
நம்ம முரளியோட பிள்ளை ஹரீஷ் என்னை விளையாடக் கூப்பிடுறான், செத்த நேரம் போயி விளையாடிட்டு வரவா என பயத்துடன் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார் அய்யாசாமி, ருக்குவிடம்..
இதென்ன கேள்வி..? பேரனோட விளையாடப்போறதுக்கு? கொட்ட கொட்ட சும்மா உட்கார்ந்து இருக்கிறதற்கு,போயி விளையாடுங்கோ என சொன்னாள் ருக்கு.
என்ன விளையாட்டு விளையாடக் கூப்பிடுகிறான் தெரியுமா நோக்கு?
என்ன விளையாட்டு எனக் கேட்டாள் ருக்கு.
ரம்மி விளையாடக் கூப்பிடுறான் என்றார்...
அதனாலென்ன? பேஷா விளையாடுங்கோ... நல்ல விளையாட்டு, மூளை நன்னா வளரும் என்றாள் ருக்கு.
என்ன இது அப்போ எனக்கு வளரலைங்கிறாயா?
அதெல்லாம் இருக்கிறவா பிரச்சினைண்ணா... உங்களுக்கில்லை என்றாள்.
எல்லாரும் சூதாட்டம் என்பாளே, அதை நீ நல்ல விளையாட்டென சொல்லும் போதே தெரியறது நேக்கு, அதில் ஏதோ இருக்கிறது என்றார்.
விளையாட்டுகள் எல்லாமே நல்ல விளையாட்டுதான் அண்ணா... அதில் காசை நுழைத்தால்தான் சூதாட்டமாகிறது.
சீட்டாட்டம் என்றாலே சூதாட்டம் என்ற பார்வைதான் எல்லாரிடமும் பொதுவாக உள்ளது. ஆனால், ரம்மி விளையாட்டில் யதார்த்தமான மனித வாழ்வியல் உள்ளது என்பதை தெரிந்து விளையாடினால்... விளையாட்டிலும், வாழ்க்கையிலும் சுலபமாக ஜெயிக்கலாம்ணா.
என்ன ருக்கு..? ரம்மியிலே நீ என்னமோ டாக்ட்ரேட் பண்ணின மாதிரி பேசறே? நீ விளையாண்டுருக்கியா எனக் கேட்டார் அய்யாசாமி.
அந்தந்த வயசிலே எல்லோருமே ரம்மி விளையாண்டுதாண்ணா, கடந்து வந்திருப்பா... ஆனால், அர்த்தம் புரியாமல் என்றாள் ருக்கு.
நீ இப்போ சொல்லு, நானும் ஹரீஷும் அதைப் பற்றி தெரிஞ்சுக்கிறோம் என்றார் அய்யாசாமி.
முதலில் என்ன செய்வார்கள் என ருக்கு கேட்க...
நபருக்கு தலா 13 கார்டுகள் பரிமாறப்படும் என்றான் ஹரீஷ்.
குட்.. பல்வேறு சிந்தனையுள்ளவர்களில், விளையாடப் பிடித்தவர்கள்
முதலில் ஒன்றாக கூட வேண்டும். வாழ்க்கையில் கிடைக்கும் நம் நண்பர்கள் மற்றும் உறவுகள் போல, நமது வாழ்க்கையில் வருகின்ற வாய்ப்புகள் மாதிரி கார்டுகள் பரிமாறப்படும் என்றாள் ருக்கு.
கார்டுகள் பரிமாறும்போதே, அணிகள் உங்ககிட்டே தானாக சேர்ந்திருக்கலாம் அல்லது வந்த கார்டுகள் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாமல் கூட இருக்கலாம் அல்லது வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும்படியான கார்டுகளாகவும் இருக்கலாம். இது நம் வாழ்க்கையிலும் வரும், பல்வேறு நல்ல மற்றும் கெட்ட வாய்ப்புகள் மாதிரி.
பதிமூன்று கார்டுகளில் ஒரு பியூர் வரிசையும், ஒரு இம்பியூர் வரிசையும் வேண்டும் அல்லவா? அதுபோல் வாழ்க்கையிலும் நல்ல அனுபவமும் வரும், கெடுதலான அனுபவமும் வரும்.
வரிசை நம்மிடம் இருந்தாலும், இல்லை என்றாலும்... “ஜோக்கர்கள்” இருந்தால் மேற்கொண்டு ஆட முயற்சி செய்யலாம், அதுவே ஆட்டத்தைத் தொடர அல்லது ஜெயிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும் இல்லையா? அது மாதிரி... வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டால்,ஜோக்கர் போல் எவருடனும் இனைந்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம் எனும் ஆழமான கருத்து அதில் அடங்கி உள்ளது. ஆனால், வந்த பதிமூன்று கார்டுகளுமே ஜோக்கராக இருந்தாலும் கூட, உங்களால் ஆட முடியாது. அதுபோல நீங்கள் வெறும் ஜோக்கராக இருந்தால், வாழ்க்கையிலும் சுலபமாக ஜெயித்து விடமுடியாது.
இதை சொல்லும்போது மட்டும் ஏண்டி ருக்கு என்னைப் பார்த்து சொல்கிறாய் எனக் கேட்டார் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டே அய்யாசாமி.
உங்களுக்கு தேவையில்லாத கார்டுகளை ஓரமாக ஒதுக்கி வைத்துக்கொண்டு, கையிலிருந்து களைவது போல பலமான பிரச்சினைகளை, அதனால் ஏற்படும் கவலைகளை முதலில் துணிந்தும், விரைந்தும் களைய வேண்டும். ஏனெனில் அது உங்களுக்குதான் பிரச்சினை. ஆனால், அடுத்தவருக்கு வாய்ப்பாக அமையும்.
கார்டு சரியில்லை என ஆடாமல் ஸ்கூட் விடுவது பற்றிக் கேட்டார் அய்யாசாமி.
அது சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கும் திறனை வளர்க்கும்,
தேவையான கார்டுக்காக காத்திருப்பதும், சற்றே பொருத்தமான கார்டுகளை தேர்ந்தெடுத்து, ரிஸ்க் எடுத்து வரும் வாய்ப்புக்களுக்கு காத்திருந்து, அதை சமூகத்திடமிருந்தோ அல்லது நண்பர்களிடத்தோ பெற்று சரியாக பயன்படுத்துவது போன்றது.
உங்களுக்குத் தேவையான கார்டுகள் வந்தாலும், வராவிட்டாலும், அடுத்தவருக்கான வாய்ப்பை நீங்கள் வழங்குவீர்கள். அது
அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும், அடுத்தவருக்கு உதவுகின்ற மனபான்மை உங்களுள் வளரும்.
இப்படியாக, பரிமாறலும், தேடுதல்களும், விட்டுக்கொடுத்தலும், முடிவெடுத்தலும், மகிழ்வோடு மற்றவரோடு இனைதலும், புத்தி கூர்மையாவதும், தேவையானதை தன்னகத்தே வைத்துக்கொண்டு, தேவையற்றதைக் கழட்டி விட்டு, முன்னேறி வெற்றியை நோக்கிப் பயணித்து, இறுதியாக வெற்றி என டிக்ளேர் செய்துக்காட்டுவதுதான் ரம்மி விளையாட்டில் உள்ள வாழ்வியல் தத்துவங்கள் என்றாள்.
இத்தனை விஷயம் இருக்கா ரம்மியில் என வாய் பிளந்தனர் இருவரும்.
சூதாட்டமாக நினைத்து ஆடினால் சூதாட்டம், விளையாட்டாக நினைத்து ஆடினால் விளையாட்டு. சீரியஸாக புரிந்து ஆடினால், அது வாழ்க்கை என்றாள் ருக்கு.

Leave a comment
Upload