கதை
கதை - உயிர்... - ஆர்னிகா நாசர்

20190807042329386.jpeg



மறுநாள் காலை செய்ய வேண்டிய இருதய மாற்று அறுவை சிகிச்சையை பற்றி யோசித்தப்படி அமர்ந்திருந்தாள் ஜேனட் பொற்செல்வி.


ஜேனட்டுக்கு வயது முப்பது. 170 செ.மீ உயரம். லெபனான் மகளிர் போல் வசீகரமான முகம். ஸ்வீடன் பெண்களுக்கு இருப்பது போன்ற கைப்பிடிக்குள் அடங்கும் இடை. ஆஸ்திரேலிய பெண்களுக்கு இருப்பது போன்ற அழகிய வாளிப்பான தொடைகள். சங்கத் தமிழ் பெண்டிர் போல சங்கு கழுத்து. மெக்ஸிகன் பெண்கள் போல சுருள் சுருள் தலைகேசம். ஜேனட்டை ஒருமுறை ஆழமாக பார்த்தாலே புணர்ச்சி சுகம் கிட்டும். ஜேனட் ஒரு நடமாடும் அழகு பொக்கிஷம்.


ஜேனட்டுக்கு முன் ஒரு ஹோலிகிராபிகல் விடியோகிராம் பூத்தது. மரபணு பொறியல் விஞ்ஞானி சுந்தரபுத்தன் தோன்றினான். “ஹாய் ஜேனட்! குட் மார்னிங்!”


சுந்தரபுத்தனுக்கு வயது 32. உயரம் 180 செமீ. அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உயிர்த்தெழ செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பவன். பில்லியனரின் மகன்.


“குட்மார்னிங் புத்தன்!”


“ஜேனட்! இன்று மாலை ஐந்துமணிக்கு டைனசார் பூங்காவில் சந்திப்போமா?”


“என்ன விஷயம் புத்தன்!”


“நான்கு வருடங்களாய நாம் நட்பாய் உள்ளோம். நீண்ட நாட்களாக உன்னிடம் ஒரு வாக்கியத்தை உச்சரிக்க முடியாமல் பரிதவிக்கிறேன். இன்று அந்த வாக்கியத்தை உன் முன் கொட்டிவிட விரும்புகிறேன்!”


சுந்தரபுத்தன் என்ன வாக்கியத்தை கொட்ட விரும்புகிறான் என தெரிந்தாலும் தெரியாதது போல நடித்தாள் ஜேனட்.


“என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல. இன்னைக்கி மாலை என்னால பூங்காவுக்கு வர முடியாது புத்தன்!”


“ப்ளீஸ் ஜேனட்… எனக்காக ஒரு பத்து நிமிடம் செலவு செய்…”


முப்பது நொடி கரைசலில் “ஓக்கே புத்தன்!” என்றாள்.


-மாலை...
பூங்காவிற்குள் குட்டி டைனசார்கள் உலவிக் கொண்டிருந்தன.

ஓட்டி வந்த மின்காந்தக் காரிலிருந்து இறங்கினாள் ஜேனட்.

எதிரே வந்து நின்ற மின்காந்தக் காரிலிருந்து சுந்தரபுத்தன் இறங்கினான்.


புத்தனும் ஜேனட்டும் ஒருவரை ஒருவர் பார்த்து முறுவலித்துக் கொண்டனர்.


சுந்தரபுத்தன் நீலநிற புல் சூட்டில் இருந்தான். கண்களில் குளிர்கண்ணாடி. நடைஉடை பாவனையில் ஆண்மை ததும்பினான்.


இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கினர்...


சரேலென ஜேனட்டின் முன் முழங்காலிட்டான். சிறு டப்பாவை திறந்தான். சிவப்பு நிற பாண்டா கரடிக்குட்டி!


“ஜேனட்! இந்த பாண்டா என் காதல் பரிசு. ஐ லவ் யூ!”


ஜேனட் பொற்செல்வி தோள்களை குலுக்கிக் கொண்டாள். “புத்தன்! உங்களது காதலை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு ஒரு புதுமையான காதல் பரிசு தரவேண்டும், அது போன்றதொரு காதல் பரிசு உலகில் இதுவரை எந்த காதலனும் காதலிக்கு கொடுத்திருக்க கூடாது!”


“என்ன காதல் பரிசு?”


“பூமியில் பார்க்க முடியாத ஒரு புதுவகை உயிரினத்தை நீங்களே படைத்து எனக்கு பரிசளிக்க வேண்டும். அந்த உயிரினத்துக்கு மனித உடல் இருக்கவேண்டும். அதன் முகத்தில் நூறுவகை மிருகங்கள், பறவைகளின் சாயல் இருக்கவேண்டும். அந்த உயிரினத்துக்கு பறக்க இறக்கைகள் இருக்கவேண்டும். நீரில் நீந்தி ஆக்ஸிஜன் சுவாசிக்க செவுள்கள் இருக்க வேண்டும். அது பாம்பு போல நிலத்தில் ஊர்ந்து செல்ல வேண்டும். அந்த உயிரினத்துக்கு நூறுவகை குரல்கள் இருக்க வேண்டும். அந்த உயிரினத்தை படைத்து பரிசளியுங்கள். உங்கள் காதலை ஏற்றுக்கொள்கிறேன்!”


சுந்தரபுத்தனின் முகத்தில் சிந்தனைக்கோடுகள் படர்ந்தன.


“மொத்தத்தில் என்னை இன்னொரு கடவுளாக சொல்கிறாய். ஜுனியர் கடவுள் உனக்கு காதலனாக விரும்புகிறாய்!”


“எக்ஸாக்ட்லி புத்தன். இந்த பரிசை படைத்து அளிப்பதற்கான அவகாசம் ஒரு வருடம். ஒரு வருடத்திற்குள் உங்களால் இந்த பரிசை படைக்க முடியாவிட்டால் என்னை மறந்து விடுங்கள். அதன்பின் என்னை சந்திக்கவோ பேசவோ முயற்சிக்கக்கூடாது. இந்த உயிரினத்தை உருவாக்க நீங்கள் எந்த உயிரினத்தின் மரபணுவையும் பயன்படுத்தக்கூடாது!”


“முடியாது என்கிற வார்த்தை என் அகராதியில் இல்லை ஜேனட். சீக்கிரமே விசித்திர உயிரினத்தை படைத்து உனக்கு பரிசளித்து உன்னுடைய மணாளன் ஆவேன்!”


“வாழ்த்துக்கள்! நான் கிளம்புகிறேன் புத்தன்!”


ஜேனட்டின் மின்காந்த கார் சீறி பாய்வதை வெறித்தான் சுந்தரபுத்தன்.


ஆராய்ச்சிக்கூடம்....


“குட்மார்னிங் பாஸ்!” என்றது ஆராய்ச்சி உதவியாளனாக செயல்படும் ரோபோ வடிவேலு.


“மார்னிங் வடிவேலு!”


“பாஸ்! நீங்க உங்க காதலிக்கு பரிசளிக்கப் போற உயிரினத்தின் தோற்றத்தை வரைந்து கொண்டு வந்துள்ளேன். பார்க்கிறீர்களா?”


“காட்டுடா வடிவேலா!”


வரைந்ததை காட்டியது வடிவேலு. “பாஸ்! நீங்க உருவாக்கப் போகிற உயிரினம் முன்னூறு கிராம் எடை இருக்கப் போகிறது. நீளம் ஆறு சென்டிமீட்டர், அகலம் மூன்று சென்டிமீட்டர். முகத்தில் சிங்கம், புலி, யானை, கொக்கு, கழுகு, கிளி, கழுதை பன்றி, டால்பின் முதலிய உயிரினங்களின் சாயல் இருக்கும். கழுத்தில் ஆறுஜோடி செவுள்கள் இருக்கும். நீருக்குள் நீந்தும் போது செவுள்கள் செயல்படும். நிலத்தில் இருக்கும் போது இறக்கைகள் உடலுக்குள் மறைந்து கொள்ளும். நிலத்தில் ஊரும்போது இறக்கைகளும் செவுள்களும் கால்களும் மறைந்து கொள்ளும். பச்சோந்தி போல உடல் நிறம் மாறும். வாலில் மின்மினி பூச்சி போல மினுக்கும் அமைப்பு உண்டு. தவளையை போல நீண்ட ஸ்ப்ரிங் நாக்கு. இந்த உயிரினம் குட்டியும் போடும் முட்டையும் போடும். இந்த உயிரினம் ஆணாகவும் செயல்படும் பெண்ணாகவும் செயல்படும். இந்த உயிரினத்துக்கு வௌவால் போல் எதிரொலி மூலம் கேட்கும் சக்தி!”


“நான் விவரித்ததை சிறப்பாக வரைந்திருக்கிறாய் வடிவேலு!”


“நம்மால் ஒரு பொம்மையைதான் உருவாக்க முடியும் உயிர் கொடுக்க முடியாது பாஸ்!”


“என்னால் முடியுமடா!”


“ஐசரி… எப்படியோ நீங்க இந்த உயிரினத்தை உருவாக்கி உங்க காதலிக்கு பரிசளித்து அவளையே கல்யாணம் பண்ணி எனக்கு ஒரு குட்டி பாஸை பெத்துக்குடுத்தா சரி!”


ஒரு பெரிய குவளையில் நீர், கார்பன், அமோனியா, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், உப்பு, சல்பர், ப்ளூரைன், இரும்பு, சிலிகான், பொட்டாசியம், ஆக்ஸிஜன், ஹைடிரஜன், நைட்ரஜன், கால்சியம் சோடியம், குளோரின், மக்னீசியம், காரீயம், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், 0.2 மில்லிகிராம் தங்கம் எல்லாம் போட்டு பிசைந்தான் சுந்தரபுத்தன்.


முதலில் இதயம், மூளை, இரத்தக்குழாய்கள் போன்ற உள்ளுறுப்புகளை செய்தான். எலும்புகளையும் நரம்புகளையும் வடிவமைத்தான். நூறு மிருகங்கள் பறவைகள் சாயலில் முகத்தை உருவாக்கினான். செவுள்கள் இறக்கைகள் கால்கள் மினுக்கும் வால் செய்து ஒட்டினான். ஒவ்வொரு நாளும் செய்த உருவத்தை மேம்படுத்தினான். நூறு விதமாய் குரல்கள் எழுப்பும் தொண்டை பெட்டியை செய்தான்.


நாட்கள் நகர்ந்தன…


சுந்தரபுத்தன் முகச்சவரம் செய்யவும் குளிக்கவும் தூங்கவும் மறந்தான்.


“பாஸ்!” வடிவேலு கைகொட்டி சிரித்தது. “ஹய்யோஹய்யோ… இப்ப நீங்க பாக்க சுந்தரபுத்தனோட கொள்ளுதாத்தா மாதிரி இருக்கீங்க!”


சிரித்தான் சுந்தரபுத்தன்.


ஆறுமாத உழைப்பில் புது உயிரினத்தின் உள்ளும் புறமும் வடிவமைத்து முடித்தான் புத்தன்.


“எப்டிடா இருக்கு நான் வடிவமைச்ச உயிரினம் வடிவேலா!”


“என் கண்ணே பட்ரும் போலிருக்கே… இந்த உயிரினத்துக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க?”


யோசித்து நிமிர்ந்தான் புத்தன். “மல்ட்டி!”


“மல்ட்டியை வடிவமைச்சாச்சு அதுக்கு எப்டி உயிர் கொடுக்கப் போறீங்க?”


“அவசரப்படாதே!”


அறைவெப்பம் 300ºc லிருந்து – 80ºc வரை படிப்படியாக குறைந்தது பின் கூடியது.

மல்ட்டியின் மீது மின்னல் சொடுக்கும் வண்ணம்... மல்ட்டியை நிறுத்தி வைத்தான் புத்தன். மல்ட்டி மீது நேரடியாக மின்னல் வெட்டாமல் ஒரு வடிகட்டியை இடையில் வைத்தான்.


மின்னல் ஜிக்ஜாக்கியது.


நான்காவது தடவை மின்னல் சொடுக்கி மல்ட்டியின் மீது பாய்ந்த்து. மல்ட்டி முழுக்க மின்னும் நீலநிறமானது.


ஓவ்!


மல்ட்டி, இறக்கைகளை படபடவென அடித்து பெரும் குரலில் கூவியது. ஆராய்ச்சி கூடத்திற்குள் பறந்தது. வால் மினுக்கியது.


சுந்தரபுத்தனின் தோளில் வந்து அமர்ந்தது.


பூங்கா...


“ஜேனட்! இதோ நீ கேட்ட காதல் பரிசு!” மல்ட்டியை புத்தன் நீட்டினான்.


அதே நேரத்தில்...


முந்நூறு ஒளி நூற்றாண்டுகளுக்கு அப்பால் ஒளிவீசும் இருப்பிடத்தில் வீற்றிருந்த இறைவன் கண் சிவந்தான். “வானவர் தலைவனே! பார்த்தாயா மனிதன் சிறிது சிறிதாய் விஞ்ஞானப் படிக்கட்டுகள் ஏறி ஒரு உயிர் செய்யும் வித்தையை கண்டுபிடித்து விட்டான். இன்னும் விட்டால் என் இருக்கை பறி போய்விடும்!” மொழியில்லாத மொழியில் பற்களை கடித்தான்.


“என்ன செய்யப்போகிறாய் பரம்பொருளே?”


இறைவன் கைகளை உயர்த்தி ஆணையிட்டான். “இப்பிரபஞ்சம் முழுக்க பூகம்பங்களாலும் நிலநடுக்கங்களாலும் சுனாமிகளாலும் தாக்கப்பட்டு அழியட்டும். சூரியனும், சந்திரனும் உதிரட்டும். காலம் உயிர்கள் எதுவும் தோன்றாத சூன்யத்திற்கு பின்னோக்கி போகட்டும். எல்லாமே இருட்டான இருட்டுக்குள் அமிழட்டும்!”


புத்தனும் ஜேனட்டும் மல்ட்டியும் எரிந்து கரிந்து சாம்பலாகினார்...


-லட்சம் வருடங்களுக்குப் பின்…


உயிர் நீர் குளத்தில் ஒரு ஒற்றை செல் உயிர் நீந்தியது.

இறைவன் சிரித்தான். “மீண்டும் பரமபத ஆட்டம் ஆரம்பம். ஒரு போதும் விஞ்ஞானம் ஆன்மீகத்தை அடிமைபடுத்தாது!”


வானவர்கள் கோரஸாய் “ஆம் பரம்பொருளே!” என்றனர்.