பொது
முடிவுக்கு வருகிறதா போராட்டம்..? ஹாங்காங்- கள நிலவரம்! - ராம்.

2019080700080461.jpg

ஒரு நல்ல அரசு தன் குடிமக்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்??

மஹாபாரதம் சொல்லுகிறது. ஒரு கர்ப்பிணிப் பெண் எப்படி தன் சிசுவை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வாளோ அப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டுமாம்.

என்னைப் பொறுத்தவரையில் அதையும் விட ஒரு படி மேலாக அரசு என்று ஒன்று இருப்பதே தெரியாமல் ஒரு நாடு அன்றாடம் நல்லபடியாக கடக்கிறது என்றால் அது இன்னமும் விசேஷம்...

அப்படித்தான் இருந்தது ஹாங்காங்கும். பாழாய்ப்போன இந்த சட்டத்திருத்தம் திடீரென கொண்டு வராதவரையில்.

மூன்று மாதங்கள், வாரா வாரம் பொதுமக்களை நிம்மதியாக வெளியே செல்ல விடாமல் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது ஹாங்காங்கில்.

ஒரு வழியாக பதிமூன்று வாரங்களாக நடைபெற்று வரும் ஒரு போராட்டத்திற்கு சுரங்கத்தினுள் வெளிச்சம் போல ஒரு சின்ன கீற்றாக தீர்வு வருவது போல தெரிகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு கைதிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் ஒரு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தார் ஹாங்காங்கின் முதன்மை அதிகாரி காரி லாம் அம்மையார். அன்று பற்றி எரிய ஆரம்பித்த நெருப்பு, கொஞ்சம் கொஞ்சமாக ஹாங்காங் என்ற சட்டத்திற்கு பயந்து, சட்டத்தை மதித்து, அடுத்தவரை இம்சிக்காத நகரம் என்ற பிம்பம் சுக்கல் சுக்கலாக உடைந்து விட்டது.

20190807000838708.jpg

வெறுமே ஊர்வலம் என்று தொடங்கி, பின்னர் ஆர்ப்பாட்டம், சாலை ஆக்ரமிப்பு, என்று தொடங்கி, அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது, தாக்குவது என்று தொடர்ந்து விமான நிலையத்தை முற்றுகையிடுவது வரை போய் விட்டது போராட்டம்.

சிம் ஷா சூய் என்ற இடத்தில் படகுத் துறையருகே இருந்த சீனக் கொடியை கீழிறக்கி கடலில் வீசியதுதான் போராட்ட்த்தின் உச்சம்.

சீன அரசை ஏகத்திற்கும் கோபப்படுத்தியது இந்த செயல் தான். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதில் பெரும்பான்மையான மக்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.

20190807001014751.jpg

அது போலவே துங் சுங் என்ற எம்.டி.ஆர் இரயில் நிலையத்தில் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டதும் ஹாங்காங் நகரம் இதுவரை சந்திக்காதது.

இந்த பிரச்சினைக்கெல்லாம் மூல காரணம் என்னவெனில், இன்றைய இளைய சமுதாயத்தின் பொருளாதார பற்றாக்குறையும் எதிர்காலம் குறித்த பயமும் தான்.

2047-ம் வருடம் வரை தொடரப் போகும் ஒரு நாடு, இரு முறைகள் என்ற விஷயம், அதற்குப் பின் என்று நினைக்கும் போது ஒவ்வொரு ஹாங்காங் இளைஞனுக்கும் இளைஞிக்கும் ஒரு பகீர் கிளம்புவது வழக்கம்.

என்ன பெரிய வித்தியாசம் என்றால் சீனாவில் கம்யூனிசம். கட்டுப்பாடு அதிகம். ஹாங்காங்கில் கொஞ்சம் தாராளமயம். ஒன்றுமில்லை சீனாவில் வாட்சப் வேலை செய்யாது. முகநூல் வேலை செய்யாது. இதெல்லாம் என்ன, ஹாங்காங் போராட்டம் பற்றிய செய்தி வந்தாலே டிவியில் கறுப்படித்து விடும். ஒன்றும் வராது.

ஜனநாயகத்திற்கும், கம்யூனிசத்திற்குமான ஒரு மெல்லிய இழை இந்த டிவி என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

இன்றைய ஹாங்காங் விலைவாசியில் ஒரு இளைஞன் சொந்த வீடு வாங்க வேண்டுமெனில் குறைந்தது 40 வயது ஆக வேண்டும். வாடகைக்கு வீடு எடுத்து தனியாக போவதற்கு கூட சிரமப்பட வேண்டிய நிலை தான். இது தான் மறைமுக ஆதார காரணம் என்று பொருளாதார நிபுணர்களும், உள்ளூர் ஊடகங்களும் குறிப்பிடுகிறது.

ஒரு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து துவங்கிய போராட்டம் போகிற போக்கில் ஐந்து நிபந்தனைகள் கொண்டதாக உருப்பெற்றது.

1. சட்ட திருத்த மசோதாவை வாபஸ் வாங்க வேண்டும்.

2. யூன்லாங் பகுதியில் நடந்த கலவரத்திற்கு போலீஸ் துறை மீது நடுநிலையான ஒரு கமிட்டி விசாரிக்க வேண்டும்.

3. காரி லாம் அம்மையார் ராஜினாமா செய்ய வேண்டும்.

4. இது வரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.

5. ஹாங்காங் முதன்மை அதிகாரியை மக்களே தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டும்.

இதில் முதல் நிபந்தனையை ஒருவழியாக காரி லாம் அம்மையார் நிறைவேற்றி விட்டார்.

ஆனால் மற்ற நிபந்தனைகளை ஏற்க மறுத்து விட்டார்.

இரண்டு நாட்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு செய்த போராட்டத்தினால், சுமார் 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, ஏறக்குறைய பல நூறு மில்லியன் டாலர்கள் நஷ்டம்.

20190807001114539.jpg

இதெல்லாம் யாரு பொறுப்பேற்றுக் கொள்வது, மேலும் வன்முறை செய்தவர்களை எப்படி விடுவிப்பது என்று கேட்கிறார் அம்மையார். நியாயம் என்று தோன்றினாலும் கலந்து கொண்ட பெரும்பான்மையானவர்கள் மாணவர்கள். மிக இளம் வயதுடையவர்கள். இளங்கன்று பயமறியாது என்று ஒரு உற்சாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அவர்களுக்கு தலைவர் என்று யாரும் இல்லை.

சுதந்திரம் வேண்டும் என்ற ஒருமித்த சிந்தனை தான் அவர்களுக்கு தலைவர்.

ஆக ஒரு நிபந்தனை ஏற்கப்பட்டாலும், ஹாங்காங்கில் அவ்வளவு எளிதில் அமைதி திரும்புமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஒரே ஒரு ஆறுதல். சொல்லி வைத்தாற்போல திங்கள் முதல் வெள்ளி வரை அமைதியாக இருக்கும் போராட்டக்காரர்கள், வார இறுதிகளில் முழு மூச்சாக தெருவில் இறங்கி போராடுகிறார்கள். கல்லெறிகிறார்கள். போலீசை வசை பாடுகிறார்கள். ஏறக்குறைய சில பகுதிகளில் கொரில்லா தாக்குதல் போல ஈடுபடுகிறார்கள்.

வார நாட்களில் நகரம் வழக்கம் போல இயங்கிக் கொண்டுதானிருக்கிறது. சனி ஞாயிறுகளில் ஜாலியாக ஊர் சுற்றும் கும்பல், பாவம்... வாலைச் சுருட்டுக் கொண்டு வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள்.

ஹாங்காங்கிற்கு சுற்றுலா பயணிகள் வரலாமா எனில், தாராளமாக வரலாம். ஆனால் சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமை விமான நிலையத்தை தவிர்ப்பது நலம்.

இந்த போராட்டங்களினால் உள்ளூர் பொருளாதாரம் ஏகத்திற்கும் அடிபட்டுள்ளது. இதன் பாதிப்பு தெரிய சில மாதங்கள் ஆகும் என்று சொல்கிறார்கள்.

இன்னொரு வருத்தமான விஷயம் கட்டுக்கோப்பான ஹாங்காங் போலீஸ் துறையின் மீது பெரும்பாலான மக்களுக்கு ஒருவித வெறுப்பு கிளம்பியுள்ளது நல்ல அறிகுறியல்ல. ஒரு நாட்டில் அல்லது ஊரில் காவல் துறையின் மீது நம்பிக்கையிழப்பு ஏற்பட்டால் அது சமூக அவலங்களுக்கு வித்திடும். குற்றங்கள் அதிகரிக்கும் என்பதும் பொதுமக்களின் கவலை.

அதுபோலவே தான் ஹாங்காங்கின் ஜீவ நதியான எம்.டி.ஆர் என்ற இரயில்வே துறையும். எம்.டி.ஆர். இல்லாத ஹாங்காங் நரம்புகள் இல்லாத உடல் போல. நகரம் சுவாசிக்கவே முடியாது என்ற போதிலும் போராட்டக்காரர்களுக்கு எம்.டி.ஆர் நிறுவனத்தின் மேல் கோபம். ஏனெனில் போலீஸ்காரர்களை எம்.டி.ஆர். நிலையத்திற்குள் அனுமதித்து அவர்களை கைது செய்ய உதவி செய்கிறார்கள் என்பதாம். உள்ளூர் சீனப் பெண் ஒருவர் இதைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டார். எம்.டி.ஆர். என்ன செய்யும், அவர்களும் போலீஸ் விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் தானே... இதெல்லாம் அறியாமையின் விளைவு என்கிறார்.

ஒரு டாக்ஸி ஒட்டுனரிடம் பேச்சுக் கொடுத்ததில் அவர் சொன்ன விஷயம். "12 வயது மாணவன் போராட்டத்தில் ஈடுபட்டானல்லவா? போலீஸ், அவன் வீட்டுக்கு சென்று பார்த்த போது 70ஆயிரம் ஹாங்காங் டாலர்கள் இருந்தது. அவன் அம்மாவிற்கே தெரியாது. இதற்கெல்லாம் பின்னணியில் பணம் விளையாடுகிறது. குறிப்பாக ஒரு நாளிதழின் பெயர் சொல்லி, அதன் உரிமையாளர்தான் இதற்கெல்லாம் காரணம். அடிக்கடி அந்த நாளிதழின் உரிமையாளர் அமெரிக்காவுக்கு போவது ஏன்? இதெல்லாம் யோசிக்க வேண்டிய விஷயம். அதற்காக போராட்டக்காரர்கள் செய்வது தவறு என்றும் சொல்ல மாட்டேன். இந்த சட்ட திருத்தம் கொண்டு வந்தது தேவையில்லாதது. அது தான் முதல் தவறு" என்றார்.

எப்படியோ ஒருவழியாக இந்த போராட்டம் முடிய வேண்டும் என்பது தான் அமைதியை விரும்புபவர்களின் ஆசை.

பொறுத்திருந்து பார்போம்...

** கடைசித் தகவல். இந்த இதழ் வலையேறும் நேரத்தில் ஹாங்காங் போராட்டக்காரர்கள் இந்த வாரமும் விமான நிலய வழிகளை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

அது போலவே எம்.டி.ஆர் எனப்படும் இரயில்வே நிலையங்களையும் முற்றுகையிட்டு இடையூறு ஏற்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இன்று சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஹாங்காங் அரசு வன்முறைக்கு எதிராக எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் ஆதரவு தருவதாக அறிவித்திருப்பது பதட்டத்தை மேலும் அதிகமாக்கும் என்று சொல்லப்படுகிறது.