பொது
தவறாத குறி! சிறையில் பூட்டப்பட்டார் சிதம்பரம்...

20190805215525446.jpg

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் தனது சார்பாக வாதாடும் வழக்கறிஞர்கள் எப்படியும் தனக்கு ஜாமீன் உத்திரவினை பெற்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் எப்படியோ போராடி சமாளித்து வந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் ப.சி. தரப்பு வழக்கறிஞர்கள் சிபிஐயின் கடுமையான ஆட்சேபணையினால் முன் ஜாமீன் கிடைக்காது என்ற நிலை தெரிந்து தீடீரென அந்தர்பல்டி அடித்தனர். தங்களது சட்ட வாதங்களையெல்லாம் தள்ளி வைத்து 'ப.சி. யின் வயது தற்போது 73, என்பதால் அவரின் முதிர்ந்த வயதை கருத்தில் கொண்டு சிறைக்கு அனுப்ப கூடாது.... அதற்கு பதில் அவரை வீட்டு காவலில் வைத்து, சிபிஐ விசாரிக்க வேண்டும்' என மன்றாடவே ஆரம்பித்துவிட்டனர்.

"நாங்கள் கேள்வி கேட்கும் போது ப.சி போதிய ஒத்துழைப்பு தராமல், பதில் சொல்லாமல் காலம் கடத்தி வருகிறார்... அதனால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வீட்டு சிறை என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது, இந்திய தண்டனை சட்டத்திலோ அல்லது ஜெயில் விதிகளின் படியோ குற்றம் சாட்டப்பட்டவரை வீட்டு சிறையில் வைத்து விசாரிக்க புலனாய்வு அல்லது காவல் துறைக்கு இடமில்லை" என்று கடும் ஆட்சேபம் தெரிவித்து சிபிஐ தரப்பு வாதாடியது.

உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி "என்னால் சட்டத்திற்கு உட்பட்டுதான் பெயில் மனுக்களை பரீசிலிக்க முடியும். தற்போது முன் ஜாமீன் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ள மனுதாரர் ப.சிதம்பரம், சிபிஐயின் நீதிமன்ற காவலில் இருப்பதால் நீதிமன்றத்தால் எந்த உத்திரவும் பிறக்க முடியாது. ஆகஸ்ட் மாதம் 8 தேதி வரை இவரை சிபிஐ காவலில் இருக்க உத்திரவிடுகிறேன். மனுதாரர் ப.சிதம்பரத்தை வீட்டு சிறையில் வைத்து விசாரிக்க சட்டத்தில் இடமில்லை. தற்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மனுதாரர் தனது பெயில் மனுவினை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, பரிகாரம் தேடிக்கொள்ளலாம்" என்றும் அதுவரை விசாரணைக்கு அமலாக்க இயக்குநரகம் அவரை கைது செய்யக் கூடாது எனவும் இடைக்கால தடைவிதித்தார்.

20190805215829221.jpg

ப.சி மனைவியும் மகனும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை கேட்டு அதிர்ச்சி அடைந்து முகம் வாடத் தொடங்கினர்.

உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளூபடி செய்யப்பட்ட ப.சி. ஆறாவது முறையாக சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் காவல் நீட்டிப்பிற்காக மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். ப.சி. மனைவி நளினி சிதம்பரம் உட்பட வழக்கறிஞர்கள் புடைசூழ நீதிமன்றத்தின் உள்ளே ப.சி. ஆஜர் ஆனார். சிறப்பு நீதிமன்ற குற்றவாளி கூண்டில் ப.சி. நிற்க வைக்கப்பட்டார். சிபிஐ காவலில் இருந்து நீதிமன்ற காவலுக்கு அதாவது திஹார் ஜெயிலுக்கு அனுப்ப, சிபிஐ தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அப்போது "ப.சிக்கு ஜாமீன் கோரி வாதாடவில்லை... அவரை சிபிஐ காவல் முடிந்துவிட்டதால், வழக்கிலிருந்து விடுவிக்க கோரி வாதாடுகிறேன். சிபிஐ-யை பொறுத்தவரை ப.சி யிடம், அனைத்து கேள்விகளையும் கேட்டுவிட்டது. ப.சி. அமலாக்கதுறையின் காவலுக்கு செல்ல தயாராகவே இருக்கிறார். ப.சியை நீதிமன்ற காவலுக்கு (ஜெயில்) அனுப்பகூடாது. ப.சிக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்த நிலையில் எந்த ஆதாரத்தினை ப.சி. கலைக்கப் போகிறார்?" என்று ப.சி. வழக்கறிஞர் கபில் சிபில் வாதாடினார். சிபிஐ தரப்பில், "ப.சி மீது பொருளாதார குற்றம் சுமத்தப்பட்டு அவரை கைது செய்து சிபிஐ காவலில் எடுத்து 15 நாட்களுக்கு விசாரணை நடத்தினோம். வழக்கு குறித்த தகவல்களுக்காக சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தகவல்கள் திரட்ட வேண்டும். ப.சி பவர்ஃபுல் மனிதர், வழக்கு விசாரணை முழுமையாக முடியாமல் அவரை வெளியே அனுப்பக் கூடாது" என்று சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார்.

சிறப்பு நீதிமன்ற குற்றவாளி கூண்டில் அரைமணி நேரத்திற்கு மேல் ப.சி. நின்று கொண்டே இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்டிருந்தார். நீதிமன்ற ஊழியர்கள் ஒரு ஸ்டூல் கொண்டு சென்று, உட்காரச் சொன்னார்கள்... ப.சி. உட்கார மறுத்துவிட்டார். நீதிபதி தனது தீர்ப்பினை எழதி வாசிக்க மேலும் சில நிமிடங்கள் ஆகலாம் என்று அறிவித்தார். கடந்த ஐந்து முறையும் குற்றவாளி கூண்டின் அருகே நாற்காலி போட்டும் உட்கார மறுத்துவந்த ப.சி, என்ன நினைத்தாரோ தெரியவில்லை... சட்டென்று நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டு குற்றவாளி கூண்டு அருகே சோகமாக உட்கார்ந்து விட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்க தயாரான போது... அதுவரை குற்றவாளி கூண்டில் அருகே அமர்ந்திருந்த ப.சி. மீண்டும் எழுந்து குற்றவாளி கூண்டின் உள்ளே சென்று நின்று கொண்டார். "ப.சி. என்பவருக்கு ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது... அதனால், திஹார் ஜெயிலில் அவருக்கு தனியான ஒரு செல் வழங்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். ப.சி. தற்போது தன் உடல் நலத்திற்காக என்ன மருந்துகள் உபயோக படுத்தி வருகிறாரோ அதனை தாராளமாக ஜெயிலில் எடுத்துச் சென்று பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. ப.சிதம்பரத்தை 14 நாட்கள் செப்டம்பர் 19ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்திரவிடுகிறது" என சிபிஐ-யின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் உத்திரவிட்டார்.

பதினைந்து நாட்களாக சிபிஐ கேள்விகளால் துளைத்து எடுக்கப்பட்ட ப.சிக்கு நீதிமன்ற காவல் உத்திரவு ஒரு வித நிம்மதியை தந்தது என்றே சொல்ல வேண்டும்... வாடிய முகத்துடன் குற்றவாளி கூண்டில் நின்றிருந்த ப.சிதம்பரத்தினை, சிபிஐ காவல்துறையினர் திஹார் ஜெயிலுக்கு அழைத்துச் செல்ல தயார் ஆனார்கள். நீதிமன்ற அறையை விட்டு வெளியே வந்த ப.சி, தன் முன்னே திரண்டிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து இந்தியாவின் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்வது தனக்கு கவலை அளிக்கிறது என்று கூறிச் சென்றதுதான் ஆகப் பெரிய தமாஷ்!

20190805220359793.jpg

திஹார் ஜெயிலில் ப.சிக்கு அறை எண் 7 ஒதுக்கப்பட்டுள்ளது. திஹார் சிறை அறை எண் 7 இசட் பிரிவு பாதுகாக்கப்பட்ட சிறை என்பதால் இதில் பொருளாதார குற்றவாளி,பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என தனியாக பிரித்து அடைக்கப்படுவார்கள். ப.சி தற்போது 73 வயது நிரம்பியவர் என்பதால், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி ஜெயிலில் உறங்குவதற்கு மரத்திலான ஒரு கட்டில், சீனியர் சிட்டிசன் என்ற முறையில் வழங்கப்படும். வெஸ்டர்ன் டாய்லட் வசதி உண்டு. ஜெயிலில் இருப்பவர் தன் உணவினை தானே சமைத்தும் சாப்பிடலாம். அல்லது ஜெயில் கேண்டீனில் தயாரிக்கப்படும் உணவினையும் வாங்கி உண்ணலாம். ஜெயிலில் இருக்கும் ஆர்.ஒ. பிளாண்ட் குடிநீர் பிடித்து குடிக்கலாம் அல்லது கேண்டீனில் இருந்து குடிநீர் பாட்டில் காசுக்கு வாங்கி கொள்ளலாம். விசாரணை கைதிகள் சொந்த உடைகளை அணிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே ப.சி. மகன் கார்த்திக் சிதம்பரம் இருந்த ஜெயில் செல்லில்தான் ப.சிக்கு 100 சதுர அடி கொண்ட ஒரு ஜெயில் செல் ஒதுக்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 16-ம் தேதி அவருடைய 74 வது பிறந்த நாள். அன்றும் அவர் திஹார் ஜெயிலில் இருப்பார் என்பது அவரது குடும்பத்தாரின் மாபெரும் வருத்தம்.

"சிபிஐ கேள்விகளுக்கு சரியாக ஒத்துழைப்பு தராத ப.சி.யிடம் நார்காடிக் எனும் உண்மை கண்டறியும் சோதனை மூலம், ஆய்வு செய்து உண்மைகளை பெற வேண்டும்" என்று சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார்.

"நீதிமன்றத்திற்கு வரும் போது தனது வலது கையை பிரித்து 5 விரலை ப.சி காட்டிச் சென்றது, அவர் தனது 5 அல்லது 50 தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்டேன் என்று சொல்வது" என்று பிஜேபி செய்தி தொடர்பாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதி இருந்தார்.

"இந்தியாவின் முன்னாள் நிதிமந்திரி ஒருவரை ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றம் திஹார் ஜெயிலுக்கு அனுப்பியது என்பது இதுவே முதல் முறை!" என வெள்ளிக்கிழமை அதிகாலையில் அனைத்து செய்தித்தாள்களிலும் செய்தி வந்த நேரத்தில் ப.சிதம்பரம் அநேகமாக தன் சிறை அறையின் விட்டத்தை கவலையுடன் வெறித்திருக்கக்கூடும்!