தொடர்கள்
தொடர்கள்
மிஸ்டர் ரீல்...! - ஜாசன்

20210728071510772.jpeg

பிரதமர் மோடியை மிஸ்டர் ரீல் பார்க்க போனபோது... தனது தாடியை நீவியபடி ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது மிஸ்டர் ரீல் பிரதமர் மோடியை பார்த்து... “அடுத்து எதை விற்பனை செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா” என்று கேட்க.. அதற்கு மோடி... “சென்னை - பீச் ஸ்டேஷன் முதல் செங்கல்பட்டு ஸ்டேஷன் வரை தற்போது ரயில்வே நஷ்டத்தில் இருப்பதால், விற்க முடிவு பண்ணின விஷயம்... ஸ்டாலின், தயாநிதி மாறன், சசிகலா மூன்று பேருக்கும் தெரிந்து போய்விட்டது. நான் வாங்கிக்கிறேன் என்று மூவரும் போட்டி போடுகிறார்கள். மொத்த விலை ஒரு லட்சம் கோடி என்ற சொன்னபோது... அவ்வளவுதானா என்கிறார் ஸ்டாலின். அதான்... இன்கம்டாக்ஸ், அமலாக்கத்துறை ஆசாமிகளை அனுப்பி, இந்த மூன்று பேரையும் விசாரிக்க சொல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றார்.

அப்போது மிஸ்டர் ரீல்... “சோனியா காந்திய பார்த்தீங்க இல்ல... உங்களை எதிர்த்து, 19 கட்சிய ஓண்ணு சேர்த்திருக்காங்க” என்று சொல்ல... அதற்கு பிரதமர் மோடி சிரித்தபடி... “என்னை எதிர்த்து இல்ல... பாரதிய ஜனதாவை எதிர்த்து, ஆர் எஸ் எஸ் இயக்கத்தை எதிர்த்து... அப்படித்தான் அவங்க பேசி இருக்காங்க” என்று சொல்ல... “அங்க என்ன பேசினாங்க என்ற உள் விவரம் எல்லாம் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டீங்க போல இருக்கு” என்று மிஸ்டர் ரீல் சொல்ல... அப்போது தாடியை நீவியபடி மோடி... “அவர்களைப் பொருத்தவரை பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் என்றால் மோடி, அமித்ஷா என்று நினைக்கிறார்கள்” என்று சொன்னார். உடனே மிஸ்டர் ரீல்... “அதை நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்” என்று சொன்னதும்... அப்போது பிரதமர் மோடி... “இதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்லை. அந்த 19 கட்சியில், ஆறு பிரதமர் வேட்பாளர், இரண்டு ஜனாதிபதி வேட்பாளர், 18 துணை பிரதமர் வேட்பாளர் இருக்காங்க” என்று சொல்ல...

உடனே மிஸ்டர் ரீல்... “பிரதமர் வேட்பாளர் தெரியும். துணைப் பிரதமர் வேட்பாளர் யார்” என்று கேட்க... அதற்கு மோடி... “ஏன் உங்க ஊர் ஸ்டாலின் கூட துணை பிரதமர் பதவிக்கு ஆசைப்படறரு” என்று சொல்ல... அதற்கு மிஸ்டர் ரீல்... “அமைச்சர் நேரு, அவர் வருங்கால பிரதமர்” என்றுதானே சொன்னார் என்று கேட்க... அதற்கு பிரதமர் மோடி... “அவர் முதல்ல துணை முதல்வராக இருந்தார், இப்ப முதல்வர் ஆயிட்டாரு. அதே மாதிரி முதல்ல துணைப் பிரதமர், அப்புறம் பிரதமர். அந்த கணக்கு எல்லாம் எனக்கு தெரியும்” என்று சொல்லி சிரித்தார்.

கூடவே என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம் மம்தா பானர்ஜி அந்த கூட்டணியில் இருக்கிற வரை எனக்கென்ன மனக்கவலை என்று இன்னும் பலமாக சிரித்தார்.

அப்போது மிஸ்டர் ரீல்... “அதெல்லாம் இருக்கட்டும்... ஒற்றுமையாய் இருக்கிற எதிர்க்கட்சியை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்” என்று கேட்க... அதற்கு மோடி... “இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இப்போதைக்கு அங்க நடக்கிறத வேடிக்கை பார்த்து, டைம் பாஸ் பண்ணலாம்னு” என் அரசியல் ஆலோசகர் அமித்ஷா சொல்லிட்டார். அப்போ அந்த டைம் பாஸ் தான்... “இந்த அரசாங்க சொத்துக்களை விற்கிறதா” என்று மிஸ்டர் ரீல் கேட்க...

“அந்த சொத்துக்களை வித்து, அந்தப் பணத்தை நாங்களா எடுத்துக் கொள்ள போகிறோம்... உங்கள மாதிரி ஏழைகளுக்கு பங்கு போட்டு தர போறோம்” என்று சொல்ல... அதற்கு மிஸ்டர் ரீல்... “ஏற்கனவே 15 லட்சம் அக்கவுண்ட்ல போடறேன்னு சொல்லிட்டு போடவே இல்லை” என்று சொல்ல... “நான் இந்தியில் சொன்னத, இந்தி தெரியாத நீங்க தப்பா புரிஞ்சுண்டா” நான் என்ன செய்யமுடியும் என்றார் மோடி.

“இனிமே குடும்பத் தலைவிக்கு 5000 ரூபாய் கூப்பன் தரப் போகிறோம். ஒருமாதம் புடவை கூப்பன், இன்னொரு மாதம் நகைக்கடை கூப்பன். இன்னொரு மாதம் மளிகைக் கடை கூப்பன், அடுத்த மாதம் பியூட்டி பார்லர் கூப்பன். இப்படி கூப்பன்களாக கொடுத்து, மகளிர் வாக்கு வங்கியை, தாமரை வாக்கு வங்கியாக மாற்றப் போகிறோம். அதே சமயம் அந்தப் பணம் எல்லாம் எங்கே போகும், கருப்பு பணமாக போகாது. வெள்ளை பணமாக தான் போகும். அவங்ககிட்ட வரியா வசூல் பண்ணிடுவோம். எங்க பணம், எங்ககிட்டயே திரும்பி வந்துவிடும், எப்படி எங்க திட்டம்” என்று சொல்ல...

அப்போது மிஸ்டரீல்... “இந்த குடும்பத்தலைவி திட்டம் ஸ்டாலின் சொன்னது. அந்தத் திட்டத்தை காப்பி அடிச்சு, கொஞ்சம் மெருகேற்றி இருக்கீங்க” என்று சொல்ல... அதற்கு பிரதமர் மோடி... “இருக்கலாம். ஆனால் அந்தத் திட்டத்தை தான், அவர் செயல்படுத்தவே இல்லையே” என்றார்.

உடனே மிஸ்டர் ரீல்... “வேற என்ன திட்டம் வச்சிருக்கீங்க கைவசம்” என்று கேட்க... அதற்கு பிரதமர் மோடி... “இன்னும் ரெண்டு, மூணு திட்டம் கைவசம் இருக்கு. அதை எல்லாம் சொன்னா, நீங்க இங்கேயே மயக்கமா விழுந்துடுவிங்க. அதான் யோசனையா இருக்கிறது” என்று சொல்ல... அப்போது மிஸ்டர் ரீல்... “பரவாயில்லை சொல்லுங்கள்” என்று கேட்க...

“கேஸ் விலை ஏறினால், மத்திய அரசு அநியாயம், அக்கிரமம் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இனிமேல் அதற்கு சான்சே இல்லை. எல்லோருக்கும் எரிவாயு இலவசம். அதேபோல உங்க முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு பஸ்ல இலவசம் சொல்லி, அவருக்கு ஓட்டு போட்ட அப்பாவி ஆம்பளைகளுக்கு துரோகம் பண்ணிட்டார். எனவே ஆண் வர்க்கத்தை பழிவாங்கிய ஸ்டாலினை கண்டிக்கிறார் போல், இனிமேல் ரயில் மற்றும் விமானத்தில் ஆண்களுக்கு இலவச பயணம்...

இதே மாதிரி பெட்ரோல், டீசல் விலை இரண்டு பைசா ஏறினால் கூட... நான் எதோ எண்ணெய் கிணறு வைத்துக்கொண்டு வியாபாரம் செய்வது போல் என்னை கண்டித்து போராட்டம் நடத்துகிறார்கள். இதற்கும் ஒரு முடிவு கட்டுவது என்று தீர்மானித்து விட்டேன். பத்து ரூபாய்க்கு 3 லிட்டர் பெட்ரோல் அப்படின்னு மத்திய அரசாங்கம் விற்பனை செய்யப் போகுது.

இதையெல்லாம் பிரச்சாரமா போய் மயிலை மாங்கொல்லையில் கூட்டம் போட்டு... ஸ்மிதா ராணி, நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன், குஷ்பூ என்று எல்லாம் மகளிரும் சேர்ந்து இந்த திட்டத்தை எல்லாம் அறிவிக்க போகிறார்கள்” என்றார்.

ஆனால் இதையெல்லாம் கேட்ட மிஸ்டர் ரீல், மயக்கம் எல்லாம் ஆகவில்லை... திடீரென அந்த 19 எதிர்க்கட்சித் தலைவர்களின் முகங்கள் நினைவுக்கு வர, உண்மையிலேயே மிஸ்டர் ரீல் மயக்கமாய் விழுந்துவிட்டார். அதன் பிறகு மோடி, அமித்ஷாவை அழைத்து தனி விமானத்தில் கொண்டுபோய் விகடகவி ஆபீஸில் விட்டுவிட சொல்ல... அமித் ஷாவும் அப்படியே செய்தார்.