும்?
பதில்: கிராமத்துக்கு ரெண்டு கட்சியா? இந்தியா பிரம்மாண்டமான கலவரமான ஒரு ஜனநாயக நாடு. இரண்டே கட்சிகள் இருந்தாலும் இரண்டே வருஷத்தில் ஆயிரம் கட்சிகளாக உடைந்து பிரிந்து பழையபடி ஆகிவிடும். சர்வாதிகார, கம்யூனிச நாடுகளைத் தவிர்த்துப் பார்த்தால் இரண்டே கட்சிகள் உள்ள நாடே உலகில் கிடையாது எனலாம்!
எஸ்.ஜெபராஜ், கல்லிக்டைக்குறிச்சி
கேள்வி: எமனுக்கு ஒரு நாள் மட்டும் லீவு கொடுத்துவிட்டு, உங்களை ஒரு நாள் எமதர்மராஜாவாக்கினால், நீங்கள் தொலைத்துக் கட்ட நினைக்கும் முதல் நபர் யார்?
பதில்: எமன்தான். பதவி அவ்வளவு சக்திவாய்ந்ததாக்கும்!
நாகராஜன், விருத்தாசலம்
கேள்வி: கிறித்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரே கடவுள். இந்துக்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?
பதில்: யார் சொன்னது? இந்துக்களுக்கும் ஒரே கடவுள்தான் - பரப்பிரம்மன். அல்டிமேட் கடவுள்! வேதங்கள் பிரம்மத்தைப் பற்றித்தான் பாடுகின்றன. அதை அடைய பல வழிகள்தான் பல கடவுள்கள். பல தெருக்கள், போய்ச் சேருவது ஒரே இடம்தான். பல கடவுள்களையும், அவர்கள் சக்தியையும், தனித்தன்மையையும் குறித்து புராணங்கள் எழுதப்பட்டு இந்து மதம் கலர்புல்லாக அமைக்கப்பட்டது. உருவ வழிபாடு (Idol worrship) இந்து மதத்தில் முக்கியமானதாக ஆகிவிட்டது.

கோகுல்நாத், மயிலாப்பூர்
கேள்வி: மோடி, ராகுல் யாருக்கு உங்கள் மதிப்பெண்?
பதில்: தற்போது அகில இந்திய ரீதியில் மதிப்பெண் போடச் சொல்லி ஒரு தேர்தல் நடத்தினால் மோடி பெரிய ‘லீடிங்’கில் வெற்றி பெறுவார். நான் மக்கள் பக்கம்!
திருவேங்கடத்தான், ஆழ்வார்திருநகரி
கேள்வி: ஆரிய, திராவிட சண்டை ஓய்ந்துவிட்டதா?
பதில்: ஓய்ந்துவிட்டதுதான். ஆனால் ‘நீங்கள் யார்?’ என்று விசாரிப்பது ஓயவில்லை என்று நினைக்கிறேன்!
கார்த்திகைசெல்வன், மதுரை
கேள்வி: மனம் உடலின் எந்த பாகத்தில் இருக்கிறது?
பதில்: அகில உலக ரீதியில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாத விஷயம் அது. சிலர் மூளைக்குள் என்கிறார்கள். சிலர் உடம்பு முழுவதும் பரவலாக என்கிறார்கள். மூளை வேறு, மனம் வேறு. மனம் என்பது தன்னைப் புரிந்துகொண்ட நிலை - consciousness! நான் மதன், நீங்கள் கார்த்திகை செல்வன் என்பதை அறிந்த நிலை. விலங்குகளுக்கு மனம் கிடையாது. மனம் மர்மமானது என்பதில் சந்தேகமில்லை!
ரங்கபாஷ்யம், திருவள்ளூர்
கேள்வி: அமெரிக்கா - சீனா இடையே தோன்றியுள்ள இந்த டிரேட் வார் அதாவது வர்த்தகப் போர் எதில் போய் முடியும்?
பதில்: யுத்தமெல்லாம் வராது. பொருளாதாரத்தில் மோதிக்கொள்வார்கள். சீனா பயங்கரமாக முன்னேறி வருகிறது. ஆசியாவில் முதலில் டாமினேட் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டு செயல்படுகிறது சீனா. அமெரிக்காவுக்கு அந்தக் கவலை உண்டு. இது உச்சக்கட்ட போட்டியில் போய் முடியும். தரம், விலை, சுலபமாகக் கிடைப்பது - இதெல்லாம் முக்கியத்துவம் பெறும்!
புத்தகப்பிரியன், விழுப்புரம்
கேள்வி: எர்ல் ஸ்டான்லி கார்ட்னர், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், சிட்னி ஷெல்டன், இர்விங் வாலஸ், ஆர்தர் ஹெய்லி... நீங்கள் யார் கட்சி?
பதில்: லிஸ்டை தலைகீழாகப் படிக்கவும். எல்லோருமே பிரமாதமாக கதை சொன்னார்கள். கீழே புத்தகத்தை வைக்க முடியாது. ஆனால் அது ஒரு வயதில், காலகட்டத்தில்தான். இப்போது அந்தப் புத்தகங்களை என்னால் படிக்க முடியாது. கொஞ்சம் அலுப்பு தட்டும்!
சத்தியப்பிரியன், வண்ணாரப்பேட்டை
கேள்வி: நடிகையின் மூலதனம்...?
பதில்: தெரியவில்லையே!
இருளப்பன், சிவகெங்கை
கேள்வி: Character is what you are in the dark. ஏற்றுக்கொள்கிறீர்களா?
பதில்: ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பகலிலும் Character உடன் இருக்க வேண்டும்!

பகதத்தன், பாஞ்சாலங்குறிச்சி
கேள்வி: பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை?
பதில்: அவர்கள் ஹார்மோன்ஸ் அப்படி! ஆனால் பெண்களுக்கு தலைமுடி கொட்டி Thin ஆகிவிடும். சில வயதான பெண்களுக்கு மண்டையே தெரியும்! ஆனால் ஆண்களுக்கு 25 வயதிலேயே வழுக்கை விழுந்து நான் பார்த்திருக்கிறேன்.

திருமலை, தூத்துக்குடி
கேள்வி: கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவுக்குப் பிறகு, அந்தக் கட்சியில் யாருக்கும் இலக்கிய வாசனை இருப்பதாக தெரியவில்லையே.. இதற்குக் காரணம் இன்றைய கம்யூனிஸ்டுகள் வர்க்கப் போராட்டத்தை மறந்துவிட்டு, வர்ண போராட்டத்தில் இறங்கியதுதானா?
பதில்: சாதாரணமாகவே கம்யூனிஸ்டுகள் நிறைய படிப்பார்கள் என்பது என் ஊகம். கார்ல் மார்க்ஸ் எழுதிய டாஸ் கேபிடல் (மூலதனம்) ஒன்று போதும். அதைப் படித்து மீண்டு வந்தாலே பெரிய சாதனை. மார்க்ஸ் தடிமனான புத்தகங்களை எழுதிக் குவித்தவர். எல்லா கம்யூனிஸ்ட்களுக்கும் வேதம் (ஸாரி!) மாதிரி அது. எத்தனை இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் அதைப் படித்திருப்பர்கள் என்று தெரியவில்லை! ‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று சொல்வது ஒரு ஃபாஷனாகவும் ஆகிவிட்டது!
ஜானகிராமன், திசையன்விளை
கேள்வி: பஃபே என்றால் என்ன? ஏன் நாமே எடுத்துக்கொண்டு சாப்பிடும் முறைக்கு அந்தப் பெயர் வந்தது?
பதில்: அது ஒரு பிரெஞ்சு வார்த்தை! பஃபே என்றாலே எல்லோரும் எடுத்துக் கொண்டு சாப்பிடுவதுதான். எனக்கு பஃபே பிடிக்காது. சிலர் தட்டைச் சரிவாகப் பிடித்துக் கொண்டு, சாப்பாட்டை பாத்திரத்தில் கொட்டிவிடுவார்களோ என்ற சந்தேகம்தான் காரணம். என்னை உட்கார வைத்து பரிமாறினால்தான் எனக்குப் பிடிக்கும்!

Leave a comment
Upload