தொடர்கள்
சினிமா விமரிசனம்
கோலிவுட் சிப்ஸ்! - சித்தார்த்

20180614013125415.jpg

வெளிவந்திருக்கும் தமிழ்ப்படம் 2-வில் இன்னார் அன்னார் என்ற எந்தவித பேதமும் இன்றி எல்லா நடிகர்களையும் அவர்களது படங்களையும் கலாய்த்துவிட்டார்கள். படத்தில் ‘வா க்வார்ட்டர் கட்டிங்’ படம் பற்றி பேச்செடுத்து, ‘அது ஒரு மொக்கை படம்’ என ஹீரோ சிவா சொல்கிறார். விஷயம் என்னவென்றால் அந்த மொக்கை படத்தில் நடித்ததே சிவாதான். தயாரித்தது தமிழ்ப்படம் 2-வின் தயாரிப்பாளர் வொய் நாட் ஸ்டுடியோவேதான். தங்களைத் தாங்களே கலாய்த்துக் கொண்டது அதிசயம்தான்!

20180614035734532.jpeg

சிவகார்த்திகேயன் பொன்ராம் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டார். பூசணிக்காய் சுற்றி முடித்த பிறகும் ஒருநாள் ஃபோட்டோ மற்றும் விடியோ ஷூட் நடந்தது. வேறொன்றுமில்லை... அந்த கெட் அப்பில் சினிமா காட்சிகளுக்காக இல்லாமல் ஆசையாக தன் விருப்பத்துக்கென தனி ஷூட்டிங் வைத்துக்கொண்டாராம். இப்படித்தான் சும்மா என்பார்கள். அப்புறம் அதையே ஆல்பமாக்கி நண்பர் அனிருத்தை தனியே அதற்கென பாடல் போடச் செய்து யூடியூபில் வெளியிட்டு காசு பார்த்து விடுவார்கள்...


பார்த்தாலும் தப்பில்லையே!

20180614013154751.jpeg

‘சமந்தா திடீரென கொஞ்ச காலம் நடிக்கப் போவதில்லை’ என தெலுங்கு தேசத்தில் புரளிகள் உலாவத் தொடங்கியது. உடனே பலரும் அவருக்கே போன் செய்து ‘கர்ப்பமா என்ன?!’ என்று கேட்டு விட்டார்களாம்! பதில் சொல்லி நொந்து போனார் சமந்தா. அது வெறும் புரளி என்பதற்கு அடையாளமாக அடுத்தடுத்து மூன்று படங்களில் புக் ஆகியிருக்கிறார் அம்மணி!

2018061401322901.jpg

மலையாள நடிகைகளின் ‘தில்’லே தனி. பாவனா விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைதான திலீப், முதலில் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். இப்போது திடீரென அவரது வழக்கு விசாரணையில் இருக்கும்போதே ஜாமினில் வெளிவந்த திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தார் தலைவர் மோகன்லால். உடனே கொதித்தெழுந்து மஞ்சுவாரியர், ரீமா கலிங்கல், பத்மப்ரியா, பாவனா போன்ற பல நடிகைகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கத்திலிருந்து விலகி காட்டமாக பொது வெளியில் அறிவித்தார்கள். விளைவு?... மோகன்லால் பணிந்துவிட்டார். அந்த வழக்கில் திலீப் நிரபராதி என தீர்ப்பு வரும் வரை அவர் மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்படமாட்டார் என உறுதியளித்துவிட்டார்.

20180614013303441.jpeg

ரஜினி நடிக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சன் மூவிஸின் படம் டேராடூனில் ராணுவக் கட்டுப்பாட்டோடு நடந்து வருகிறது. மோடி சொன்ன ‘No Cash Transaction' முறையை இம்மி பிசகாமல் பின்பற்றுகிறது யூனிட். அது யூனியன் பேட்டாவாக இருந்தாலும் சரி... மற்ற தயாரிப்பு செலவுகளானாலும் சரி... ஒற்றை ரூபாய் கூட பணமாக யாருக்கும் தரப்படுவதில்லை. சன் மூவிஸ் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் என்பதால் சர்வமும் காசோலை மயம்தானாம்! பணப்பரிமாற்ற விஷயத்தில் மட்டும் தி.மு.க.காரர்களுக்கு பா.ஜ.க பிரதமரை பிடித்துவிட்டதோ?!

20180614013425177.jpeg

கொரில்லா படத்தில் நடிக்கும் ஜீவா, தற்போது வாங்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் கேட்டாராம். தயாரிப்பாளர் காரணம் கேட்டதற்கு, ஜீவா சொன்ன பதில் இதுதானாம்! “எப்படியும் அந்த கொரில்லாவை ஹீரோ போல முன்னிறுத்திதான் வியாபாரம் செய்யப் போகிறீர்கள். இணை ஹீரோதான் நான். அப்படியெனில் சம்பளமாவது என் விருப்பப்படி இருந்தால்தானே சரி?!” என சாமர்த்தியமாக ஜீவா பேச, தயாரிப்பாளர் சமர்த்தாக அவர் கேட்ட பணத்தை தந்து, பாங்காக்கில் படத்தை நடத்தி முடித்துவிட்டார். படம் பாங்காக்கில் நடந்ததற்கு கொரில்லாவே காரணம். முதல் விஷயம், அதற்கு நம்ம ஊர் கிளைமேட் ஒத்துக்காது. இரண்டாவது, விலங்குகளை வைத்து இங்கே படமெடுப்பது சரியான தலைவலி!

20180614013453256.jpg

“வரலட்சுமி, விஷாலை திருமணம் செய்ய நினைத்தால் அது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் நான் மூக்கை நுழைக்க மாட்டேன். கருத்து கேட்டால் மாத்திரம் சொல்வேன்!” என வாரப் பத்திரிகை ஒன்றில் சரத்குமார் பேட்டியளித்திருக்கிறார். இது பற்றி அவரது மகள் வரலட்சுமியிடம் கேட்டதற்கு “சரிதானே?... எங்கப்பா ஒரு ஜெண்டில்மேன் என்பதையே இந்த பேட்டி மீண்டும் நிரூபிக்கிறது. எங்கள் முடிவுகளுக்கு அவர் என்றுமே தடை சொல்ல மாட்டார். இதில் நான் சொல்ல வேறென்ன இருக்கிறது?!”

“சரி திருமண விஷயத்தில் உங்கள் முடிவுதான் என்னது?!”

“இன்னும் தீர்மானிக்கவில்லை என்பதே முடிவு!”

வரலட்சுமி எப்போதும் அதிரடி சரவெடி லட்சுமிதான்!அது படமானாலும் சரி... நிஜமானாலும் சரி.

20180614013522866.jpg

அடுத்தடுத்து படங்கள் செய்வதில் அண்ணனை முந்திவிட்டார் தம்பி. அண்ணன் உதயநிதி ‘மூன்றாவது கலைஞர்’ என பட்டம் கட்டப்பட்டு, அரசியல் மேடைகளில் பேசிக்கொண்டிருக்க தம்பி அருள்நிதி தன் அடுத்த பட ரிலிஸுக்கு முந்தியே அதற்கடுத்த படத்திலும் நடிக்கத் தொடங்கிவிட்டார். நிபுணன் பட இயக்குநர் அருண் வைத்தியநாதனின் சிஷ்யர் பரத் நீலகண்டன் இயக்க, எஸ்.பி. சினிமாஸ் நிறுவனம் எடுக்கும் இந்தப் புதிய படத்தில் ஜூலை 12 அமாவாசையன்று களமிறங்கிவிட்டர் அறிவு. படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் வகையறா. இதன் கதாநாயகி, விக்ரம் வேதா படத்தில் நடித்த ஸ்ரத்தா.

20180614013615930.jpg

ஒருவழியாக நவம்பர் மாதம் தனது 2.0 படம் ரிலீஸாவதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்திருக்கிறார். ஆனாலும் படம் அந்த தேதியில் வெளிவருவது கஷ்டம்தானாம்! கிராஃபிக்ஸ் பணிகள் முடியவில்லை என்பது ஒரு புறமிருக்க... எடுத்த வரை போட்டுப்பார்த்த படத்தின் நீளம் வெகு குறைச்சலாக இருக்கிறதாம். இரண்டு மணி நேரத்துக்காவது படத்தை தேற்ற முடியுமா என மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார் ஷங்கர்.